இந்தாங்க, வச்சுக்கங்க என்று தான் படித்த பல்கலைக்கழகத்துக்கு தூக்கிக் கொடுத்திருக்கிறார் கோடீஸ்வரர் நந்தன் நிலகேனி. கொஞ்சம் பணம் அல்ல, 315 கோடி ரூபாய்.
மும்பை ஐஐடிதான் அந்த அதிர்ஷ்டக்கார பல்கலைக்கழகம், அங்குதான் நந்தன் படித்திருக்கிறார். ஏற்கனவே அந்தப் பல்கலைக்கழகத்துக்கு 85 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். மொத்தம் 400 கோடி ரூபாய்.
நானூறு கோடி ரூபாயை தூக்கிக் கொடுக்கிறார் என்றால் அவரிடம் எவ்வளவு பணம் இருக்க வேண்டும் என்ற கேள்வி உடனே எழும். உண்மை. இன்றைய தினத்தில் அவரது சொத்து மதிப்பு 260 கோடி டாலர். இந்திய ரூபாயில் சொல்ல வேண்டுமென்றால் 21 ஆயிரம் கோடி ரூபாய்.
அதிக பணம் சம்பாதித்து கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் சிலருக்குதான் அந்தப் பணத்தை மற்றவர்கள் வாழ்க்கை சிறக்க நன்கொடையாக கொடுக்க முடியும். நந்தன் நிலகேனி அப்படிப்பட்டவர். 400 கோடி ரூபாயை தான் படித்த பல்கலைக்கழகத்துக்கு கொடுத்திருக்கிறார்.
இந்தியாவின் பிரமாண்ட ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸிசின் நிறுவனர்களில் ஒருவர் நந்தன். இவரும் நாராயண மூர்த்தி போன்ற மற்ற ஐந்து பேர்களுடன் இணைந்து இன்ஃபோசிஸ் நிறுவனம் துவக்கப்பட்டது. 80களில் துவக்கப்பட்ட நிறுவனம் இன்று உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று.
நந்தன் நிலகேனி பிறந்தது கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில். அவரது தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் மேனேஜர். அம்மா பள்ளி ஆசிரியை. மத்திய வர்க்க வாழ்க்கை. நந்தனின் மிகப் பெரிய பலம் படிப்பு. மிக நன்றாக படிப்பார்.
1978ல் அவர் ஐஐடி மும்பையில் படித்து முடித்து ஒரு தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு விண்ணப்பிக்கிறார். அங்கு அவரை நேர்காணல் செய்தது நாராயண மூர்த்தி. பணியில் சேருகிறார் நந்தன். அங்கு இருவருக்கு நல்ல நட்பு ஏற்படுகிறது. இவர்களுடன் மேலும் சிலர் இணைந்து 1981ல் இன்ஃபோசிஸ் துவக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனங்கள் அதிகம் இல்லாத அந்தக் காலக்கட்டதில் இன்ஃபோசிஸ் ஒரு முன்னோடி. கம்ப்யூட்டர் துறை வேகமாக வளரும்போது இன்ஃபோசிஸ் நிறுவனமும் மிக வேகமாக வளர்ந்தது. இன்று இன்ஃபோசிஸ் ஒரு சரித்திரமாக மாறியிருக்கிறது. நந்தன் நிலகேனி கொடை வள்ளலாக உருவாகியிருக்கிறார்.
“ஐஐடி மும்பையுடன் எனது தொடர்பு ஐம்பது வருடங்களை தொட்டதன் நினைவாக, முன்னாள் மாணவனாக 315 கோடி ரூபாய் கொடுக்கிறேன். இதை என்னால் கொடுக்க முடிந்ததற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்’ என்று மூன்று வரி ட்விட்டில் தன்னுடைய நன்கொடை குறித்து அறிவித்திருக்கிறார் நந்தன்.
இந்த நந்தனுக்கு இன்ஃபோசிஸ் மட்டும் சாதனையல்ல. 2009ல் இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து விலகிய நந்தன் தன் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கினார்.
இன்று நாம் எல்லோரும் பயன்படுத்தும் ஆதார் அட்டைகளின் மூல காரணம் இவர்தான். Unique Identification Authority of India என்ற மத்திய அரசின் தலைவராக பணியாற்றி ஆதார் எண்ணை இந்திய மக்கள் அனைவருக்கும் கொண்டு வந்தார்.
2017ல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தில் சிக்கல் வந்தபோது மீண்டும் இன்ஃபோசிஸ் பொறுப்புக்கு வந்து சிக்கல்களை சரி செய்தார். நந்தனும் ரத்தன் டாடாவும் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு சிறு கடன்கள் வழங்க அவந்தி ஃபைனான்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தியிருக்கிறார்கள்.
Good good