கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் நடித்த சச்சின் படம், 2005ம் ஆண்டு வெளியானது. கடந்த ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய் நடித்த கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி, 30 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது. அதை தொடர்ந்து பல படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
அந்தவகையில், சமீபத்தில் சச்சின் ரீ ரிலீஸ் ஆனது. படம் குறித்து மீண்டும் மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தார் இயக்குனர் ஜான்விஜய். படத்தில் நடித்தவர்கள் இதுவரை படம் குறித்து பேசவில்லை. ஆனாலும், சச்சின் படம் ரீ ரீலிசில் வெற்றி பெற்று 10 கோடி வசூலை நெருங்குவதாக தகவல். விஜய் ரசிகர்களும், மற்றவர்களும் படத்தை ஆர்வமாக பார்த்து வருகிறதாக தகவல்
இது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் கூறியது..
கடந்த ஆண்டு ரீ ரிலீசில் விஜயின் கில்லி சக்கை போடு போட்டது. அந்த படம் பெரிய லாபத்தை கொடுத்தது. அடுத்து பில்லா உட்பட பல படங்கள் ரீ ரிலீஸ் ஆனாலும், கில்லி அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த ஆண்டு சச்சின் கோடை விடுமுறைக்கு வந்துள்ளது. புத்தம் புது பொலிவுடன் 20 ஆண்டுகளுக்குபின் வந்துள்ள சச்சின், தமிழகத்தில் மட்டும் 250க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி, வரவேற்பை பெற்றுள்ளது. விஜய், ஜெனிலியா காதல் காட்சி, விஜய், வடிவேலு காமெடி, பாடல்கள், ரகுவரன் நடித்த காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குண்டுமாங்கா பாடலுக்கு ரசிகர்கள் நடனம் ஆடுகிறார்கள்.
விஜய்க்கு எப்போது நல்ல ஓபனிங் உண்டு என்பதை சச்சின் படமும் நிரூபித்துள்ளது. கில்லி படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அந்த பட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இயக்குனர் தரணி ஆகியோரை நேரில் சந்தித்து, தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் விஜய். அந்தவகையில் விரைவில் சச்சின் படக்குழுவை விஜய் சந்திக்க வாய்ப்பு. அரசியலுக்கு செல்வதால் சினிமாவில் இருந்து ஓய்வு பெறப்போவதாக விஜய் அறிவித்துவிட்டார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அவர் நடித்த கடைசிபடமான ஜனநாயகன் ரிலீஸ். எனவே, வருங்காலங்களில் விஜய் நடித்த பல ஹிட் படங்கள் ரிலீஸ் ஆகலாம்.