பாடகி கே.எஸ்.சித்ராவுக்கு அறிமுகம் தேவையில்லை. 47 ஆண்டுகளாக இசைத்துறையில் பயணிக்கிறார். இதுவரை பல மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களை பாடியிருக்கிறார். 6 தேசியவிருது வாங்கியிருக்கிறார். பிப்ரவரி 8ம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். அது குறித்தும், தனது பாடல்கள், திரை அனுபவம் குறித்தும் பேசியுள்ளார். அதிலிருந்து…
‘‘நான் பல மொழிகளில் பாடிவிட்டேன். ஆனாலும் குஜராத்தியில் பாடவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. அந்த காலத்தில் இசைக்கருவிகள் பின்னணியில் பாடல் பதிவு நடந்தது. இப்போது மாறிவிட்டது. காலத்துக்கு தக்கப்படி மாறிக்கொள்ள வேண்டியதுதானே. நான் எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும் ஆட்டோகிராப் படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் கொஞ்சம் ஸ்பெஷல். வாழ்வில் தோற்றவர்களுக்கு, மனதளவில் துவண்டு போய் இருந்தவர்களுக்கு அந்த பாடல் உற்சாகத்தை கொடுத்தது. அது குறித்தும் பலரும் என்னிடம் நேரில் சொல்லியிருக்கிறார்கள். அந்த பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர் பரத்வாஜ், பாடலாசிரியர் பா.விஜய், அந்த படத்தின் இயக்குனர் சேரனுக்கு நன்றி
இளையராஜாவிடம் நிறைய கற்று இருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வரும்படி அவருக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறோம். எஸ்பிபியுடன் இணைந்து பல நாடுகளில் கச்சேரி செய்து இருக்கிறேன். அந்த சமயத்தில் அவருக்கு ஓட்டல்களில் உடனே ரூம் கிடைத்துவிடும். நாங்கள் காத்திருப்போம். ஆனால், அவரோ என் டீமுக்கும் ரூம் ஒதுக்கியபின்னர்தான் நான் செல்வேன் என எங்களுடன் வரவேற்பு அறையில் காத்திருப்பார். பாடகி எஸ்.ஜானகி எனக்கு அம்மா மாதிரி. அவர் கையில் எனக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு இருக்கிறார்.
என்னை சின்னக்குயில் என அழைத்தார்கள். இப்போது நான் பெரிய குயில் ஆகிவிட்டேன். இன்றைய காலகட்டத்தில் ஸ்ரேயா கோஷல், சின்மயி, ஸ்வேதா உட்பட பலர் சின்ன குயி்ல்மாதிரி நன்றாக பாடுகிறார்கள். சினிமாவில் நடிக்க எனக்கும் அழைப்பு வந்தது. 2 படத்தில் அம்மாவாக நடிக்க அழைத்தார்கள். எனக்கு நடிப்பு செட்டாகாது என்று சொல்லி மறுத்துவிட்டேன். கர்நாடக சங்கீதம் பாடிக்கொண்டு இருந்தேன். சில கச்சேரிகள் செய்தேன். ஆனால், அதற்கும், சினிமா பாடலுக்கும் சில பிரச்னைகள் வந்தது. குரலில் மாற்றம் வர, அதை நிறுத்துவிட்டேன். இதுவரை இசையமைப்பாளர் ஆகவில்லை. இசையமைப்பாளர் பணி என்பது பெரிது. சில ஸ்லோங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். மற்றபடி, அதில் கவனம் செலுத்தவில்லை. நானும் பல நல்ல பாடல்களை மிஸ் பண்ணியிருக்கிறேன். இளையராஜாசார், ஏ.ஆர்.ரகுமான்சார் பாடல்களும் அதில் அடக்கம். நடிகர் தனுஷ், சிம்பு சில நடிகர்கள் அவங்க படங்களில் பாடுறாங்க. அது தவறில்லை. அவரவர் படங்களில் பாடுகிறார்கள். நமக்கான வாய்ப்பு கண்டிப்பாக வரும்.’’