நடிகர் சிம்பு 42வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இப்போது மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்தில் நடித்து வரும் சிம்பு, அடுத்த படங்களின் அறிவிப்பை பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். அதன்படி, சிம்புவின் 49வது படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஹரிஷ்கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடித்த ‘பார்க்கிங்’
படத்தை இயக்குகிறார். டான் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் கல்லுாரி மாணவராக சிம்பு நடிப்பதாக தகவல். சிம்புவின் 50வது படத்தை யார் இயக்குவார். அதை யார் தயாரிக்கப்போகிறார் என்ற கேள்வி பல காலமாக கேட்கப்பட்டு வந்தது. அதற்கும் இன்று விடை கிடைத்துவிட்டது. சிம்புவின் 50வது படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார். இவர் துல்கர்சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியவர்.
சிம்புவை வைத்து ஒரு சரித்திர கதையை இயக்க, இவர் சில ஆண்டுகளாக தயாராகி வந்தார். பட்ஜெட், வேறு சில பிரச்னைகள் காரணமாக அந்த படம் தள்ளிப்போனநிலையில், சிம்புவின் 50வது படத்தை தேசிங் பெரியசாமி இயக்குவதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை சிம்புவே தயாரிக்கிறார். ஏற்கனவே, டி.ராஜேந்தர் சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் பல படங்களை தயாரித்த நிலையில், அட்மன் சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கிய சிம்புவே இந்த படத்தை தயாரிக்கிறார். யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். இந்த 2 படங்களில் நடிக்கும் மற்றவர்கள் யார் என்பது இன்னமும் முடிவாகவில்லை. இதற்கிடையே அஷ்வத் மாரிமுத்து இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார்.