டாஸ்மாக் கடைகளை 7 மணிக்கே திறக்கலாமா என்று யோசித்து வருகிறோம் என்று அமைச்சர் முத்துசாமி கூறியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. அரசு சாராய விற்பனைக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.
சமீபத்தில் 500 டாஸ்மாக கடைகளை தமிழக அரசு மூடியபோதும் விற்பனை குறையவில்லை என்கிறார் அமைச்சர் முத்துசாமி. பக்கத்து கடைகளுக்கு சென்று குடி மக்கள் மது வாங்குகிறார்களாம். இது தமிழ்நாட்டின் இன்றைய நிலையை உணர்த்துகிறது.
1971ல் தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் இருந்த திமுக ஆட்சியின்போது மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு சாராயக் கடைகள் திறக்கப்பட்டன. மாநிலத்தின் நிதி நிலைமையை சரி செய்யவும் அகில இந்திய அளவில் மதுவிலக்கு இல்லாததால் பக்கத்து மாநிலங்களிலிருந்து மது கடத்தல், கள்ளச்சாராயம் போன்றவற்றை சமாளிக்கவும் மதுவிலக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று அப்போது கூறப்பட்டது.
அந்த சமயத்தில் இந்தியாவில் பல மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாததால், ‘மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும்’ என அறிவித்தது மத்திய அரசு. ‘தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. எங்களுக்கும் மானியம் தர வேண்டும்’ என தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கருணாநிதி கேட்டபோது, தர மறுத்து விட்டது மத்திய அரசு. புதிதாய் அமல்படுத்தும் மாநிலங்களுக்குதான் மானியம் என்று மத்திய அரசு கூறிவிட்டது. மதுவிலக்கு அமலில் இருந்தும் மத்திய மானியம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கவில்லை. இதுவும் மதுக் கடைகளை திறக்க ஒரு காரணமாக அமைந்தது.
மூன்று வருடங்கள் கழித்து 1974 செப்டம்பரில் மீண்டும் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது சாராயக் கடைகள் மூடப்பட்டன.
அடுத்து வந்த எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் 1981ஆம் வருடம் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு மீண்டும் சாராயக் கடைகள் திறக்கப்பட்டன. 1983ல் டாஸ்மாக் உருவாக்கப்பட்டது. சாராய ஆலைகள் அமைக்க அனுமதி தரப்பட்டது.
1989ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக அரசு மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்தியது.
ஆனால் அடுத்து 1991ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா ஆட்சியில் மலிவு விலை மது விற்பனை ரத்து செய்யப்பட்டு வெளிநாட்டு வகை மது விற்பனைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
1996 கருணாநிதி ஆட்சியில் மீண்டும் 100 எம்.எல் பாட்டில்களில் மலிவு விலை மது விற்பனை செய்யப்பட்டது.
2001ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா காலத்தில் டாஸ்மாக் மூலம் மது விற்பனை தொடங்கியது. இன்று வரை அதுதான் நடைமுறையில் இருக்கிறது.
தேர்தல் நேரங்களில் மதுவிலக்கு குறித்து அரசியல் கட்சிகள் பேசுவதும் பிறகு அது மங்கிப் போவதும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன. 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தது. ஆனால் அந்தத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று வாக்குறுதி தந்தது. அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்று ஆட்சியில் அமர்ந்தது.
2021 தேர்தலில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே பூரண மதுவிலக்கு குறித்து பேசவில்லை.
இதுதான் தமிழ்நாட்டில் மதுவின் சுருக்கமான வரலாறு.
இந்தியாவில் குஜராத், பீஹார், நாகலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களில் முழு மதுவிலக்கு கடைபிடிக்கப்படுகிறது. யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளிலும் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. ஆக மொத்த ஐந்து மாநிலங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் இருக்கிறது.
இங்கு தமிழ்நாட்டில் மதுவுக்கு எதிர்ப்பு சொல்லும் பாஜக ஆளும் பல மாநிலங்களில் மது விற்கப்படுகிறது. மதுவின் மூலம் பெரும் வருவாயை ஈட்டுகின்றன. இந்தியாவிலே மது மூலம் அதிக வருவாயை ஈட்டும் மாநிலம் உத்தரப்பிரதேசம். கிட்டத்தட்ட 31 ஆயிரம் கோடி ரூபாய் மதுவின் மூலம் அதற்கு கிடைக்கிறது. இது அந்த மாநில வரி வருவாயில் 21 சதவீதம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டின் மது வருவாய் சுமார் 7 ஆயிரம் கோடியாக இருக்கிறது. இது தமிழ்நாட்டின் மொத்த வரி வருவாயில் 5.8 சதவீதம்.
அகில இந்திய அளவில் இந்தியாவில் 18.7 சதவீத மக்கள் மது அருந்துகிறார்கள். மது அருந்துபவர்கள் அதிகமாக இருக்கும் மாநிலம் அருணாச்ல பிரதேசம். இங்கு 52 சதவீதத்தினர் மது அருந்துகிறார்கள். அடுத்த இடத்தில் தெலங்கானா இருக்கிறது. இங்கு 43.4 சதவீத மக்கள் மது குடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் 15 சதவீத மக்கள் மது அருந்துகிறார்கள். இந்த புள்ளிவிவரங்களை தேசிய குடும்ப ஆரோக்கிய கருத்துக் கணிப்பு (National Family Health Survey) தெரிவிக்கிறது. தேசிய அளவில் விற்கப்படும் மதுவில் 45 சதவீதம் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களில் விற்பனையாகிறது என்ற கூடுதல் தகவலையும் இந்த புள்ளிவிவிவரம் தருகிறது.
இதுதான் இந்தியாவில் மதுவின் இன்றைய நிலை.
யதார்த்த சூழல் இப்படியிருக்கும்போது மதுவிலக்கு சாத்தியமாகுமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மது ஒரு அரசியல் ஆயுதமாக பார்க்கப்படுகிறது.
மது உடல்நலத்துக்கும் குடும்ப நலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் உலகம் முழுவதும் மது தடை செய்யப்பட முடியாத வஸ்துவாக இருக்கிறது. மதுவிலக்கை அமல்படுத்திய பல உலக நாடுகள் மீண்டும் மதுவுக்கே திரும்பியிருக்கின்றன. இதுதான் யதார்த்தம்.