No menu items!

தமிழ் தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக்! – என்ன நடக்குது?

தமிழ் தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக்! – என்ன நடக்குது?

தமிழ் சினிமா தற்போதைய சூழலில் அமைதியான சூழலில் திரைப்படங்கள் தயாரிப்பதும், வெளியிடுவதுமான பணிகள் சீராக நடைபெற்று வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பல திரைப்படங்களும் தயாரிப்பாளர்களுக்கு உரிய லாபத்தைக் கொடுத்ததா என்றால் அது சந்தேகம்தான். அதே சமயம் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவதற்காக ஒரு பக்கம் தியேட்டர்களை ப்ளாக் செய்து வைக்கும் சூழலால பல சிறிய பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது. கடந்த 6 மாதங்களில் வெளியான திரைப்படங்களில் கருடன், மஹாராஜா, ராயன் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்துள்ளது. இந்த சம நிலை இல்லாத போக்கு பெரிய தேக்க நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை சரி செய்யும் நோக்கத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் தமிழ் சினிமாவில் எந்த துறையும் இயங்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்கள்.

இதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்ட கூட்டு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு OTT தளங்களில் வெளியிட வேண்டும் என்று கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களுக்கு பணி புரியாமல் புதியதாக வரும் திரைப்பட நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள் இதனால் ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால், இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்று இருந்தால் அந்த திரைப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது.

இன்றைய தேதியில் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி நிற்கிறது. அந்த நிலையை மாற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. அந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு படப்பிடிப்புகள் ஆரம்பிக்கலாம் என்பதால் வருகிற 16.8.2024 முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது படபடப்பில் உள்ள திரைப்படங்களின் விவரங்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு முறையாக கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று பேசி முடிவெடுக்கப்பட்டது. ஆகையால் தற்போது நடைபெற்று வரும் படபடப்புகளை வருகிற அக்டோபர் 30-ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால் அதை முறைப்படுத்த பல்வேறு முயற்சி செய்து தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டி உள்ளது. அதனால் வருகிற 01.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்துவது என கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் திரைத்துறை சம்பந்தமாக வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், உள்ளடக்கிய கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் சில சீர்திருத்தங்களைச் எய்யும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மூலம் தமிழ் சினிமா புத்துயிர் பெற்று அனைத்து தரப்பும் பயன் பெறும் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...