டி20 உலகக் கோப்பைக்காக மற்ற எந்த அணிகளையும் விட அதிக பரிசோதனைகளைச் செய்துபார்த்தது இந்திய அணிதான். கடந்த 10 மாதங்களில் பேட்டிங்கில் கோலி முதல் சஞ்சு சாம்சன் வரை, பந்துவீச்சில் பும்ரா முதல் ஆவேஷ் கான் வரை பலரை அணியின் காம்பினேஷனில் போட்டு சோதித்துப் பார்த்தது இந்தியா. இந்த சோதனை முயற்சிகளால் சில போட்டிகளில் தோல்விகளையும் சந்தித்தது சோதனைக்காலம் முடிந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணி வெல்வதற்கு எந்த அளவில் சாத்தியம் இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
பேட்டிங்கைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா, கோலி, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான் கில், மயங்க அகர்வால், ஷிகர் தவன், ஹூடா, தினேஷ் கார்த்திக் என மிக நீண்ட வரிசை இருக்க, இவர்களில் 6 பேரை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய இக்கட்டான நிலை தேர்வுக் குழுவுக்கு.
அவர்களும் மண்டையைப் போட்டு உடைத்து ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹூடா, தினேஷ் கார்த்திக் ஆகியோரை உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த வீரர்களைத் தவிர ரிசர்வ் வீரராக ஸ்ரேயஸ் ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த கால பேட்டிங்கை வைத்துப் பார்க்கும்போது இது வலிமையான பேட்டிங் வரிசை. குறிப்பாக டி20 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்களான ரோஹித் சர்மாவும் (3,620 ரன்கள்), விராட் கோலியும் (3,584 ரன்கள்) அணியில் இருப்பது இந்தியாவுக்கு பலம்.
டிவில்லியர்ஸுக்கு அடுத்து 360 டிகிரியிலும் மட்டையை சுழற்றும் ஆற்றல் வாய்ந்த சூர்யகுமார் யாதவ் (இவரது ரன் குவிக்கும் வேகம் 173.3 என்பது குறிப்பிடத்தக்கது) இருப்பது கூடுதல் பலம். இவர்கள் போதாதென்று கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் பேட்டிங்கில் மிரட்ட காத்திருக்கிறார்கள். எனவே உலகக் கோப்பையைப் பொறுத்தவரை பேட்டிங்கில் இந்தியாவுக்கு அதிக கவலையில்லை.
பந்துவீச்சுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆல்ரவுண்டர்களான ஹர்த்திக் பாண்டியாவும் ஜடேஜாவும் இணைந்து செயல்பட்ட போட்டிகளில் பந்துவீச்சைப் பற்றிய கவலை அதிகம் இல்லாமல் இருந்தது. 4 பந்துவீச்சாளர்களை மட்டும் அணியில் சேர்த்தால் போதும், 5-வது பந்துவீச்சாளரின் வேலையை இருவரும் பகிர்ந்துகொள்வார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது காயம் காரணமாக ஜடேஜா உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெறவில்லை. மற்றொரு ஆல்ரவுண்டரான ஹர்த்திக் பாண்டியாவின் பந்துவீச்சு ஆசிய கோப்பை தொடரில் பெரிதாக எடுபடவில்லை.
எனவே 5 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவதா அல்லது 4 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி, ஹர்த்திக் பாண்டியாவை 5-வது பந்துவீச்சாளராக பயன்படுத்தலாமா என்ற குழப்பத்தில் இந்திய அணி உள்ளது. இந்த குழப்பத்துக்கு விடை தேடுவதில்தான் இந்திய அணியின் வெற்றி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களே அதிகமாக உள்ளன. எனவே பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களையும் பயன்படுத்துவது அவசியம். இவர்களுடன் 4-வது வேகப்பந்து வீச்சாளராக ஹர்த்திக் பாண்டியாவை இந்திய அணி பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளரை பயன்படுத்தும் பட்சத்தில் அந்த வாய்ப்பு சாஹலுக்குதான் வழங்கப்படும். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப அஸ்வின் அல்லது அக்ஷர் படேலை ஆல்ரவுண்டர் மற்றும் சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணி பயன்படுத்த வாய்ப்பு அதிகம்.
கடந்த பல போட்டிகளில் சிறப்பாக ஆடிய முகமது ஷமி (இவர் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்), சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களை அணியில் சேர்க்காதது சில விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. ஆனால் தேர்வுக்குழுவைப் பொறுத்தவரை மிக நீண்ட ஆலோசனைக்கு பிறகு திறமையான அணியையையே தேர்தெடுத்துள்ளதாக தெரிகிறது.
இனி இந்த அணியை வைத்து உலகக் கோப்பையை வெல்வது கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் திராவிட்டின் கையில் இருக்கிறது. தங்களுக்கு அளிக்கப்பட்ட வீரர்களை அவர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக கடந்த ஆசிய கோப்பை தொடரில் ஆல் ரவுண்டராக அணியில் சேர்க்கப்பட்ட ஹூடாவுக்கு பந்துவீச சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் 4-வது இடத்தில் நிலைத்து ஆடக்கூடிய ரிஷப் பந்த் கடைசி ஓவர்களில் ஆடவைக்கப்பட்டார். இதேபோல் கடைசி ஓவர்களில் சிறப்பாக ஆடும் ஹர்த்திக் பாண்டியா, 4-வது பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டார். டாப் ஆர்டரில் பேட் செய்து சதம் அடித்த தீபக் ஹூடாவை பினிஷராக கடைசி ஓவர்களில் ஆடவைத்தனர். இந்த முயற்சிகள் அனைத்தும் ஆசிய கோப்பையில் தோல்விகளிலேயே முடிந்தன. இந்தியாவும் இந்த தொடரை இழந்தது.