ரஜினி காந்த் தற்போது ‘ஜெயிலர்’ பட மூடுக்கு மாறிவிட்டார் என்கிறார்கள். தினமும் அப்படத்தின் ஸ்கிரிப்ட் குறித்த அப்டேட்களை கேட்டறிகிறாராம்.
வெகு விரைவிலேயே தேர்தல் வரவிருக்கிறது. ‘ஜெயிலர்’ படம் முடிய இன்னும் ஏழெட்டு மாதங்கள் ஆகலாம். அதனால் தேர்தலுக்கு ஒரு வருடம் இடைவெளிதான் இருக்கும். அதனால் அரசியல் களம் சூடுப்பிடித்திருக்கும்.
இதை நன்றாக பயன்படுத்தி கொள்ள ‘ஜெயிலர்’ டீம் திட்டமிட்டு வருகிறது. தற்போதுள்ள சூழல்களை அடிப்படையாக வைத்து, யதார்த்தமாக ரஜினி பஞ்ச் டயலாக் பேசுவது போன்ற காட்சிகளை வைக்க இயக்குநர் தரப்பு எக்ஸ்ட்ராவாக யோசித்து வருகிறதாம். இப்படத்தில் தமன்னாவை நடிக்கவைக்கும் முயற்சியிலும் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயிலர் சாட்டையைச் சுழற்றுவதற்கு ஏற்ப, அரசியலையும், காமெடியையும் கொஞ்சம் கலந்து கமர்ஷியல் ஜெயிலராக களமிறக்கப் போகிறார்களாம்.
‘இந்தியன் – 2’ – சென்னையில் பரபரப்பாகும் ஷங்கர்!
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் பரபரப்பாக இயங்க தொடங்கியிருக்கிறார்.
ஆர்.ஆர்.ஆர். பட புகழ் ராம் சரணை வைத்து தெலுங்குப் படத்தை இயக்கி வருவதால், சமீபகாலமாக ஷங்கரின் ஜாகை ஹைதராபாத், விசாகப்பட்டினம் என மாறிப் போனது.
தெலுங்கு சினிமா உலகில் நிலவிவரும் டோலிவுட் பந்த் காரணமாக, ராம் சரண் படத்தின் ஷூட்டிங் நடைபெற பிரச்சினைகள் நிலவுகின்றன. இதனால் தற்போதைக்கு ஒரு ப்ரேக் எடுக்கலாம் என்று ஷங்கர் சொல்ல, உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார் ராம் சரண்.
உடனே சென்னைக்கு தனது ஜாகை மாற்றியிருக்கிறார் ஷங்கர். தற்போது சென்னையில் ‘இந்தியன் – 2’ படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகளை முடுக்கி விட்டுள்ளார்.
தற்போது கமல் அமெரிக்காவுக்குச் சென்றிருப்பதால், கமலின் வருகைக்காக ஷங்கர் டீம் காத்திருக்கிறது. ஆகஸ்ட் இறுதியில் கமல் சென்னைக்கு திரும்ப இருக்கிறாராம். அதனால் செப்டெம்பர் 13-ம் தேதி ஷூட்டிங்கை தொடங்கும் திட்டம் இருக்கிறதாம்.
தெலுங்கு சினிமாவில் ஷூட்டிங் பழையமாதிரி இயங்க தொடங்கினால், இந்தியன் – 2, ராம் சரண் படமென ஒரே நேரத்தில் இரண்டு ஷூட்டிங்குகளையும் மாற்றி மாற்றி எடுக்கவும் திட்டமிட்டு வருகிறது ஷங்கரின் உதவியாளர்கள் குழு.
மும்பையில் வீடு வாங்கும் ராஷ்மிகா!
அடுத்தடுத்து இரண்டு ஹிந்திப் படங்கள் வெளியாக இருப்பதாலும், மற்றுமொரு ஹிந்திப் படத்தின் ஷூட்டிங் இருப்பதாலும் மும்பையில் செட்டிலாக ராஷ்மிகா திட்டமிடுவதாக கூறுகிறார்கள்.
வடக்கிலிருந்து தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்த தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் மும்பையில் வீடு வாங்குவதற்கு ஏறக்குறைய ஏழெட்டு வருடங்கள் பிடித்தன.
ஆனால் ராஷ்மிகா பாலிவுட்டில் நுழைந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே சொந்தமாக ஃப்ளாட் வாங்க திட்டமிட்டு வருகிறார் என்பதால் மற்ற நடிகைகளின் பொறாமைக்கு உள்ளாகி இருக்கிறார்.
தனது ஏஜென்ஸியை மும்பை சினிமா இயக்குநர்கள் பக்கம் தெறிக்கவிட்டு, வாய்ப்புகளைப் பிடித்து கொடுக்கவும், கறார் உத்தரவு போட்டிருக்கிறாராம் ராஷ்மிகா.
திபீகா படுகோன், ஆலியா பட் என இருவரும் கொஞ்சம் அசந்திருக்கும் இந்நேரத்திற்குள்ளாக, மார்க்கெட் பிடிக்கவேண்டும். அதற்கு அடுத்த இரண்டு வருடங்களில் 5 ஹிந்திப் படங்களில் நடித்தே ஆகவேண்டுமென்று இலக்கு வைத்திருக்கிறாராம்.