நாங்கள் வியட்நாம் சென்றபோது எங்களுக்கு வழிகாட்டியாக வந்த பெண் மிகவும் கரிசனையாக எங்களைப் பார்த்துக்கொண்டாள். என் மனைவிக்குத் துணிகள் தைக்குமிடமெல்லாம் அவளே கூட்டிச் சென்றாள். என்னால் அந்த நேரத்தில் ஓய்வெடுக்க முடிந்தது. அவள் மற்றைய மஞ்சள் நிற வியட்நாமியப் பெண்களைவிட கறுப்பான நிறத்திலிருந்தாள். எங்களது நிறத்தில் எனலாம். அதாவது பொது நிறமென இலங்கையிலும் மாநிறமெனத் தமிழ்நாட்டிலும் சொல்லும் நிறம் கொண்டவள். அது எங்களது மனதில் கேள்வியை உருவாக்கி, முகத்தைச் சுற்றி பட்டாம்பூச்சியாகப் பறந்தபடி இருந்தது.
காலை உணவின்போது அந்தப் பேச்சு வந்தபோது, நான் நகைச்சுவையாகச் சொன்னேன்: “யாரோ இலங்கையையோ இந்தியாவையோ சேர்ந்த மாலுமி ஒருவன் கப்பலில் வந்திருக்க வேண்டும்.“ அதைக் கேட்டு என் மனைவி சியாமளாவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. காரணம் என்னோடு வந்த எனது நண்பன் கப்பலில் முன்பு வேலை செய்தவன்.
வியட்நாமில் போர் முடிந்த 1975இல் இனக் கலப்பு என்பது மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக மாறியிருந்தது. அமரிக்கர்கள் தென் வியட்நாமில் விட்டுச் சென்ற குழந்தைகளும் பெண்களும் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டார்கள். அவர்கள் அவமானச் சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டு விலக்கி வைக்கப்பட்டார்கள். ஆனால், இது புதிய பிரச்சினையல்ல, காலம் காலமாக யுத்தத்தின் விளைவாக எல்லா நாடுகளிலும் ஏற்படுவதுதான்.
போரில் ஈடுபடுவர்கள் எல்லோரும் ஆண்களே. பிறதேசங்களுக்குச் செல்லும்போது வன்புணர்வில் ஈடுபடுவார்கள். அதன் பிரகாரம் வரவேற்பற்ற அல்லது விரும்பத்தகாத கலப்பின சந்ததியை புதிதாக பூமியில் உருவாக்கிவிடுகிறார்கள்.
அமெரிக்கா படை வீரர்கள் வியட்நாமை விட்டு வெளியேறும்போது அவர்களுக்கு நான்கு லட்சம் குழந்தைகள் இருந்தன. பாரம்பரியமான நாடுகளில் எப்பொழுதும் கலப்பின குழந்தைகள் புறக்கணிக்கப்படும். இலங்கையில் 500 வருடங்களுக்கு முன்பாக வந்த போர்த்துக்கேயரின் சந்ததிகளை இன்னமும் யாழ்ப்பாணத்தில் ‘பீத்தப் பறங்கிகள்’ என்போம்; தமிழ்நாட்டில் ‘ஆங்கிலோ இண்டியன்’ என்கிறார்கள். அது வியட்நாமிலும் நடந்தது. அதனால், இந்த நான்கு லட்சம் குழந்தைகளும் வன்புணர்வில் உருவாகியவர்கள் என்பது அர்த்தமல்ல. வியட்நாமில் அமெரிக்க வீரர்களுக்கும் தென் வியட்நாமிய பெண்களுக்கும் மத்தியில் காதல் திருமணங்களும் நடந்திருந்தன.
போர் அல்லாமல் கலப்பினம் உருவாகும் இன்னொரு வழியும் ஆதிகாலம் தொடக்கம் உள்ளது. கப்பலில் செல்லும் மாலுமிகள் மாதக்கணக்கில் கடலிலிருந்து விட்டு துறைமுகங்களில் இறங்குவார்கள். அங்கு வன்புணர்வு இராது. பெரும்பாலும் பணம் கைமாறும். அல்லது சிகரட் , மதுபானம், வாசனைத் திரவியங்கள் அன்பளிப்பாகும். சில மாலுமிகள் உள்ளூர் பெண்களில் காதல் கொண்டு அந்தந்த நாடுகளில் இறங்கி குடும்பம் குடித்தனமாவதும் நடைபெறும்.
மாலுமிகளைப் பற்றிய கதைகள், பல தென்னமெரிக்க இலக்கியங்களில் உள்ளன. ஆர்ஜென்டினா எழுத்தாளர் போர்ஹேயின் ஒரு அழகிய சிறுகதையில், ஒரு கன்னி, மாலுமியோடு உடலுறவு கொண்டுவிட்டு, அவளது உள்ளுறுப்பில் வடிந்த இரத்தத்தை வைத்து, தனது தந்தையை வஞ்சித்த முதலாளியைப் பழிவாங்கும் கதை பிரபலமானது.
ஐரோப்பாவில் டென்மார்க்கைச் சேர்ந்தவர்கள் பிரபலமான கடலோடிகள். நான் ஒரு விடுமுறையில் அவர்களது கிராமத்தின் தெருவில் நடந்தபோது பலர் தங்கள் வீட்டு ஜன்னலில் இரண்டு வெள்ளை நாய்க்குட்டி பொம்மைகளை வைத்திருந்ததை அவதானித்தேன். அதைப்பற்றி விளக்கம் கேட்டபோது, கடலோடிகளின் மனைவிமார், “எனது கணவர் இப்பொழுது வீட்டிலிருக்கிறார். எவரும் வந்து கதவைத் தட்டி எங்களைத் தொந்தரவு செய்யவேண்டாம். நாங்கள் பிசி“ என்பதை மற்றவர்களுக்கு காண்பிக்கும் அறிவித்தல்தான் அது என்றனர். அதே வேளையில் அதை கள்ளக்காதலர்களுக்கான எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளமுடியும் என்று நகைச்சுவையாகவும் எனக்குச் சொல்லப்பட்டது.
ஒரு காலத்தில் எனக்கும் கப்பலில் மாலுமியாகச் செல்ல விருப்பமிருந்தது. ஆனால், நிறைவேறவில்லை.
சரி, வரலாறு போதும்… வியட்நாம் டூர் பற்றி பார்ப்போம்.
நாங்கள் ஹோசி மின் நகருக்கு சென்றபோது, எங்களை மீக்கொங் நதியின் பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் உள்ள ஒரு சொக்கிளேட் உற்பத்திச்சாலைக்கு அழைத்துச் சென்றார்கள். அந்தத் தொழிற்சாலையைச் சுற்றி கொக்கோ மரங்கள் வளர்ந்திருந்தன. பசிய சோலையாகத் தெரிந்த அந்த இடத்தில் ஒரு வீடு அமைந்திருந்தது. அந்த ஓட்டு வீடு எங்கள் ஊர் வீடுகள்போல் வராந்தாவுடன் இரண்டு பக்கமும் காற்று உள்ளே போய் வெளியே வரும் வகையில் அமைக்கப்பட்டது.
அந்த வளவின் வாசலுக்குப் போனதும் வராந்தாவிலிருந்த வயதான ஒருவர், சிரித்தபடி உற்சாகமாகச் சக்கர நாற்காலியிலிருந்து கொண்டு கையை அசைத்து வரவேற்றார். அவரது இரண்டு கைகளும் பறவையின் இறக்கையாக காற்றில் மேலும் கீழும் உற்சாகமாக அசைந்தது. அருகில் சென்று பார்த்தபோது அவரது இடுப்புக்குக் கீழ் அவரது கால்கள் அசையவில்லை என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. அவருக்குப் பாரிச வாதம். அவர் எமது நிறத்திலிருந்தார். ஆனால், கொஞ்சம் சப்பை மூக்கு. இடுங்கிய கண்கள். மொத்தத்திலொரு பால் கோப்பியாகத் தெரிந்தார்.
கனடாவில் குடும்பமிருப்பதாகவும் தான் ஒரு பொறியியலாளர் எனவும் தன்னை அறிமுகப்படுத்தினார். வியட்நாம் நாட்டில் பிறந்ததற்கு நன்றிக் கடனாக அங்கு பத்து ஏக்கரில் கொக்கோ பயிரிட்டுள்ளார். ஆனால், அங்கு எவருக்கும் சாக்லேட் செய்யத் தெரியாததால் தானே செய்வதாக குறிப்பிட்டார். பத்து வருடமாக அந்த தொழிற்சாலையை நடத்தும் அவர், வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே வியட்நாமில் இருக்க நினைத்துள்ளார். ஆனால், கோவிட் பெருந்தொற்றால் இரண்டு வருடங்களாகக் கனடா போகவில்லை. தனக்குக் கனடாவில் வியாபாரம் உள்ளதாகவும் பிள்ளைகள் அவற்றை பார்க்கிறார்கள் எனவும் வார்த்தைகளில் ஆனந்தத்தை குழைத்து பெருமிதமாக கூறினார். வயதாகி பாரிசவாதம் வந்தபோதும் வாழ்வின் இலட்சியங்களை அடைந்துவிட்டேன் என்ற அந்த 73 வயதானவரின் பெருமிதம் எனக்குப் பிடித்திருந்து.
அவரது சாக்லேட் தொழிற்சாலையை சுற்றிப் பார்த்தோம். அங்கு சில சாக்லேட்களை வாங்கினோம். ஆனால், அவரிடம் இன்னும் ஒன்று எனக்கு அறிய வேண்டியிருந்தது. அவரது குடும்பம், திருமணம், வேலை பற்றிய விபரங்கள் புரிந்தன. அவரது பூர்விகத்தை எப்படித் தெரிந்துகொள்வது?
பால்க் கோப்பி நிறம் அவரில் எப்படி வந்தது என்று கேட்கமுடியாது. அது நாகரீகமில்லை. ஆனால், அறுபது வயதின் பின்பும் அழகிய பெண்ணைக் கண்டால் திரும்பிப் பார்க்காது கடந்து போக முடியாது அல்லவா? அதுவும் மற்றவர்களது மனக் குகையில் உள்ளவைகளை வேட்டையாடும் என்போன்ற இலக்கியவாதிக்கு அவமானமாக இருக்கும்.
இறுதியில் அவரது பெயரைக் கேட்டேன். பாவ் துரைசாமி என்றார்.
“துரைசாமி தமிழ்ப் பெயரல்லவா?“
“ஆமா, எனது அம்மா வியட்நாம்; அப்பா இந்தியர், பாண்டிச்சேரியை சேர்ந்தவர். பிரான்சியர்கள் வியட்நாமை ஆண்ட காலத்தில் கப்பலில் வந்து இங்கு இறங்கி அம்மாவைத் திருமணம் செய்தார். ஆனால், நான் சிறுவயதாக இருக்கும்போது இறந்துவிட்டார். அதன் பிறகு அமெரிக்கர்கள் யுத்தத்தில் தோல்விகண்டு வியட்நாமை விட்டு வெளியே போனதும் எங்களுக்கு வியட்நாமில் இருக்க முடியவில்லை. அம்மா சகோதரர்களோடு இரண்டு வருடங்கள் காரைக்காலில் அப்பாவின் உறவினரோடு வசித்தார்.”
அவரிடம் நாங்கள் இலங்கைத் தமிழர் என்றதும் கண்கள் பிரகாசமடைந்தன. தனது கையைக் காட்டி, “இந்த நிறம் எனது தந்தையிடமிருந்து எனக்குக் கிடைத்தது. ஆனால், தமிழ் தெரியாது“ என்றார்.
தான் அமெரிக்கா சென்று பின்னர் அங்கே கனேடியப் பெண்ணை திருமணம் முடித்து கனடாவில் வாழ்வதாக கூறிவிட்டு, “இந்த நாட்டிலிருந்து எதுவித பணமும் எனக்குத் தேவையில்லை. இவர்களுக்கு சாக்லேட் செய்வது எப்படி என்பதைப் படிப்பிப்பதே தனது நோக்கம்“ என்றார்.
வாழ்வில் சிலரைச் சந்தித்தால் மறக்க முடியாது. அப்படியான ஒருவராக பாவ் துரைசாமி என் மனதில் நிலைத்துவிட்டார்.
4,00,000 கலப்பின குழந்தைகள் வியட்நாமில் இருந்தன என்றேன் அல்லவா? அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு கதை இனி…
எங்களது ஹோசி மின் நகர வழிகாட்டி முப்பது வயதானவன். அவன் பேசும்போது அமெரிக்காவிலிருந்து தனது பாடசாலை நண்பன் ரோனி எழுதிய கடிதத்தை எமக்குக் காட்டிவிட்டு அவனது நண்பன் ரோனியின் கதையைச் சொன்னான்.
“போரின் இறுதிக் காலத்தில் அமெரிக்க கடற்படை வீரன் டயஸிற்கும் வியட்னாமிய பெண்ணான கிம்மிற்கும் பிறந்தவன் ரோனி. ஆனால், கிம் கர்ப்பிணியாக இருக்கும்போதே அமெரிக்கர்கள் சைகோனை விட்டு போய்விட்டார்கள். பதிவு செய்யப்பட்ட திருமணமாக இருந்ததால் தந்தையின் பெயரில் பதிய முடிந்தது. ரோனியின் துரதிஸ்டம் தந்தை டயசை உரித்ததுபோல் செம்பட்டைத் தலையுடனும் நீலக் கண்களுடனும் உயரமான குழந்தையாகப் பிறந்தான்.
கிம் நடத்தை கெட்டவள் என அவளது வீட்டை ஊரவர் எரித்தார்கள். கிராமத்தை விட்டு விரட்டினார்கள். ஊர் ஊராகத் திரிந்து தனது பிள்ளையை காப்பாற்றிய கிம்மை சில வருடங்களின் பின்னர் சைகோனில் இருக்க அனுமதித்தார்கள்.
பாடசாலையில் படிக்கும்போது, கேலி செய்யும் சக மாணவர்கள், வறுமை , சமூகத்தின் புறக்கணிப்பு என்பனவற்றுக்கு மத்தியில் வாழ்ந்த ரோனி, வளர்ந்த சிறுவனாக இருக்கும்போது, தாய் கிம் மீண்டும் கடற்றொழில் செய்யும் ஒரு வியட்நாமியனை திருமணம் செய்தாள். அதன்பின்பு சில வருடங்கள் ரோனியின் குடும்பத்தில் ஓரளவு அமைதி நிலவியது.
அந்த அமைதி அதிக காலம் நீடிக்கவில்லை. அந்தக் கணவனுக்கும் சில குழந்தைகள் பிறந்தன. அவனிடம் அதிக உழைப்பில்லை. ஒரு நாள் குடித்துவிட்டு வந்த அந்த வியட்நாமிய கணவன், 15 வயதான ரோனியை உதைத்து வீட்டிலிருந்து விரட்டிவிட்டான். சிறுவனாக கூலித் தொழில் செய்து வந்த ரோனி, இறுதியில் கிறிஸ்தவனாக கத்தோலிக்க தேவாலயத்தில் சேர்ந்தான். அமெரிக்கர்களின் வாரிசுகளை மீண்டும் அமெரிக்காவில் குடியேற்றும் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிலிருந்து வந்த பாதிரிகளின் உதவியுடன் ரோனி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
சில காலம் அமெரிக்காவில் அலைந்து, தென் மாநிலமாகிய கெந்தக்கியில் தனது தந்தையை அவன் சந்தித்தான். ஆரம்பத்தில் ஆச்சரியத்துடட அவனது தந்தையான டயஸ், தனக்கு மகன் இருப்பது தெரியாது என வருத்தப்பட்டடான். ஆனால், இறுதியில் தன்னால் வீட்டிற்குக் அவனைக் கூட்டிச் செல்ல முடியாது என்றான். அங்கே அவனுக்கு மனைவி, பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே, ரோனிக்கு பணம் தருவதாக டயஸ் கூறினான். அதை வாங்க மறுத்த ரோனி மீண்டும் யேசுவிட் பாதிரியார்களிடம் திரும்பி வந்தான்.
தற்போது ரோனி ஒரு வியட்னாமிய பெண்ணை மணந்து கலிபோர்ணியாவில் வாழ்வதாகவும், தன்னோடு இன்னமும் கடிதத் தொடர்பில் இருப்பதாக எமது வழிகாட்டி கூறினான்.
வியட்நாம் யுத்தம் முடிந்து 47 வருடங்கள் ஆகிவிட்டன. இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் வியட்நாமில் அமெரிக்கர்கள் செய்த கொடுமைகள் மிகவும் பாரதூரமானவை. தற்பொழுது வியட்நாமியர்கள் அதை மறந்து விடாதபோதும், மக்கள் முன்னோக்கி பயணிப்பது அங்கே தெரிந்தது. நான்கு தடவைகள் வியட்நாமில் பல இடங்களுக்கு பல பாதைகளால் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என்னால் அவர்களது முன்னேற்றத்தை அவதானிக்க முடிந்தது.
வியட்நாம் மக்களிடம் தற்போதைய தலைவர்கள் மேல் அதிருப்தி இருந்தபோதிலும், ஹோ சி மின் இன்னமும் மிகவும் கண்ணியமானவராக நாட்டின் தந்தையாக அவர்களால் கணிக்கப்படுகிறார். போர் நடந்த பல நாடுகளுக்கு இன்று வரை வியட்நாம் உதாரணமான நாடாக திகழுகிறது.