இலங்கை நெருக்கடி அதன் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் வெகுண்டெழுந்த போராட்டக் குழுவினர் சனிக்கிழமை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மாளிகையில் இருந்து கோத்தாபய ராஜபக்ச தப்பியோட வேண்டிய நிலை. இப்போது வரை கோத்தாபய எங்கே இருக்கிறார் என்பது ரகசியமாகவே உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, பலத்த பாதுகாப்பு நிறைந்த அதிபர் மாளிகையை எப்படி இவ்வளவு சுலபமாக போராட்டக்காரர்களால் கைப்பற்ற முடிந்து? ஏன் காவல்துறை, ராணுவம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? காரணம் இந்த போராட்டத்துக்கு பின்னால் அமெரிக்கா உள்ளது என்கிறார்கள் இலங்கை அரசியல் விமர்சகர்கள்.
எப்படி?
சனிக்கிழமை போராட்டத்திற்கு முதல்நாள் வெள்ளிக்கிழமை… இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அப்போது, “நாளை நடைபெறப்போகும் அறவழிப் போராட்டத்தை அரச படையினர் அடக்கக்கூடாது” என்று சிரித்தபடி வெளிப்படையாகவே அறிவித்தார்.
முன்னதாக ட்விட்டர் பதிவு மூலமாகவும் ஜூலி சங் இலங்கை ராணுவத்தினருக்கு ஒரு கோரிக்கையை விடுத்திருந்தார். அதில், அகிம்சை வழியில் போராடும் மக்களுக்கு, உரிய முறையில் பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை ராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் அறிவுறுத்திருந்தார். மேலும், வன்முறை என்பது தற்போது இலங்கை மக்களுக்கு பொருளாதார ரீதியான தீர்வை வழங்காது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை சரி செய்வதற்கு அமெரிக்கா முயற்சிகளை எடுத்து வருகிறது எனவும் கூறியிருந்தார்.
அதன் முன்னரான ஒரு மாத ஜூலி சங்கின் நடவடிக்கைகளை கவனித்தாலும் சனிக்கிழமை போராட்டத்துக்கான காய் நகர்த்தல்களை எவ்வளவு கச்சிதமாக அவர் செய்து வந்துள்ளார் என்பதை உணர முடியும்.
இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டங்களில் பொதுமக்களுடன் சேர்ந்து, இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளும் பங்கெடுத்திருக்கிறார்கள். அதில் முக்கிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி. அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை கடந்த மாதம் அமெரிக்க தூதர் ஜூலி சங் சந்தித்து பேசியிருந்தார்.
இலங்கையில் தற்போது உள்ள ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படுமாயின் அநுரகுமார திசாநாயக்க வெற்றிபெறவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே அரசியல் வல்லுனர்கள் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக முகநூலில் கருத்து தெரிவித்துள்ள இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ப. தெய்வீகன், “பைடன் அரசு பதவியேற்ற பிறகு, அமெரிக்காவின் தூதுவராக இலங்கைக்கு அனுப்பப்பட்ட அம்மணி ஜூலி சங். இவர், சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை சென்று – வழக்கத்துக்கு மாறாக பல சந்திப்புக்களை மேற்கொண்டார். நல்லூரில் வழிபாட்டை முடித்துவிட்டு, காளாஞ்சியுடன் நின்று படமெடுத்துப்போட்டார். யாழ். ஆயரைச் சந்தித்து, தேவாலயங்களுக்கும் போனார். கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்தார். கொழும்பிலும் மனோ கணேசனிலிருந்து சந்திரிகா அடங்கலாக ஏகப்பட்டவர்களுடன் பேசினார். முழு இலங்கையும் அரிசிக்கும் பெற்றோலுக்கும் எரிவாயுவுக்கும் தெருவில் புரண்டு கொண்டிருந்தபோது, அம்மையார் கதிரைகளின் ஒற்றை விளிம்பில் சாய்ந்தபடி, பலரோடு பேச்சு நடத்துவதில் மும்முரமாயிருந்தார்.
ஜூலை 9ஆம் திகதி போராட்டம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, அம்மையார் ஜூலி சங் – கிட்டத்தட்ட பகிரங்கமாகவே – போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் போல, கோத்தா அரசுக்கு சாடை மாடையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
ராஜபக்சக்களை ஆட்சிப் பீடத்திலிருந்து சுத்திகரிப்புச் செய்வதற்கு அமெரிக்கா பல காலமாக விரலிடையில் வைத்துப் பினைந்து கொண்டிருந்த திட்டத்தை மிக நிதானமாக நிறைவேற்றிய நாள்தான் சனிக்கிழமை. அமெரிக்காவின் இந்தத் திட்டத்திற்கு ‘கோத்தா கோ கம’ என்ற போராட்டம் திறம்பட பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ‘கோத்தா கோ கம’ என்று ராஜபக்சக்களை வீட்டுக்கு அனுப்புவதற்காக எவ்வளவு காலம் காலிமுகத்திடலில் நின்று கூவினாலும், அந்தப் போராட்டத்திற்கு எதுவும் நடக்காது என்பது ராஜபக்சக்களைப் போலவே, அமெரிக்காவுக்கும் நன்கு தெரியும். அதனால்தான், நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருப்பவனினதும் வயிற்றிலடிக்கும் கடும் பொருளாதார வரட்சியொன்று மூட்டி எரிக்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக, பசியின் உச்சம் காலி முதல் காலி முகத்திடல்வரை சிங்களவரை விடாது விரட்டியது. பெற்றோலுக்கும் சாப்பாட்டுக்கும் வரிசையில் நின்றவர்கள் 15 பேர் வரை செத்தார்கள். மக்கள் சாரி சாரியாக நாட்டை விட்டு ஓடினார்கள். வரலாறு காணாத உணவுப் பஞ்சத்தினால், அத்தனை மக்களும் வீதி வீதியாய் அலைந்தார்கள்.
அப்போது அத்தனை பேரினதும் கோபத்தை ராஜபக்சக்களுக்கு எதிராகத் திருப்புவதற்கு, சகல காய்களையும் கவனமாக நகர்த்தியது அமெரிக்கா. இலங்கை யார் யாரிடம் சென்று உதவிக்காகக் காலில் விழுந்ததோ, அத்தனை பேரையும், விலத்திக்கொண்டு, தங்கள் பக்கம் வந்து நின்றுகொள்ளச் சொன்னது. ‘கொடுக்கத் தயார்’ என்ற உதவியைக்கூட இந்தியா பிறகு நிறுத்திக்கொண்டது.
இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காதான் சர்வதேச நாணய நிதியம் (IMF), அமெரிக்காதான் ஐ.நா., அமெரிக்காதான் இந்தியா, அமெரிக்காதான் எல்லாமே. அவர்களை மீறி எதுவும் நடைபெறாது என்பது இன்றுள்ள அரசியல் பாலபாடம்” என்கிறார்.
முன்னதாக, ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது இனவழிப்பு நடைபெற்றது என தமிழ் மக்கள் சார்பாக ஐநாவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டதிலும் பின்னணியில் அமெரிக்கா இருந்து குறிப்பிடத்தக்கது. அப்போது சர்வதேச அளவிலான விசாரணைக்கு ஆஜராகுமாறு இலங்கையின் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சவுக்கும், பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக்சவுக்கும் ஐக்கிய நாடுகள் சபை மூலம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இருவரும் ஆஜராகாமல் தவிர்த்து வந்தனர். அப்போது இலங்கையில் இன அழிப்புதான் நடைபெற்றது என ஆதரித்து தீர்மானம் வெற்றி பெற வாக்களித்த நாடுகள், இலங்கை மீது பொருளாதார தடையை கொண்டு வர வேண்டும் என கூறியதும் கவனிக்கத்தக்கது.
இனி என்ன நடக்கும்?
இது தொடர்பாக நம்முடன் பேசிய ஈழத் தமிழ் மூத்த பத்திரிகையாள கருணாகரன், “இலங்கை அதிபர் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் (எண். 2 இன் 1981) பாராளுமன்றத்தால் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் குறிப்பிடுகிறது. அதன்படி, பதவிக்காலம் முடிவதற்குள் அதிபர் பதவி விலகினால், அதிபரின் பதவி காலியாகிவிடும். அத்தகைய நிகழ்வில், இலங்கை அரசியலமைப்பின் 40-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒரு சிறப்பு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அதிபரின் காலியான பதவியை நிரப்ப, அதிபர் பதவி விலகிய செய்த ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களில் ஒருவரை அதிபராக தேர்ந்தெடுக்க வேண்டும். அதிபர் பதவியை பதவி விலகல் செய்தால், அடுத்த மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட வேண்டும். அத்தகைய கூட்டத்தில், அதிபரின் பதவி விலகல் குறித்து பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் காலியாக உள்ள அதிபர் பதவிக்கான வேட்புமனுக்களை பெறுவதற்கான தேதியை நிர்ணயிக்க வேண்டும்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே அதிபரின் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டால், அந்த நபர் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக செயலாளர் நாயகத்தால் அறிவிக்கப்படுவார். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பரிந்துரைக்கப்பட்டால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அதிபரின் அலுவலகம் காலியாகி புதிய அதிபர் பதவியேற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், தற்போதைய பிரதமர் பதில் அதிபராக செயற்படுகிறார். இந்த காலகட்டத்தில், அமைச்சரவையின் அமைச்சர்களில் ஒருவர் பிரதமரின் அலுவலகத்தில் செயல்பட நியமிக்கப்படுவார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மீதமுள்ள காலத்திற்கு பதவியில் இருக்க முடியும்.
அதாவது, கோத்தாபய ராஜபக்ச அதிபர் பதவியை பதவி விலகல் செய்தால், ரணில் விக்ரமசிங்க, புதிய அதிபரை பாராளுமன்றம் தெரிவு செய்யும் வரை ஒரு மாத காலத்துக்கும் குறைவான காலத்திற்கு பதில் அதிபராக இருப்பார்” என்கிறார்.
இப்போது இலங்கை நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி-க்களை வைத்திருப்பது ராஜபக்சக்களுடைய கட்சிதான். ஆனால், அவர்கள் சார்பில் ரணில் அதிபர் ஆவதை மக்கள் விரும்பவில்லை. அதனால் சபாநாயகரான மகிந்த யாப்பா அபேவர்தன அதிபர் ஆகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கணிக்கப்படுகிறது. அதேநேரம், தற்போதைய சபாநாயகரும் கோத்தாபய கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிர்க்கட்சிகளும் மக்களும் ஆதரவளிப்பது கேள்விக்குறிதான்.
இலங்கை பாராளுமன்ற எண்ணிக்கை பலம் ஒரு பக்கம் இருக்க அமெரிக்கா என்ன நினைக்கிறது என்பதும் முக்கியம். வரும் நாட்களில் ஜூலி சங் நடவடிக்கைகளை கவனித்தால் அது தெரியும்.