இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு அதிபர் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று (நவம்பர் 14) நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி அதிபர் தலைமையிலான ஆளும் கூட்டணி 137 இடங்களிலும், ஐக்கிய மக்கள் சக்தி 35 இடங்களிலும், புதிய ஜனநாயக முன்னணி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் முதல் முறையாக தேசிய கட்சி ஒன்று (அதிபர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி) அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.
இலங்கை தேர்தல் முடிவுகள் பற்றி ‘தி இந்து’ நாளிதழின் மூத்த செய்தியாளரும், இலங்கை அரசியல் தொடர்பாக ஆழ்ந்த அறிவு கொண்டவருமான டி.ராமகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது…
இலங்கை முழுவதும் ஜேவிபி/என்பிபி-யின் “அலை” வீசிக்கொண்டு இருக்கிறது. விகிதிசார பிரதிநிதித்துவ தேர்தல்முறையில் நடக்காத அபூர்வங்கள் இப்பொழுது அங்கே நடைபெறுவதாகத்தான் தெரிகிறது.
ஜேவிபி/என்பிபி விரும்பியதைப் போல மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுவிட்டார்கள். பொருளாதார ரீதியில் அந்நாட்டை வலிமையான நாடாக மாற்றுவது, புதிய அரசியல்சட்டம்,
தற்போதைய அதிபர் முறையை ஒழித்தல் மற்றும் புதிய “நிர்வாக அமைப்பு” போன்ற உறுதிமொழிகளையும் தமிழர்களுக்கு சமஉரிமை வழங்குப்படுவதை உறுதிபடுத்துவதையும் செய்வதற்கு அக்கட்சியின் தலைவரும் அதிபருமான அனுர குமார திசநாயகவிற்கு அற்புதமான வாய்ப்பு உள்ளதை. எவ்வாறு அதைப் பயன்படுத்திக்கொள்ளபோகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும்.
இந்தத் தேர்தலுக்குப் பிறகு ரணில் மற்றும் மகிந்த போன்ற அரசியல் தலைவர்கள் அந்நாட்டு அரசியலில் பெரிய பங்கை ஆற்றுவார்களா என்பது தெரியவில்லை. சஜித் மீண்டும் ஒரு முறை தோற்றுள்ளார். இம்முறையாவது எதிர்க்கட்சிகள் பலரை ஒருங்கிணைக்கின்ற வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். அவரது தலைமையும் சவாலுக்கு உள்ளாகும்.
இந்த முறை, தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியிலும் “அலை”யின் தாக்கம் உள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி இன்னமும் பலவீனமடைந்துள்ளது.
யுத்தத்திற்குப் பிறகு நடைபெற்ற 2010- தேர்தலில் கூட இக்கட்சி 14 இடங்களைப் பெற்றது. இம்முறை 6 இடங்களில் இதுவ்ரை வென்றுள்ளது. அம்பாறையில் இன்னமும் அதிகாரப்பூர்வமான முடிவுகள் வெளிவரவில்லை. வந்தாலும், எட்டை தாண்ட முடியாது. மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், தமிழர்கள் தலைமை தாங்காத கட்சி ஒன்று முதன்முறையாக பலமாக வடக்கு-கிழக்கு (மற்றும் நுவரேலியா-விலும்) பலமாக காலூன்றியுள்ளது.
இதற்கு, இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்த சிலர் தங்களை தாங்களே தலைமையென்று பிரகடனப்படுத்திக் கொண்டவர்களின் பங்கு அளப்பரியது. பொருளாதார விடயத்தில் கொஞ்சம் கூட கவனமும் கவலையும் காட்டாமல், கள நிலவரம் என்ன என்பதை அறியாமல், அரசியல் தீர்வையே 24 மணிநேரமும் ஜபித்துக்கொண்டு இருந்தவர்களும் தங்களை உலகத்திலேயே மிகவும் சாமர்த்தியர்களாக காண்பித்துகொண்டவர்களுக்கும் “நல்ல பரிசு” வழங்கப்பட்டுள்ளது.
மலையகத்திலும் தமிழர்கள் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் என்ற விதத்தில், ஜேவிபி/என்பிபி-க்கு ஆதரித்துள்ளனர்.
என்னைப் பொறுத்தவரையில் ஒரு பிரமிக்கதக்க ஆதரவை ஜேவிபி/என்பிபி-க்கு கிடைத்துள்ளது. அதை ஆக்கப்பூர்வமாக அவர்கள் பயுன்படுத்திக்கொள்ளவேண்டும்.
எனது நம்பிக்கை: அனுரா “கோதபயா 2.0”-வாக மாறிவிடமாட்டார்.