நகைச்சுவை நடிகை கோவை சரளாவுக்கு இன்று பிறந்த நாள். தமிழ் சினிமாவில் பல நடிகைகள் காமெடியில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தாலும் ஆச்சி மனோரமாவுக்கு அதில் தனியிடம் ஆண்டு. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர் ஆச்சி. அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் கோவை சரளா. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 750க்கும் அதிகமான படங்களில் காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.
கோவையை சேர்ந்தவர் என்பதால் தனது பெயருக்கு முன்னாள் ஊர் பெயரை சேர்த்துக்கொண்டார் சரளா. சின்ன வயதில் சினிமா ஆர்வத்தில் எம்ஜிஆரிடம் பேச, அவரோ முதல்ல படி, பின்னர் நடி என்று அட்வைஸ் செய்திருக்கிறார். பின்னர் எம்ஜிஆரால் தனது கலையுலக வாரிசாக அழைக்கப்பட்ட கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்தில் நல்ல ரோலில் அறிமுகம் ஆனார். இத்தனைக்கும் அவர் வயதுக்கும், அந்த ரோலுக்கும் சம்பந்தம் கிடையாது. அந்த படம் ஹிட்டாக, பின்னர், அவர் சினிமா வாழ்க்கை ஏறுமுகம்.கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியானர்.
நுாற்றுக்கணக்கான படங்களில் மாறுபட்ட காமெடி வேடங்களில் நடித்து, நம்மை சிரிக்க வைத்தார். பல படங்களில் வயிறு வலிக்கவும் சிரிக்க வைத்தார். அனைத்து காமெடி நடிகர்களும் ஜோடியாக நடித்தார். ஒரு கட்டத்தில் வடிவேலு பிரச்னைகளால் அவருக்கு தொய்வு விழ, சிறிதும் சளைக்காமல் தெலுங்கு பக்கம் போய் கலக்கினார். பல டிவி நிகழ்ச்சிகளில் வந்தார். காஞ்சனா படத்தின் மீண்டும் ரீ என்ட்ரி ஆகி, இப்போது வரை நடித்துக்கொண்டிருக்கிறார். பெரிய குடும்பத்தை தாங்கியதால், அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்போது ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு இமயமலை, காசி, பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று, அந்த அனுபவங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இப்போது நீண்ட இடைவெளிக்குபின் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். சுந்தர்.சி அந்த படத்தை இயக்கி உள்ளார். காஞ்சனா 4 அடுத்த பாகமும் உருவாகி வருகிறது. அதிலும் தன் பங்கிற்கு கலக்கி இருக்கிறாராம்.