உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே இங்கிலாந்தை துவைத்து எடுத்திருக்கிறது நியூஸிலாந்து. அப்படி துவைத்து எடுத்ததில் ஒரு இந்தியருக்கு பெரும் பங்கு இருக்கிறது என்பது நமக்கெல்லாம் பெருமை. அந்த இந்தியர் ரச்சின் ரவீந்திரா.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெறும் 96 பந்துகளில் 123 ரன்களை விளாசியிருக்கிறார் ரச்சின் ரவீந்திரா. இதன்மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிவேகத்தில் சதம் அடித்த நியூஸிலாந்து வீர்ர் என்ற சாதனையை ரச்சின் படைத்துள்ளார். அவரது சதத்தின் உதவியால் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது நியூஸிலாந்து. அதிலும் 82 பந்துகளை மீதம் வைத்து இந்த ஸ்கோரை எட்டியிருக்கிறார்கள். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் யார் இந்த ரச்சின் ரவீந்திரா என்ற கேள்வி கிரிக்கெட் உலகில் எழுந்துள்ளது.
ரச்சின் ரவீந்திராவின் பூர்வீகம் இந்தியா. இவரது அப்பா ரவி கிருஷ்ணமூர்த்தி பெங்களூரு நகரைச் சேர்ந்தவர். பின்னர் வேலைக்காக நியூஸிலாந்துக்கு சென்று அங்கு செட்டில் ஆகிவிட்டார். அவர் அங்கேயே தங்கிவிட்ட நிலையில் 1999-ம் ஆண்டு வெலிங்டன் நகரில் ரச்சின் பிறந்திருக்கிறார்.
ரவி கிருஷ்ணமூர்த்தி ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். அதிலும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் என்றால் அவருக்கு உயிர். அதனால் தனது மகனுக்கு தன் இரு கனவு நாயகர்களான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் பெயர்களை இணைத்து ரச்சின் என்று பெயர் வைத்துள்ளார். அப்படி பெயர் வைப்பதுடன் நிற்காமல் அவருக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பயிற்சியும் கொடுத்திருக்கிறார்.
ரவி கிருஷ்ணமூர்த்தி, நியூஸிலாந்தில் ஒரு கிரிக்கெட் கிளப் வைத்திருக்கிறார். அந்த கிளப்பிலேயே ரச்சின் சிறுவயதில் பயிற்சி பெற்றார். அந்த பயிற்சியின் பலனாக நியூஸிலாந்தில் பல்வேறு பிரிவில் நடந்த போட்டிகளில் ஆடியிருக்கிறார் ரச்சின்.
தனது கிரிக்கெட் கிளப்பில் பயிற்சி பெறும் மாணவர்களை வருடம் ஒருமுறை இந்தியாவுக்கு கொண்டுவந்து பயிற்சி ஆட்டங்களில் ஆடவைப்பது ரவி கிருஷ்ணமூர்த்தியின் வழக்கம். அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு அவர்களை இந்தியாவுக்கு கொண்டுவந்தார். அவர்கள் இந்தியாவில் இருந்தபோதுதான் இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இதில் சூப்பர் ஓவரில் சமன் செய்தும் பவுண்டரிகளின் எண்ணிக்கையால் இங்கிலாந்து ஜெயிக்க, ரச்சின் நொந்துபோனார். இரவெல்லாம் அதற்காக அழுதிருக்கிறார்.
இந்த உலகக் கோப்பையில் அதற்கு பழிவாங்க அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கேன் வில்லியம்ஸன் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு பதிலாக ரச்சினை களம் இறக்கியிருக்கிறது நியூஸிலாந்து. கடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு பழிவாங்கும் நோக்கத்துடன் ரச்சின் விளாச, இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்துள்ளது. ஆட்ட நாயகனாக ரச்சின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.