No menu items!

மிதக்கும் நெல்லை துடிக்கும் தூத்துக்குடி! – என்ன நடக்கிறது?

மிதக்கும் நெல்லை துடிக்கும் தூத்துக்குடி! – என்ன நடக்கிறது?

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பெய்த சுமார் 50 சென்டிமீட்டர் மழையின் பாதிப்பில் இருந்தே தமிழகம் இன்னும் மீளவில்லை. அதற்கு முன்பே தென் மாவட்டங்களை அதைவிட பயங்கரமாக தாக்கி இருக்கிறது மழை. இம்முறை பல இடங்களில் 90 செண்டிமீட்டருக்கு மேல் பெய்த மழையால் தென் தமிழகமே கலங்கிப் போயிருக்க, அப்பகுதிகளில் இன்னும் ரெட் அலர்ட் தொடரும் என்று பயம்காட்டி இருக்கிறது வானிலை ஆய்வு மையம்.

வளிமண்டல சுழற்சியால் பெய்த கனமழை

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் இன்று காலை வரை பரவலாக பலத்த மழை பெய்த்து. வரலாறு காணாத இந்த அமழையால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மக்கள் தவித்து வருகிறார்கள். பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மக்கள் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதன் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியர் காலனியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. திருநெல்வேலி டவுன் வ.உ.சி. தெரு, பாரதியார் தெரு, பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் கடனாநதி அணை முழுமையாக நிரம்பியது. அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில், கன்னியாகுமரியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால், பரிதவித்த மக்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். கன்னியாகுமரி, திற்பரப்பு உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மழையால் முடங்கின. கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

ஓராண்டு சராசரியைவிட அதிகம்

இந்த மழை தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, “நெல்லை, தூத்துக்குடி உள்பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது தூத்துக்குடி மாவட்டத்தின் ஒராண்டு சராசரி மழை அளவைவிடவும் மிக மிக அதிகம்.

மழையால் குடியிருப்புப் பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், மாவட்ட நிர்வாகத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நெல்லையைப் பொறுத்தவரை மழை நீர் சீக்கிரம் வடிந்துவிடும். ஆனால் தூத்துக்குடியில் மழை நீர் வடிய தாமதம் ஆகலாம். வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

கூடுதலாக 4 அமைச்சர்கள் நியமனம்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மீட்பு பணிக்காக அமைச்சர்கள் கேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஞானதிரவியம் ஆகியோர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது கூடுதலாக அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், பி மூர்த்தி ஆகியோரை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

உதவி தேவைப்படும் பொதுமக்கள் 8148539914 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், @tn_rescuerelief என்ற எக்ஸ் தள முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் தொடர்கிறது

தென் மாநிலங்களை மழை துவம்சம் செய்துவரும் சூழலில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், “டிசம்பர் 14 ஆம் தேதி முதல் நேற்று வரைக்கும் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்தோம். நேற்று காலை அதி கனமழைக்கான வாய்ப்பு குறித்தும் எச்சரிக்கப்பட்டது. வளிமண்டல சுழற்சியில் இருந்து இதுவரை இந்த அளவுக்கு மழை எதிர்பார்த்தது கிடையாது. இது மேக வெடிப்பு கிடையாது. ஒருமணி நேரத்தில் 10 செ.மீக்கும் மேல் மழை பெய்தால் மேக வெடிப்பு எனலாம். ஆனால், நேற்று நாள் முழுவதும் மழை பெய்துள்ளது. இது அதி கனமழை. எனக்கு தெரிந்தவரை இந்த அளவுக்கு அதி கனமழை பரவலாக அனைத்து இடங்களிலும் பெய்தது இல்லை.

அடுத்து வரும் இரண்டு தினங்களைப் பொறுத்தவரையில் தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழைபெய்யக் கூடும். அடுத்த 24 மணி நேரத்துக்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடர்கிறது. மேலும், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் ராமநாதபுரத்த்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...