பெரிய கடத்தல் புள்ளி திலகனின் ஆட்கள் ஒரு மோதலின் போது பார்வேல் கண்ணன் என்ற சிறுவனை அநாதையாக எடுத்து வருகிறார்கள். திலகன் மனைவி ஸ்வாசிகா அவனை வளர்த்து வருகிறார். ஆனாலும் அவனை மகனாக திலகன் நினைக்காமல் வெறுத்து ஒதுக்குகிறார்.
ஒரு ரயில் பயணத்தில் சிறுவன் பாரி அப்பாவை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுகிறான். இதனால அவனை பிடித்துப் போய் விடுகிறது. பல கடத்தல் வேலைகளை பாரியை வைத்தே செய்கிறார் திலகன். ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு தெரியாமலே ஒரு கடத்தல் பொருளை மறைத்து விடுகிறான் பாரி .
இந்த சம்பவத்தில் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. பாரியின் திருமணம் நடக்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த மோதலில் பாரியின் காதலி பூஜா ஹெக்டேவை தாக்க்ப் போன திலகனை தடுத்து கையை வெட்டி விடுகிறான் பாரி. இதனால் அவனது திருமணம் நின்று விடுகிறது. காதலியும் கோபித்துக் கொண்டு அந்தமான சென்று விடுகிறார். பாரியை சிறையில் அடைக்கிறார்கள். அங்கு சிறையில் மோசமாக சண்டை செய்யும் ஆட்களை விலைக்கு வாங்கி மோத விடும் அந்தமான் மிராசு ஒருவர் சூர்யாவை விலைக்கு வாங்கி அந்தமான் அழைத்துச் செல்கிறார்.
அங்கு காதலியை சந்தித்தாரா, அவது உண்மையான் தந்தையை சந்தித்தாரா என்பதை ஆக்ஷன் காட்சிகளுக்கிடையே சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
சூர்யாவுக்கு பெரிய பொறுப்பு படம் முழுவதும் சிரிக்க மறந்த ஆளாக கோப முகத்துடன் ஆக்ரோஷமான கண்களுடனும் வருகிறார்.
அவரது அறிமுக காட்சியிலே சண்டையுடன் தொடங்குவதால் படம் நெடுகிலும் விறுவிறுப்பு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. சூர்யாவுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள திரைக்கதையாக அமைந்திருக்கிறது.
அவரும் பல இடங்களில் மனதை தொடுகிறார். அதுவும் அந்தமான் காட்சிகள் கண்களை விட்டு அகலவில்லை. பிரமாண்டமும், சண்டையும் மோதலுமாக படம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டுகிறது.
திலகனாக ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் பல வடிவங்களை காட்டுகிறார். அட்டகாசமான சிரிப்பும், கோபமும் முரட்டத்தனமும் அவர் முகத்திலும் உடலிலும் தாண்டவமாடுகிறது.
பூஜா ஹெக்டே நல்ல தேர்வு. ஸ்வாசிகா, சிங்கம்புலி நிறைவாக செய்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய மலமாக இருக்கிறது. அந்தமான் காட்சிகளும், சண்டைகாட்சிகளும் அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ளன, இதே போல சந்தோஷ் நாராயணன் இசை படு துள்ளலாக அமைந்து விட்டது. பாடல் காட்சிகளில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் போடுகிறார்கள். பின்னணி இசை மிரட்டலாக அமைந்திருக்கிறது.
திரைக்கதை என்று பார்த்தால் பல இடங்களில் பொருந்தாத காட்சிகளும், உணர்வுகளற்ற சம்பவங்களுமே கடந்து போகிறது. இதனால் பல இடங்களில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை பல இடங்களில் சூழலுக்கு சம்மந்தம் இல்லாமல் சண்டைக் காட்சிகள் சலிப்பூட்டுகிறது.
இந்த குறைகளை களைந்து விட்டுப்பார்த்தால் ரெட்ரோ முழு பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கிறது.