வெளிவருவதற்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம். சுதிப்தோ சென் இயக்கத்தில் ஆதா சர்மா, யோஹிதா பிஹானி, சோனியா பலானி நடித்திருக்கிறார்கள். மே 5-ம் தேதி ரிலீஸ். வலதுசாரி கட்சிகளும் அமைப்புகளும் கேரளா ஸ்டோரிக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறார்கள். கேரள முதல்வர் உள்ளிட்ட இடதுசாரிகள், காங்கிரஸ்காரர்கள், சிறுபான்மை அமைப்பினர் படத்தை எதிர்க்கிறார்கள். இந்த ஆதரவுக்கும், எதிர்ப்புக்கும் காரணம் சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர்.
‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் கதை என்ன என்பது ட்ரெய்லரிலே தெரிந்துவிடுகிறது.
கேரளாவில் உள்ள இந்து பெண் ஒரு இஸ்லாமிய இளைஞரை காதலித்து மணக்கிறார். திருமணத்துக்குப் பிறகு அந்த பெண் ஐஎஸ் அமைப்பில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு, வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறாள். அங்கு தீவிரவாத பயிற்சி முகாம்களில் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கும் அந்தப் பெண், தன் கதையைச் சொல்வதுபோல் இந்த டிரெய்லர் உள்ளது. அந்த பெண்ணைப்போல் மேலும் 2 பெண்கள் லவ் ஜிஹாத் என்ற பெயரில் இஸ்லாமிய தீவிரவாதிகளாக மாற்றப்பட்ட சம்பவங்களும் இந்த டிரெயிலரின் வருகிறது. கேரளா முழுக்க இப்படி இந்து மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் பலர் ஏமாற்றப்பட்டு வருவதாக படத்தின் ட்ரெய்லரில் வசனங்கள் வருகின்றன.
எல்லாவற்றுக்கும் உச்சமாக கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்திருப்பதாக டிரெயிலரில் இருந்த விளக்கமும், இன்னும் சில ஆண்டுகளில் கேரளா ஒரு முஸ்லிம் மாநிலமாக மாறும் என்று முன்னாள் கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் குறிப்பிட்டுள்ளதாக சொல்லும் வசனமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மத விரோதத்தை தூண்டும் வகையில் இப்படம் இருப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் பின்னணியில் வலதுசாரி சங் பரிவார் அமைப்புகள் இருப்பதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். ’இந்தப் படத்தை தடை செய்யுங்கள் என்று சொல்ல மாட்டேன், கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக கருத்து சுதந்திரத்தை தடுக்க முடியாது. ஆனால் இந்தப் படம் நிஜத்தை திரித்துக் காட்டுகிறது என்று கேரள மக்கள் உரக்க சொல்வதில் தவறில்லை’ என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் விமர்சித்துள்ளார்.
32 ஆயிரம் கேரளப் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாராவது நிரூபித்தால் 1 கோடி ரூபாயை வழங்குவதாக முஸ்லீம் யூத் லீக் அமைப்புத் தெரிவித்திருக்கிறது.
இப்படி ஒருபுறம் வரிசையாக எதிர்ப்புகள் வர, 32 ஆயிரம் கேரளப் பெண்கள் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்திருப்பதாக டிரெயிலரின் யூடியூப் விளக்கத்தில் இருந்த வரியை நீக்கியிருக்கிறார் படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென். மேலும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலேயே இப்படத்தை எடுத்திருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
“லவ் ஜிஹாத்தைப் பற்றி எங்கள் படம் எதையும் சொல்லவில்லை. எந்த மதத்துக்கு எதிரான கருத்துகளையும் இப்படத்தில் வைக்கவில்லை. தனிப்பட்ட 3 பெண்களின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து மட்டுமே இப்படத்தை எடுத்துள்ளோம். காதல் என்ற பெயரில் திருமணத்துக்குப் பிறகு மதமாற்றம் செய்யப்பட்ட பெண்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதைத்தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம்” என்று மலையாள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சொல்லியிருக்கிறார் சுதிப்தோ சென். இந்த படத்தை எடுக்க பாரதிய கட்சியிடம் இருந்தோ, மத்திய அரசிடம் இருந்தோ எந்த உதவியையும் பெறவில்லை என்றும் அவர் மறுத்திருக்கிறார்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கர்நாடக மாநில தேர்தலை எதிர்கொள்ள இந்த படத்தை பயன்படுத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகவே தேர்தலுக்கு முன் மே 5-ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்வதாகவும் கூறப்படுகிறது. திட்டமிட்டபடி இப்படம் ரிலீஸானால் மதரீதியான விவாதம் எழும், இதைப் பயன்படுத்தி இந்து ஆதரவு வாக்குகளை பாஜக பெறும் என்பது ஒரு சிலரது கருத்தாக உள்ளது.
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே அக்கட்சிக்கு சாதகமான கதை அம்சங்கள் கொண்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ’சாம்ராட் பிருத்விராஜ்’, ’பிஎம் நரேந்திர மோடி’, ’தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி உள்ளன. அதுபோன்ற படங்களில் ஒன்றாக’தி கேரளா ஸ்டோரி அமைந்திருக்கிறது.