பாலிவுட் பாட்சா என்று ஷாரூக்கானை ரசிகர்கள் அழைப்பது வழக்கம். இது வெறும் பட்டமல்ல… பாலிவுட்டில் தான் நிஜமாகவே பாட்ஷாதான் என்று நிரூபித்திருக்கிறார் ஷாரூக் கான். ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான பணக்காரர்கள் வரிசையில் ( Hurun India Rich List 2024) பாலிவுட்டின் முதல் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ஷாரூக் கான்.
பாலிவுட்டின் நம்பர் 1 நட்சத்திரம் என்ற பெருமையுடன், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளராகவும், ரெட் சில்லீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருக்கும் ஷாரூக் கானின் சொத்து மதிப்பு 7,300 கோடி ரூபாய் என்று கணக்கு போட்டிருக்கிறது ஹூருன் இந்தியா அமைப்பு.
கடந்த ஆண்டு வெளியான ஷாரூக் கானின் ‘பதான்’ திரைப்படம் இந்திய அளவில் 543.09 கோடி ரூபாயையும், சர்வதேச அளவில் 1,055 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளது.
அதேபோல் கடந்த ஆண்டில் அவர் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் இந்தியாவில் 64.25 கோடி ரூபாயையும், சர்வதேச அளவில் 1,160 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான டங்கி திரைப்படம் தோல்விப் படமாக இருந்தாலும் உலக அளவில் 454 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
பணக்கார நட்சத்திரங்கள் பட்டியலில் ஷாரூக் கானின் தோழியும், பாலிவுட் நடிகையுமான ஜூஹி சாவ்லா 2-வது இடத்தில் இருக்கிறார். ஷாரூக்கானின் கேகேஆர் அணியின் மற்றொரு பங்குதாரரான ஜூஹி சாவ்லாவின் சொத்து மதிப்பு 4,600 கோடி ரூபாய். 2000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறார் ஹ்ருதிக் ரோஷன்.
ரஜினி, விஜய் சம்பளம் என்ன?
பணக்காரர்கள் பட்டியலில் மட்டுமல்ல, அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களின் பட்டியலிலும் ஷாரூக் கானுக்கே முதல் இடம் இருக்கிறது. ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் சமீபத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பட்டியலில், ஷாரூக் கான் ஒரு படத்தில் நடிக்க 150 முதல் 250 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் ஒரு படத்தில் நடிக்க 125 கோடி ரூபாய் முதல் 175 கோடி ரூபாய் வரை வாங்குவதாக ஃபோர்ப்ஸ் இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது. சினிமாவை விட்டு முழுவதும் விலகி அரசியலில் நுழையப் போவதாக தெரிவித்துள்ள விஜய், ஒரு படத்துக்கு 130 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.