உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரரான குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சிங்கப்பூரில் கடந்த 2 வாரங்களாக நடந்துவந்த இறுதிப் போட்டியில் சீனாவின் டிங் லிரெனை 7.5 – 6.5 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
முன்னதாக இந்தியாவில் இருந்து விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக குகேஷ் அந்த இடத்தை பிடித்துள்ளார்.
11 ஆண்டுகளுக்கு பிறகு…
செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ், “போட்டிக்கு உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்தேன். இரண்டு வருட தீவிர பயிற்சிக்கு பின் கிடைத்த வெற்றி இது. ஒரு இளம் செஸ் வீரனின் கனவு எதுவோ அது நிறைவேறி உள்ளது.
10 வருட பயிற்சியின் விளைவாக இந்த சாதனையை படைத்துள்ளேன். சாம்பியன் பட்டத்தை மீண்டும் கொண்டு வரக்கூடிய நபராக இருக்க விரும்பினேன். 11 ஆண்டுகளுக்கு முன் சாம்பியன் பட்டம் இந்தியாவுடன் பறிக்கப்பட்டது. தற்போது உலக சாம்பியன் ஆன மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். லீடன் தோல்வி அடைந்ததற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நேசித்த நாட்டு மக்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன்” என்றார்.
பிரதமர் மோடி வாழ்த்து
செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ள குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ” புதிய வரலாறு மற்றும் பிறருக்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளீர்கள். அசாத்திய சாதனை படைத்து குகேஷிற்கு வாழ்த்துகள். அவருடைய ஈடு இணையற்ற திறமை, கடின உழைப்பு, அசைக்க முடியாத உறுதி ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றி இது. குகேஷின் வெற்றி செஸ் வரலாற்றில் அவருடைய பெயரை பொன் எழுத்துகளால் பதித்துள்ளது மட்டுமின்றி, லட்சக்கணக்கான இளைஞர்கள் மிகப்பெரிய கனவு கண்டு, அதை அடைவதற்கு உத்வேகம் அளித்துள்ளது. உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பதினெட்டே வயதில் உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி மிக இளம் வயதில் இப்பட்டத்தை வென்றிருக்கும் திரு. குகேஷ் அவர்களுக்குப் பாராட்டுகள். தங்களது இந்தச் சிறப்புமிகு சாதனை செஸ் விளையாட்டில் இந்தியாவின் வளமான மரபின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும், மற்றுமொரு உலக சாம்பியனை உருவாக்கி, செஸ் தலைநகரம் என்ற சிறப்பிடத்தை உலக அளவில் சென்னை தக்கவைத்துக் கொள்ளவும் அது துணை புரிந்துள்ளது. தமிழ்நாடு உங்களை எண்ணிப் பெருமை கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த குகேஷ்
மிக இளம் வயதில் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ள குகேஷ், சென்னையைச் சேர்ந்த செஸ் வீர்ர் ஆவார். குகேஷின் அம்மா பத்மா, ஒரு மைக்ரோ பயாலஜிஸ்ட். அவரது அப்பா ரஜினிகாந்த், காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர். வேலம்மாள் பள்ளியில் படித்த குகேஷ், தனது 7 வயது முதல் பள்ளியிலேயே செஸ் பயின்று வந்துள்ளார். அங்கு அவருக்கு செஸ் பயிற்சி அளித்த பாஸ்கர் என்ற ஆசிரியர் கூறும்போது, “7 வயதில் செஸ் பயிற்சிக்கு வந்த குகேஷ், 6 மாதங்களிலேயே அதன் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு மிகச் சிறந்த செஸ் வீர்ர் ஆகிவிட்டார். அப்போதே அவருக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் இருப்பது எனக்குத் தெரிந்தது” என்கிறார்.
வேலம்மாள் பள்ளியில் ஆரம்பகட்ட பயிற்சியை முடித்த குகேஷ், பின்னர் விஜயானந்த் என்ற பயிற்சியாளரிடம் அடுத்த கட்ட பயிற்சிக்காக சேர்ந்தார். அவரிடம் பயிற்சி பெற ஆரம்பித்த நாள் முதல் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்துள்ளார் குகேஷ். 2015-ல் ஆசிய ஸ்கூல் செஸ் சாம்பியன்ஷிப், கேண்டிடேட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் பட்டங்களை குகேஷ் வென்றார். 2018-ம் ஆண்டில் நடந்த ஆசிய இளையோர் செஸ் போட்டியில் குகேஷ் 5 பதக்கங்களை வெல்ல, அனைவரின் பார்வையும் அவர் மீது திரும்பியது.
தன் 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற குகேஷ், கேண்டிடேட் செஸ் உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டினார். இப்போது சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் இப்பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் தனது 22 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது. அதை இப்போது தனது 18 வயதில் முறியடித்துள்ளார் குகேஷ்.