‘தாயுமானவர் திட்டம்’ மக்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுப்பது, இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
‘தாயுமானவர் திட்டம்’ தொடங்கிவைக்கப்படுவது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவு மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு: வணக்கம்! நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்! அந்த வரிசையில், என்னுடைய மனதிற்கு பிடித்த திட்டமாக உருவாகியிருப்பதுதான், இந்த தாயுமானவர் திட்டம்!
கூட்டுறவுத் துறை சார்பில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! இப்படி, அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுப்பது, இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி!
ஒரு திட்டத்தை அறிவிப்பதோடு, கடமை முடிந்துவிடுவதாக நாம் நினைப்பதில்லை! அந்த திட்டத்தின் பலன் – பயன், கடைக்கோடி மனிதரையும் சென்று சேருகிறதா என்று கண்காணிப்பதையும் கடமையாக நினைக்கிறேன்! அப்படி, வயது முதிர்ந்தோரும் – மாற்றுத் திறனாளிகளும் ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதில் ஏற்படும் சிரமத்தை உணர்ந்து, இந்த திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்!
இந்தத் திட்டத்தை 34 ஆயிரத்து 809 நியாய விலைக் கடைகளில் செயல்படுத்த போகிறோம்! 70 வயதுக்கு மேற்பட்ட 20 இலட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் – ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத் திறனாளிகள் என்று 21 இலட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் இந்த திட்டத்தால் பயனடைய போகிறார்கள்! ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் குடிமை பொருட்கள் உங்கள் வீடு தேடி வந்துவிடும்! இதற்காக கூட்டுறவுத் துறைக்கு ஆகப்போகும் 30 கோடியே 16 இலட்சம் ரூபாயை கூடுதல் செலவாக கருதாமல் – மக்களுக்கு செய்யும் உயிர்காக்கும் கடமையாக நாங்கள் நினைக்கிறோம்! இது கூட்டுறவுத் துறையின் மிகப்பெரிய சேவை! அந்தத் துறை அதிகாரிகள், அலுவலர்கள், கடை விற்பனையாளர்கள் செய்யப் போகும் மிகப்பெரிய கடமை!
தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரத்து 328 நியாய விலைக் கடைகள் இருக்கிறது! இதில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரத்து 394 புதிய நியாய விலைக் கடைகளை திறந்திருக்கிறோம்! தலைவர் கலைஞர் வழியில், இந்த நியாய விலைக் கடைகளை நாம் முறையாக – சிறப்பாக நடத்துவதால்தான், தமிழ்நாடு இன்றைக்கு பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக இருக்கிறது! இந்த ரேசன் கடைகளின் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்க முயற்சிகள் எடுத்திருக்கிறோம்!
இந்த நேரத்தில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலவலர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்பது – இந்த திட்டத்தின் நோக்கம் நூறு விழுக்காடு நிறைவேறும் வகையில் உங்களின் பணி அமைய வேண்டும்!