டெலிகிராம் சமூக தளத்தை நிறுவியவரும், கோடீஸ்வரர்களில் ஒருவருமா பாவெல் துரோவ், தான் 100-க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பா என்று தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், சொந்த வாழ்க்கை பற்றிய விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.அதில், 15 ஆண்டுகளுக்கு முன்பு, என் நண்பருக்கு உதவுவதற்காக, விந்தணுவை தானம் செய்ய நான் தொடங்கிய மருத்துவமனையின் மூலம், சுமார் 12 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் துரோவ்.
பிரான்ஸில் எவ்வித மோசமானக் குற்றச்சாட்டுகளுக்கும் தான் ஆளாகவில்லை என்று கூறியிருக்கும் துரோவ், தனக்கு அதிகாரப்பூர்வமாக 6 குழந்தைகள் உள்ளனர். மூன்று வெவ்வேறு துணைகள் மூலம் பிறந்த இவர்கள்தான் எனது 13.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளுக்கு வாரிசு என்றும் தெரிவித்துள்ளார்.
எனது ஆறு குழந்தைகளுக்கும் சமமான உரிமை உள்ளது. என் மரணத்துக்குப் பின் அவர்கள் சொத்துக்காக சண்டையிடுவதை நான் விரும்பவில்லை. ஆனால் அவர்களது 30 வயது வரை அவர்களுக்கு சொத்துகளைக் கொடுக்க மாட்டேன். அவர்கள் சராசரி மனிதர்களைப் போலவே வாழ வேண்டும். அவர்களை அவர்களே கட்டமைத்துக் கொண்டு, அவர்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கை நம்பி அவர்கள் வாழக் கூடாது என்று கூறியுள்ளார்.



