No menu items!

த வாரியர் – சினிமா விமர்சனம்

த வாரியர் – சினிமா விமர்சனம்

தான் கற்றுக்கொண்ட வித்தைகளையெல்லாம் ‘அஞ்சான்’ படத்தில் காட்டிய இயக்குநர் லிங்குசாமி நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்கியிருக்கும் படம் ‘த வாரியர்’.

மதுரையில் ஒலிக்கும் ஒரே வார்த்தை ‘குரு’. 14 வயதிலேயே அப்பாவைக் கொன்றவரின் தலையை வெட்டி, பழிக்குப்பழி வாங்கிய பின்னணியுள்ள பெரிய தாதா. இப்பேர்பட்ட தாதாவின் வில்லத்தனங்களுக்கு முடிவு கட்ட ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டர், ஐ.பி.எஸ் போலீஸ் அதிகாரியாக அவதாரம் எடுப்பதுதான் வாரியர் படத்தின் ஒன்லைன்.

ஒரு ஆக்‌ஷன் படத்திற்கான அதிரிபுதிரியான கான்செப்ட்டாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால் மன்னிக்கவும். எம்.பி.பி.எஸ் படித்த ஹீரோ, ஐ.பி.எஸ் ஆனதும் க்ரிப்பாக இருக்கும் என்று நினைத்தால், திரைக்கதையோ படம் பார்க்கும் நம்மை டயர்ட்டாக செய்து ட்ரிப்ஸ் ஏற்ற வைத்துவிடுகிறது.

தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்திருக்கும் ராம் பொத்னினேனி, தமிழ் சினிமாவில் ராம் என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறார். ஆட்டம், ஆக்‌ஷன் எல்லாம் தெலுங்கு சினிமா புண்ணியத்தில் இவரிடம் அமோகமாக இருக்கிறது. இங்கே வளர்ந்தவர் படித்தவர் என்பதால் இவர் சொந்தக் குரலிலேயே பேசி நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க ஆசைப்பட்டு இங்கே வந்திருக்கிறார். நன்றாக நடித்திருக்கிறார்.

அடுத்த அறிமுகம் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு சினிமாவில் இப்போது இவர் ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறார். ஆர்ஜே விசில் மகாலட்சுமியாக நடித்திருக்கும் கீர்த்திக்கு குறுகுறுப்பான முகம். ’புல்லட்’ பாடலில் ஜில்லெட் ப்ளேட் போல மனதிற்குள் ஊடுருவி விடுகிறார். அநேகமாக இவருக்கு இங்கே தனியாக ஒரு கால்ஷீட் மேனேஜர் தேவைப்படலாம். ஆனால் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் இவரது கெட்டப் எப்படியிருக்க போகிறதோ என்ற கமெண்ட்களை திரையங்கில் கேட்க முடிந்தது.

ஆதி வில்லன். அதனாலேயெ அவரை அதிகம் சவுண்ட் கொடுக்க வைத்திருக்கிறார்கள். வில்லன் என்றால் சவுண்ட் கொடுக்க வேண்டும் என்ற ஃபார்மூலாவை லிங்குசாமி இன்னும் மறக்கவில்லை போலும். நதியாவிற்கு பல காட்சிகள் இல்லையென்றாலும், அம்மாவாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதை, திரைக்கதை சமாச்சாரங்கள் வில்லனுக்கு முந்திக்கொண்டு வாரியரை பழிவாங்கிவிட்டது. இசை, ஒளிப்பதிவு, சண்டைக்காட்சி, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு போன்ற தொழில்நுட்ப கலைஞர்கள்தான். டிஎஸ்பி-யின் இசையில் கலக்கும் ‘புல்லட்’ பாடலுக்காகவே திரையரங்குகளுக்கு கூட்டம் வரலாம். திரையரங்கே அதிர்கிறது.

சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகளில் விழும் ஒவ்வொரு அடியும், குத்தும் நம் மேல் விழுவதுப் போன்ற உணர்வை உருவாக்குகிறது. ஒரு ஆக்‌ஷன் படத்திற்கான ஒலிப்பதிவு, பரபரக்கிற எடிட்டிங் எல்லாம் ஒரு கமர்ஷியல் படத்திற்கான தரம்.

இரு மொழியில் படமெடுக்கும் போது, ஒரு சில அட்ஜஸ்ட்மெண்ட்கள் இருப்பது வழக்கம்தான். அதற்காக கீர்த்தி ஷெட்டிக்கு லிப் சிங்க் இல்லாமலே காட்சிகளைச் சுருட்டிக் கொடுத்தால் எப்படி?

முன்பின் தெரியாத ஆதிக்கும் ராமுக்கும் முட்டிக்கொள்ள, ஜல்லிக்கட்டு நடக்கிறது. அதற்கு தலைமை தாங்கும் ஆதியை யார் என்று கூட பார்க்கவோ தெரிந்து கொள்ளவோ ஆர்வமில்லாமல், மைதானத்திற்கு வெளியே இருந்து கொண்டு ஊசி போட்டு கொண்டிருக்கிறார் ராம். ஆதியின் மாடு சீறிப்பாய்ந்து வர கீர்த்தி ஷெட்டியை நகர்த்திவிட்டு, பைக்கில் ஸ்பீட் ப்ரேக்குகளை கடக்கிறார்கள்.

இங்கேயாவது பரவாயில்லை. தெலுங்கு சினிமாவில் இது ஒரு பவர்ஃபுல் ப்ளாக். அதை மிஸ் பண்ணிவிட்டார்களே என்று நினைக்கத் தூண்டுகிறது. சண்டைக்காட்சிகளில் ராமின் பைக், கார் நம்பர் ப்ளேட்டுகளில் தெலுங்கானா தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன் மாறி மாறி வருகிறது. முடிந்தளவிற்கு இதை தவிர்த்திருக்கலாம். எம்.பி.பி.எஸ். டாக்டர் ஒரு வெறியோடு போய் இரண்டே வருடத்தில் ஐ.பி.எஸ். ஆகிறார் என்பதை கூட கமர்ஷியல் சினிமா என்று ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அந்த இரண்டு வருடமும் தன்னை காதலிக்க ஆரம்பித்திருக்கும் கீர்த்தி ஷெட்டிக்கு தெரியாமல் தலைமறைவு ஆவதும், பின்னர் அதே பழைய ஃபீல் உடன் காதலிக்க ஆரம்பிப்பதும் காவியக் காதலையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.

தேர்தலுக்கு முன்பாக ஆதியை அவரது கட்சிலேயே எதிர்க்கும் ஒருவர் டிவியில் பேட்டி கொடுக்கிறார். உடனே டிவியை ஆஃப் செய்துவிட்டு நேராக அவரது வீட்டிற்கு வந்து அந்த பிரமுகரை ஆதி கொன்றுவிட்டு, மறுநாள் வேட்டி சட்டையை மாற்றிவிட்டு நாமினேஷன் செய்ய கிளம்புகிறார்.

இத்தனைக்கும் வில்லனுக்கு அரசியலில் செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டுவதற்கு கூட ஒரு சீன் வைக்கவில்லை. இப்படி திரைக்கதையில் ஆங்காங்கே டிங்கரிங் தேவைப்படுவதை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். அதனால் கமர்ஷியல் படம் பார்க்கும் போது இருக்கும் அந்த பரபரப்பு மிஸ்ஸிங்.

க்ளைமாக்ஸில் ராமை அடித்து தொங்கவிட்ட அதே இடத்தில் ஆதியை ராம் தொங்கவிடுவார். உண்மையில் படம் முடியும்போது, காசு கொடுத்து நேரம் செலவு செய்து எதிர்பார்புடன் படம் பார்க்க வந்த ரசிகர்களை அதே ஸ்பாட்டில் தொங்க விட்டுவிட்டார்கள்.

வாரியர் – 1990 களில் வந்திருக்க வேண்டியவர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...