கோவை பிரச்சாரத்தின்போது போலீஸாருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரவில் நடுரோட்டில் அமர்ந்து அண்ணாமாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலை மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சூலூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இருகூர் பிரிவு பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டபோது இரவு 10 மணி ஆகி விட்டதால் மைக்கை ஆப் செய்து விட்டு கையசைத்தபடி சென்றார். அப்போது அவரை இடைமறித்த போலீஸார், இரவு 10 மணியை கடந்துவிட்ட்தால், தொடர்ந்து பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கூறி தடுத்தனர். அப்போது அண்ணாமலைக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அண்ணாமலை வாக்குவாதம்:
தான் விதிமுறை எதையும் மீறவில்லை என்று போலீஸாரிடம் தெரிவித்த அண்ணாமலை. மைக்கில் பேசாமல் அமைதியாக கையை மட்டுமே அசைத்து பிரச்சாரம் செய்ததாக கூறினார். அவருக்கு ஆதரவாக பாஜகவினரும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ஒரு கட்டத்தில் திடீரென சாலையில் அமர்ந்து அண்ணாமலை மற்றும் பாஜக தொண்டர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 1 மணிநேரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அண்ணாமலை மற்றும் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
2 பிரிவுகளில் வழக்கு:
இந்த சம்பவம் தொடர்பாக பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீஸார், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, சேலஞ்சர் துரை, விஜயகுமார், சிதம்பரம் உள்பட 300 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் காமாட்சிபுரம் பகுதியிலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பா.ஜ.கவினர் பிரசாரம் மேற்கொண்டதாக சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இவ்வாறாக கடந்த 3 நாட்களில் மட்டும் அண்ணாமலை மீது 3 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அண்ணாமலை விளக்கம்:
சூலூரில் நடந்த சம்பவம் பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை அளித்துள்ள விளக்கத்தில் “திமுக அரசின் அத்துமீறல்கள் எல்லை மீறியுள்ளன. இரவு 10 மணிக்கு பிறகு பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்ற காரணத்தை கூறி போலீசார் எங்கள் வாகனத்தை நிறுத்தினர். அப்போது நாங்கள்
வாகனங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது. பிரசாரம் செய்யவில்லை என்று கூறினோம்.
வாகனம் செல்லும் பாதையில் 2000 பாஜக தொண்டர்களைத்தான் கடந்து செல்ல உள்ளோம் என்றோம். ஆனால் போலீசாரின் செயல் என்பது தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இதுபற்றி போலீசிடம் விளக்கியும்கூட அவர்கள் மாற்று வழியில் செல்லும்படி கூறினார்கள். ஏப்ரல் 19-ம் தேதி நடக்கும் தேர்தலில் 3 ஆண்டு காலமாக தவறான ஆட்சி வழங்கி வரும் திமுகவை மக்கள் ஏற்க மறுத்து மக்கள் தங்களின் கோபத்தை காட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.