நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அமைப்பினர் சோதனை நடத்தியதுதான் இன்றைக்கு ஹாட் நியூஸாக இருக்கிறது.
இன்று அதிகாலை திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் வீட்டில் தொடங்கிய சோதனை, அடுத்து இளையான்குடியை சேர்ந்த விஷ்ணு, ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன், தென்காசியை சேர்ந்த மதிவாணன், கோவை முருகன் என்று அடுத்தடுத்து பரவ, நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்புகளை பதிவிட்டனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்க, கட்சியை நசுக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளாத நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
எதற்காக சோதனை
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு காவல்துறை நடத்திய சோதனையில் கைதுப்பாக்கி, வெடி மருந்து, முகமூடி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரண்டு பட்டதாரி வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் என்ஐஏ விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாகவும், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடனான பண விவகாரம் காரணமாகவும் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக என்ஐஏ தரப்பில் கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்களான சாட்டை துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தியிருக்கும் என்ஐஏ, அக்கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக்கு சம்மன் வழங்கியுள்ளது. வரும் 7-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்த சம்மானில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி வழக்கு
இந்த நிலையில் என்.ஐ.ஏ. சோதனையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் வழங்காமல் உடனடியாக சோதனையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
முகநூல் பதிவு
இது தொடர்பாக பத்திரிகையாளர் பா.ஏகலைவன் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
22 -ம் ஆண்டு ஓமலூரில் மூன்று இளைஞர்கள் யூடியூபை பார்த்து வெடிகுண்டு செய்ய முற்பட்டதாகவும், அவர்களுக்குள் சேர்ந்து ஈழத்தில் இயக்கத்திற்காக போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்வதில் தொடர்பிருக்கலாம் என்றும் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள். பிறகு அந்த நபர்கள் ஜாமீன் பெற்று வெளியேவும் வந்து விட்டார்கள்.
அந்த மூன்று நபர்களோடு சேர்ந்து வெளிநாட்டில் இருக்கக்கூடிய சீலன் என்கிற போராளி நபர் ஆகியோர் எல்லாம் சேர்ந்து இயக்கத்தை மீள் கட்டமைப்பு செய்வதில் தொடர்பு இருப்பதாக சம்மன் கொடுத்துதான் விசாரணையில் இறங்கி உள்ளார்கள்.
மேற்குறிப்பிட்ட அந்த நபர்களிடம் பேசினீர்களா, பேசியதுண்டா, அவர் மூலமாக ஏதேனும் நிதி வந்ததா, யூடியூபில் போராட்டம்- மீள் கட்டமைப்பு செய்ய சொன்னார்களா என்ற கோணத்தில் மட்டுமே விசாரணை நடத்தியுள்ளார்கள். சிலரிடம் விசாரணை முடிந்துவிட்டது.
இடும்பாவணம் கார்த்திக்கு இன்று காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்று கூற, அடுத்த இரண்டு நாளுக்கு முக்கிய நிகழ்வுகள் இருக்கின்றது என்பதைக் கூறி 5-ம் தேதி நேரில் ஆஜர் ஆவதாக கூறி உள்ளார்.
தென்னகம் விஷ்ணுவின் வீட்டில் இருந்து இரண்டு, தேசியத் தலைவர் அட்டைப்படம் போட்ட புத்தகங்கள் மற்றும் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, எட்டாம் தேதி சென்னை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரும்படி முறைப்படி கடிதம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்கள். மற்றவர்களிடத்திலும் இந்த நிலைதான்.
ஆக தடை செய்யப்பட்ட இயக்கம் மீள் உருவாக்கம் செய்வதற்காக ஜெர்மனில் உள்ள ஒரு நபர் செயல்படுவதாகவும், அவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற அடிப்படையில் இந்த விசாரணை நடந்துள்ளது.