எஸ்.பி. சக்திவேல் இயக்க, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரிக்கும் அலங்கு படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று நடந்தது. சென்னையில் நடந்த விழாவில் இயக்குனர் மிஷ்கின், லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, படத்தில் நடித்த குணாநிதி, காளிவெங்கட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின் ‘‘தெருக்கூத்து கலையுடன் இந்த விழா தொடங்கியது. நான் நெ கிழ்ச்சியாக இருக்கிறேன். சென்னையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள்தான். இப்படிப்பட்ட கலைகளை நாம் பாதுகாக்க வேண்டும். கொண்டாட வேண்டும். இ்ந்த கலைஞர்களை கவுரவப்படுத்தவேண்டும். ’’ என்று சீரியாக பேசியவர், படக்கதைக்கு வந்தார்.
‘‘இந்த படம் ஒரு நாய் சம்பந்தப்பட்டது. இயக்குனர் எஸ்.பி.சக்திவேல் என்னிடம் அஞ்சாதே படத்தில் உதவியாளராக பணியாற்றியவர். என்னிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறார். நம்மில் பலருக்கும் நாய்களுடன் தொடர்பு உண்டு. என்னுடைய சின்ன வயதில் மணி என்ற நாயுடன் நெருங்கி பழகினேன். அந்த காலத்தில் ஊரில் பெரும்பான்மையான நாய்க்கு மணி என்றுதான் பெயர் வைப்பார்கள். அந்த நாயுடன் பாசமாக பழகினேன். நாய் என்பது ஒரு குடும்பத்தை பாதுகாக்கிற தெய்வமாக நாய் விளக்குகிறது. பூச்சி, பாம்புகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். குடும்பத்துக்கு பாதுகாவலனாக இருக்கும். அதற்கு நாம் கொஞ்சம் உணவு கொடுப்போம்.
அப்படி பாசமாக பழகிய மணி ஒரு 5 ஆண்டுகள் கழித்து காணாமல் போனது. எங்கே என்று என் பாட்டியிடம் கேட்டபோது, அதை ஊர்க்காரர்கள் கொல்லப்போகிறார்கள், அதற்கு பைத்தியம் பிடித்துவிட்டு என்றார். பதறிப்போய் நான் ஓடிப்போய் அதை பார்த்தேன். ஒரு சாக்கில் அதை கட்டி வைத்து, கடப்பாரையால் அடித்துக்கொன்றார்கள். கிட்டத்தட்ட அது கருணை கொலைதான். ஆனாலும், அந்த சம்பவம் என்னை பெரிதாக பாதித்தது. அந்த சம்பவத்துக்குபின் நான் நாய்கள் அருகில் செல்வது இல்லை.
இப்போது என் உதவியாளர்கள் 2பேர் நாய்களுடன் பாசமாக, நெருங்கி பழகிவருகிறார்கள். வெங்கட் என்ற ஒரு உதவியாளர் தனதுவீட்டில் நாய்க்கு பெட் கொடுத்து, அதை சொகுசாக வளர்க்கிறார். ஒரு கேமரா பொருத்தி அது என்ன செய்கிறது என்று ரீ ரிக்கார்ட்டிங் சமயத்தில் கூட அக்கறையாக பார்த்துக்கொள்கிறேன். இன்னொரு உதவியாளர் நிவேதிதா ஒரு நாய்க்கு உணவு கொடுத்து உதவி இருக்கிறார். ஒரு நாள் சூழ்நிலை காரணமாக அந்த நாயால் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இருக்கிறார்.மறுநாள் காலை முதல் அந்த அவரை சுற்றி வந்து என்னை மன்னித்துவிட்டு என்று அந்த நாய் கண்களால் கெ ஞ்சியிருக்கிறது. அவர் பின்னானேலேயே மன்னித்துவிடு என கதறியிருக்கிறது.
ஓநாய் குடும்பத்தில் இருந்து வந்தது நாய். ஓநாய் என்பது வித்தியாசமானது. அதிலும் செந்நாய்கள் இன்னும் மாறுபட்டவை. அது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். செந்நாய் வேட்டையாடும் விதமே தனி, சிறுத்தை போன்ற கொடிய விலங்குகளை கூட கூட்டமாக வேட்டையாடும், பல கிலோமீட்டர் துரத்தும். ஒரு கட்டத்தில் அந்த சிறுத்தை மரத்தின் மீது ஏறிக்கொள்ளும். செந்நாய் கூட்டம் அதை சுற்றி நிற்கும். மறுநாள் இன்னொரு செ ந்நாய் கூட்டம், அந்த இடத்துக்கு ஷிப்ட் வரும். இப்படி மாறி, மாறி நடக்கும்போது ஒரு கட்டத்தில் சிறுத்தை மயங்கி கீழே விழ, அதை வேட்டையாடி கொன்று, தான் சாப்பிட்டுவிட்டு, துாரத்தில் இருக்கும் தங்கள் உறவுகளுக்கும், தங்கள் வாரிசுகளுக்கும் அந்த இறைச்சியை கொண்டு செல்லுமாம். நாம் இப்பவெல்லாம் விலங்குகளை உற்றுபார்ப்பதை தவறிவிட்டோம். அதன் கண்களில் ஆயிரம் கதைகள் இருக்கிறது
நாம் நாய் என்ற வார்த்தையை தவறாக இடத்தில் பயன்படுத்துகிறோம். நாய்களை என்று சொல்வதை விட ஆதி பைரவர்கள் என்று சொல்லலாம். நாய்களை வைத்து படமெடுத்து கஷ்டம். அது நாம் சொல்படி கேட்காது. இந்த படத்தில் ஒரு நாய் முக்கிய வேடத்தில் நடிக்கிறது. என் உதவியாளர்கள், அவர்களுடைய நாய்கள், அதன் கருணை பற்றி பேசவே இந்த விழாவுக்கு வந்தேன்’’
கங்குவா படம் பார்க்கலை. ஆனாலும், அந்த பட விமர்சனங்களை கவனித்தேன். சூர்யா போன்ற நல்ல நடிகர்களை நாம் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். நடிகர்களை கருணையுடன் நடத்துங்கள். ஒரு படத்தை வெற்றி பெற வைக்க, வாழ்க்கையை மறந்து படக்குழுவினர் போராடுகிறார்கள். சில விஷயங்களால் சில ஏமாற்றங்கள் வருகிறது. ஒரு சின்ன தவறு, ராக்கெட்டை வெடிக்க செய்கிறது. அந்த மாதிரிதான் சினிமாவும். அது அறத்தை, அழகை கொடுக்கிறது. சினிமாவை நாம் பாதுாக்க வேண்டும். அலங்கு படத்தில் உண்மை, கருணை, அறம் இருக்கிறது.