இந்திய கிரிக்கெட் அணிக்கான வருடாந்திர காண்டிராக்ட் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. முன்னணி இளம் வீர்ர்களான ஸ்ரேயஸ் ஐயரும், இஷான் கிஷனும் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்க, அவர்களின் இடத்தை நிரப்ப போகிறவர்களாக இந்த இருவரும் இருந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் இருப்பார் என்றுகூட கூறப்பட்டது. இந்த சூழலில்தான் ஸ்ரேயஸ் ஐயரையும், இஷான் கிஷனையும் வருடாந்திர காண்டிராக்ட் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).
கிரிக்கெட் காண்டிராக்ட் என்றால் என்ன?
ஸ்ரேயஸ் ஐயரையும், இஷான் கிஷனையும் நீக்கியதைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன் பிசிசிஐயின் வருடாந்திர காண்டிராக்டைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் வீர்ர்களுக்கு காண்டிராக்ட் வழங்கும். அணிக்கு மிக முக்கியம் என்று கருதும் வீர்ர்களுக்கு ஏ+ மற்றும் ஏ பிரிவிலும், மற்ற வீர்ர்களுக்கு பி மற்றும் சி பிரிவிலும் காண்டிராக்ட் வழங்கப்படுவது வழக்கம். இதில் ஏ+ பிரிவில் இடம்பெற்றுள்ள வீர்ர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வீர்ர்களுக்கு ஆண்டுக்கு 5 கோடி ரூபாயும் சம்பளமாக வழங்கப்படும். பி பிரிவில் இடம்பெற்றுள்ள வீர்ர்களுக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாயும், சி பிரிவில் இடம்பெற்றுள்ள வீர்ர்களுக்கு ஆண்டுக்கு 1 கோடி ரூபாயும் சம்பளமாக வழங்கப்படும். இந்த ஓராண்டு காலகட்டத்தில் காயத்தால் கிரிக்கெட் போட்டிகளில் ஆடாமல் இருந்தாலும் அவர்களுக்கு இந்த சம்பளம் வழங்கப்படும்.
நீக்கத்துக்கு காரணம் ரஞ்சி கோப்பை?
இந்த காண்டிராக்டில் இருந்துதான் ஸ்ரேயஸ் ஐயரும், இஷான் கிஷனும் இப்போது நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் கூறப்படுகிறது. இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வீர்ர்கள் ரஞ்சி கோப்பை தொடரில் கட்டாயம் ஆடவேண்டும் என்பது பிசிசிஐயின் வாதம். அதிலும் இந்தியாவுக்கான கிரிக்கெட் போட்டிகளில் ஆடாத நாட்களில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அவர்கள் தொடர்ந்து ஆடவேண்டும் என்று பிசிசிஐ கடந்த சில வாரங்களாகவே வலியுறுத்தி வந்தது. ஆனால் பிசிசிஐ பலமுறை கேட்டும் இஷான் கிஷனும், ஸ்ரேயஸ் ஐயரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை.
தென் ஆப்பிரிக்க தொடரின் நடுவில் மன உளைச்சலால் விலகுவதாக சொன்ன இஷான் கிஷன், அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் ஆடவில்லை. ரஞ்சி கோப்பை தொடரில் ஆடுமாறு பிசிசிஐ கேட்டும், அதை உதறித் தள்ளினார். அதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் 2 ஆட்டங்களில் சொதப்பிய ஸ்ரேயர் ஐயரிடம், ரஞ்சி கோப்பை கால் இறுதி ஆட்டத்தில் ஆடிவிட்டு வருமாறு பிசிசிஐ கூறியது. ஆரம்பத்தில் இதற்கு சம்மதித்த ஸ்ரேயஸ் ஐயர், போட்டி தொடங்கும் சமயத்தில் முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி விலகினார். இதனால் பிசிசிஐ நிர்வாகிகள் கோபமடைந்தனர். இதனால்தான் அவர்கள் இருவருக்கும் காண்டிராக்ட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
பிரதமர் மோடி காரணமா?
இந்திய அணிக்கான காண்டிராக்டில் இருந்து ஸ்ரேயஸ் ஐயர் நீக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் தவறாக நடந்ததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. இப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. போட்டி முடிந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று இந்திய வீர்ர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அவரைப் பார்த்து ஸ்ரேயஸ் ஐயர் தவறான வார்த்தையைச் சொல்லி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் வைரல் ஆனது. இது பாஜகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன். இப்போது தக்க சமயம் பார்த்து அவர் ஸ்ரேயஸ் ஐயரின் காண்டிராக்டை ரத்து செய்த்தாகவும் கூறப்படுகிறது.
ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷனைத் தவிர முன்னணி வீர்ர்களாக இருந்த புஜாரா, ஷிகர் தவன், உமேஷ் யாதவ், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் காண்டிராக்ட் பட்டியலில் இடம்பெறவில்லை.
காண்டிராக்டில் இடம்பெற்றுள்ள வீர்ர்கள்
இந்த ஆண்டு பிசிசிஐயின் காண்டிராக்டில் இடம்பெற்றுள்ள வீர்ர்கள்…
ஏ+ பிரிவு (சம்பளம் ரூ.7 கோடி)
ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா
ஏ பிரிவு (சம்பளம் ரூ.5 கோடி)
அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா
பி.பிரிவு (சம்பளம் ரூ.3 கோடி)
சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சி பிரிவு (சம்பளம் ரூ.1 கோடி)
ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்குர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், ரஜத் பட்டிதார்
இவர்கள் தவிர தேர்வு கமிட்டி சார்பில் வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள், வித்வாத் காவேரப்பா ஆகியோரது பெயரையும் ஒப்பந்த ரீதியிலான பரிசீலனைக்கு பரிந்துரைத்துள்ளது.