சிம்பு நடித்த ‘மாநாடு’ படம் பெரிய வெற்றி பெற்றது. அடுத்து நடித்த ‘வெந்துதணிந்தது காடு’, ‘பத்து தல’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியை அள்ளி தரவில்லை. இந்நிலையில், அடுத்தடுத்து வெற்றியை கொடுக்க வேண்டும் என்று பக்காவாக திட்டமிட்டு தனது அடுத்த படங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறாராம் சிம்பு.
இது குறித்து சிம்பு தரப்பில் கூறியதாவது: ‘‘மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக்லைப் படத்தில் சிம்புவும் ஒரு ஹீரோ. கமல்ஹாசன் மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஜூன் மாதம் தக்லைப் வெளியாக உள்ளது. பொன்னியின்செல்வன் என்ற மாபெரும் வெற்றிக்குபின் மணிரத்னம் இயக்கும் படம் என்பதால், படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. படமும் பல கோடிக்கு பிஸினஸ் பேசப்படுகிறது. தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் தக்லைப் வெளியாக உள்ளதால் சிம்பு ஹேப்பி
அடுத்ததாக, ‘பார்க்கிங்’ என்ற வெற்றி படத்தை கொடுத்த ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கப்போகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்போகிறது. இந்த ஆண்டே படம் ரிலீஸ். இது, சிம்புவின் 49வது படம். சிம்பு நடிக்கும் 50வது படத்தை பெரிய பட்ஜெட்டில் தேசிங் பெரியசாமி இயக்கப்போகிறார். சிம்புவின் 51வது படத்தை டிராகன் வெற்றி படத்தை கொடுத்த அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார். ஆக, இன்னும் 2, 3 ஆண்டுகளுக்கு சிம்பு பிஸி. இதற்கிடையே, தானே இயக்கி, நடிக்கும் ஒரு படத்தை சிம்பு இயக்க தயாராகி வருகிறாராம். மாநாடு2, மன்மதன்2 போன்ற கதைகளும் சிம்பு லிஸ்டில் இருக்குதாம்.