காதலிக்க நேரமில்லை, அதேகண்கள் உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் மறைந்த ரவிச்சந்திரன். பிற்காலத்தில் பல படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்தார். அவர் மகன் அம்சவர்தனும் புன்னகைதேசம் உட்பட பல படங்களில் ஹீரோ. இப்போது 3வது தலைமுறையாக, அம்சவர்தன் மகள் அனன்யாவும் சினிமாவுக்கு வந்துள்ளார். கல்லுாரி மாணவியான இவர் கன்னி என்ற குறும்படத்தை தயாரித்துள்ளார். சென்னையில் இந்த குறும்படத்தின் திரையிடல் நடந்தது. அதில் இயக்குனர்கள் எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் விதார்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
படிக்கிற காலத்தில் படம் தயாரிக்க ஐடியா வந்தது எப்படி என்று அனன்யாவிடம் கேட்டால் ‘‘கன்னி என்ற குறும்படத்தை கல்லுாரிமாணவர்களான என் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி உள்ளோம். நான் தயாரித்தேன், என் தோழி கரீஷ்மா இயக்கி உள்ளார். எங்கள் கன்னி குறும்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது, பெரும் மகிழ்ச்சி. கல்லூரியில் வெகு சாதாரணமாகப் பேச ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி இந்த படம் உருவானது. இந்த குறும்படத்தில் ராம் நிஷாந்த், மிருதுளா ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு வித்தியாசமான காதலை, உணர்வுகளை சொல்கிறது.’’ என்றார்
மகள் குறித்து அப்பா அம்சவர்தன் பேசுகையில், ‘ அனன்யா முதலில் ஒரு குறும்படம் எடுக்கிறேன் என்று வந்தார். சரி என்றேன் கதை என்ன எனக் கேட்டேன் சொல்லவே இல்லை. படம் முடிந்தபின் பாருங்கள் என்றார். உண்மையில் படம் பார்த்து மிரண்டு விட்டேன். முதல் வாழ்த்து ஒளிப்பதிவாளருக்கு, அத்தனை அற்புதமாக விஷுவல்ஸ் கொண்டு வந்துள்ளார். ராம், மிருதுளா அற்புதமாக நடித்துள்ளார்கள். கரீஷ்மா மிக அற்புதமாக இயக்கியுள்ளார். இந்த மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்கள். அடுத்தடுத்து நல்ல படங்கள் எடுப்பார்கள். ’’என்றார்
இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசுகையில் ‘‘இந்த பட இயக்குனர் கரீஷ்மாவை பிறந்தது முதல் தெரியும். அவர் தந்தை சரவணனும் நானும் நண்பர்கள். அவரிடமிருந்து இப்படி ஒரு படைப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. சின்ன பெண் என்பதால் கல்லூரி கால வாழ்க்கையைத் தான் எடுத்திருப்பார், என நினைத்தேன். மிக கவனமாக மிக அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட படைப்பாக இது தெரிந்தது. தமிழ் சினிமாவில் ஜாதிப்பிரச்சனை கதைகள் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் கதைகளாக ஆகிவிட்டது. பெண்ணுரிமை, வாழ்வியல் பிர்ச்சனை பற்றிய கதைகளே இல்லாமல் போய் விட்டது. அதைப் பேசும் படமாக கன்னி இருப்பதாக உணர்கிறேன். டயலாக் எல்லாம் மெச்சூர்டாக இருந்தது. ஃபிரேமிங் எல்லாம் மணிரத்னம் சார் மாதிரியும் கதையில் பாலச்சந்தர் சார் மாதிரியும் இருந்தது. கரீஷ்மா தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக வருவார். ’’’ என்றார்