தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் முதலீடு குறித்து டிரம்ப் கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா டிரம்ப் உள்பட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் சுந்தர் பிச்சை (கூகுள்), சத்யா நாதெல்லா (மைக்ரோசாஃப்ட்), மார்க் ஸூக்கர்பெர்க் (மெட்டா), சாம் ஆல்ட்மேன் (ஓபன்ஏஐ), டிம் குக் (ஆப்பிள்) ஆகியோருடன் அதிபர் டிரம்ப் கலந்துரையாடினார். இந்த விருந்தின்போது, அமெரிக்காவில் அந்நிறுவனங்களின் முதலீடு குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பினார்.
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம், நீங்கள் எவ்வளவு முதலீடு செய்யவுள்ளீர்கள்? அது ஒரு பெரிய தொகை என்று எனக்கு தெரியும் என்று டிரம்ப் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த டிம் குக், அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாகக் கூறினார். மேலும், அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்ததற்காக டிரம்ப்புக்கு நன்றியும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க்கிடம் முதலீடு குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பினார். மெட்டாவும் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்யவிருப்பதாகக் கூறினார்.
கூகுள் முதலீடு குறித்து பதிலளித்த சுந்தர் பிச்சை, வடக்குப் பகுதிகளில் 100 பில்லியன் டாலர் செய்கிறோம். அமெரிக்காவில் அடுத்த 2 ஆண்டுகளில் 250 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளோம் என்று தெரிவித்தார்.
மைக்ரோசாஃப்ட்டின் முதலீடு 75 பில்லியன் முதல் 80 பில்லியன் டாலர் என்று அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா கூறினார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன், வெளிநாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தி செய்து, அவற்றை அமெரிக்காவில் விற்பனை செய்வதை ஏற்க முடியாது என்று அதிருப்தியுடன் எதிர்ப்பும் தெரிவித்தார்.