பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 3 தீவிரவாதிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் டிஜிபி சங்கர் ஜிவால் கூறியதாவது: தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், கூட்டாளிகளான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் சிக்கினர்.
இவர்களுடன் தொடர்புடைய தீவிரவாதி நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்கை காவல்துறையினர் தேடி வந்தனர். முன்னதாக இவர், 2012-ல் வேலூர் மருத்துவர் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு மற்றும் 2013-ல் பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த வழக்கு உட்பட மேலும் பல வழக்குகளில் முக்கியப் பங்காற்றினார்.
அவர் மீது தமிழகத்தில் 5 வழக்குகளும், கேரளாவில் 2 வழக்குகளும், கர்நாடகா, ஆந்திராவில் தலா ஒரு வழக்குகளும் உள்ளன. இதனால், அபுபக்கர் சித்திக்கை அம்மாநில போலீஸாரும், மத்திய புலனாய்வு அமைப்புகளும் 30 ஆண்டுகளாகத் தேடி வந்தன. இவர் உட்பட மேலும் சிலரை கைது செய்ய ‘ஆபரேஷன் அறம்’ என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் தேட தொடங்கினோம்.
தீவிரவாதி அபுபக்கர் சித்திக்கின் பழைய புகைப்படங்களை ஏ.ஐ. தொழில்நுட்பம் மற்றும் தொழில் நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநில போலீஸார் உதவியுடன் கடப்பா அருகே அவரை அண்மையில் கைது செய்தோம்.
அப்போது, அவரது வீட்டிலிருந்து வெடிபொருட்கள், ஏராளமான மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த மற்றொரு தீவிரவாதியான முகமது அலியையும் ஆந்திராவில் கைது செய்தோம். கடந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பாஷா உட்பட 160-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் கோவை உக்கடம் பிலால் காலனியைச் சேர்ந்த சாதிக் என்ற ராஜா என்ற டெய்லர் ராஜா 1996 முதல் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை ‘ஆபரேஷன் அகழி’ என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் தேடினோம். ஏ.ஐ. தொழில் நுட்பம் மற்றும் நுண்ணறிவு உளவு தகவல்களை அடிப்படையில் கர்நாடக போலீஸாரின் உதவியுடன் விஜய் புராவில் கடந்த 9-ம் தேதி அவரை கைது செய்தோம்.
இவர்கள் மளிகை, தையல், துணிக்கடை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் செய்து வந்துள்ளனர். அவர்களது உண்மையான பெயர், முகவரியை வெளிப்படுத்தாமல் வேறு பெயர்களை மாற்றி அடையாள அட்டைகளையும் வைத்துள்ளனர். டெய்லர் ராஜா மட்டும் அல் உம்மா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார்.