No menu items!

மோடிக்குப் பிறகு ராஜ்நாத்சிங்கா? ஆர்.எஸ்.எஸ். திட்டம் என்ன?

மோடிக்குப் பிறகு ராஜ்நாத்சிங்கா? ஆர்.எஸ்.எஸ். திட்டம் என்ன?

கடந்த சில நாட்களாக ஒன்றியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெயர் அதிக ஊடக வெளிச்சத்திற்கு வந்திருப்பதை பாரதீய ஜனதாவில் நிகழும் ஒரு புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. மோடிக்குப் பிறகு பாரதீய ஜனதாவின் அடுத்த தேர்வு ராஜ்நாத் சிங்காக இருக்கக்கூடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். உண்மை என்ன?

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் அறிவழகன் கைவல்யம், “கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியைத் தவிர பாரதீய ஜனதாவின் பிற தலைவர்கள் யாரும் முன்னிறுத்தப்பட்டதில்லை. அமீத் ஷா அவ்வப்போது சலனத்தை ஏற்படுத்துவார்; ஆனால், பெரும்பாலும் அது மோடியின் சிந்தனைகளை செயலாக்கம் செய்யும் சலனமாகத்தான் இருக்கும்.

நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் செல்லப் பிள்ளைகள். இதில் நிதின் கட்கரி நேரடிப் பிராமணர் என்பதால் ஆர்.எஸ்.எஸ். கொஞ்சம் யோசிக்கும். யோகி ஆதித்யநாத்தின் பழைய முகம் அகிலேஷ் யாதவின் பிற்படுத்தப்பட்ட மக்களின் எழுச்சியால் சிதைந்திருக்கிறது.

இந்துத்துவ அடிப்படைவாதக் கோட்டையான நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தின் உள்ளார்ந்த நோக்கம், நவீன இந்தியாவில் வர்ணாசிரம தர்மத்தை நிலைநாட்டி இந்தியாவில் ஒரு இந்துத்துவ அரசை நிர்மாணிக்க வேண்டும் என்பது. பழைய வர்ணாஸ்ரம இந்துத்துவ அடிப்படைவாதத்தில் பிராமணர்களுக்குக் கிடைக்கிற பிறப்பின் அடிப்படையிலான தகுதிகளைப் பாதுகாப்பது. அதனூடாக இந்திய அரசியலில் தங்களது அதிகார மையங்களை தக்க வைப்பது. இதுதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நீண்டகால இலக்கு.

இந்த இலக்கை முழுமையாக அடைவதற்கு நிறுவனமயமாக்கப்பட்ட இந்துமதத்தை இந்தியாவின் ஒற்றை அடையாளமாக மாற்றுவது ஒன்றுதான் எளிய வழிமுறை. இதற்கு பிற சாதி இந்துக்களை அவர்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவார்கள். அப்படி ஒரு கருவியாக பிராண்ட் மோடியை அவர்கள் வெற்றிகரமாக நிறுவி‌ இந்திய அரசியலில் பல்வேறு வர்ணாசிரமக் கோட்பாடுகளை சட்டங்களாக்கி நிறைவேற்றிக் கொண்டார்கள். அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கம், CAA, EWS இட ஒதுக்கீடு போன்றவை ஆர்.எஸ்.எஸ் கடந்த பத்தாண்டுகளில் மோடியின் வழியாக நிகழ்த்திய மிகப்பெரிய மாற்றங்கள்.

மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட முகம். அந்த முகத்தின் பின்னிருந்து இயங்கும்போது பெரிய அளவில் எதிர்ப்புகளை தற்காத்துக் கொள்ள முடியும். இந்த முக்கியமான மாற்றங்களை உருவாக்க நாடாளுமன்றத்தில் அசுர பலம் தேவைப்பட்டது. நல்வாய்ப்பாக அந்த அதிகார பலம் கடந்த பத்தாண்டுகளாக பாரதீய ஜனதாவுக்கு இருந்தது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா 240 தொகுதிகளில் சுருக்கப்பட்டது. பெரும்பான்மைக்குத் தேவையான எஞ்சிய எண்ணிக்கையை கூட்டணிக் கட்சிகள் வழங்க மோடி பலவீனமான பிரதமராக மாறினார்.

இதனிடையே, திடீரென்று காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி உருவாக்கிய சமூக நீதி அடிப்படையிலான மாற்றங்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பிற மாநிலக் கட்சிகளின் எழுச்சியும் அரசியல் சாசனப் பாதுகாப்பு முழக்கங்களும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது.

கடந்த பத்தாண்டுகளாக பாரதீய ஜனதா உருவாக்கிய நிறுவனமயமாக்கப்பட்ட அடிப்படை இந்துத்துவ மந்திரமான ராமர் கோவில் அரசியல் கடந்த தேர்தலில் பிசுபிசுத்துப் போனது. உத்திரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான தோல்வி, சித்தாந்த அடிப்படையிலான பாரதீய ஜனதாவின் நீண்டகாலக் கனவுகளை உடைத்துப் போட்டது.

மோடியிடம் இருந்து இயன்றவரை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தனக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக் கொண்டுவிட்டது. இப்போது மோடியின் கவர்ச்சிகரமான முகம் நீர்த்துப் போய் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கும் சூழலில் தான், ராஜ்நாத் சிங், இந்திய ஊடகங்களில் எப்போதும் இல்லாத வகையில் முன்னிறுத்தப்படுகிறார். இந்திய அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த லால் கிருஷ்ண அத்வானியே திடீரென்று அரசியல் வானில் இருந்து மறக்கடிக்கப்பட்டார்.

ராஜ்நாத்சிங், திமுகவின் தலைவர் கலைஞர் கருணாநிதியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட்டு அரைமணி நேரம் அவரது புகழை மேடையில் முழங்குகிறார். கலைஞரின் நினைவிடம் சென்று பார்வையிடுகிறார்.  அதாவது தென்னிந்தியாவில் நுழைய முடியாத இடத்தில் நுழைவதற்கான அடிக்கல்லை நாட்டுகிறார். ராஜ்நாத் சிங்கின் தமிழக வருகையும் கலைஞர் புகழ்பாடலும் பாரதீய ஜனதாவுக்கு சில அரசியல் நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும்.

இதுவரை கலைஞர் கருணாநிதி குறித்து வெறுப்பை உமிழ்ந்த தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களே கூட ராஜ்நாத் சிங்கின் வருகைக்குப் பிறகு திமுகவையும் அதன் தலைவர் கலைஞரையும் விமர்சிக்கத் தடுமாறியபடி ஊடகங்களில் பின்வாங்குவது ஒரு புதிய அரசியல் காட்சி.

திமுகவுடனான ஒரு மென்மையான அரசியல் ரீதியான இணக்கத்தை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஆதரவோடு ராஜ்நாத் சிங் பிரதிநிதித்துவம் செய்துவிட்டுப் போயிருக்கிறார். ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங்கை நட்பு ரீதியாக முன்வைத்து நெருங்குகிறார்.

தவிர பிரதமர் மோடியின் மிக முக்கியமான அரசு முறைப் பயணமான உக்ரைன் பயணத்தின் போதே, எப்போதும் இல்லாத வண்ணம் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கின் அமெரிக்கப் பயணமும் நிகழ்ந்திருக்கிறது. இது மோடியின் பழைய காலமாக இருந்திருந்தால் குறைந்த பட்சம் இந்த அமெரிக்கப் பயணத்தை தள்ளி வைத்திருப்பார்கள்.

இப்போது மோடியின் காலம் முடிந்து விட்டது, ஆர்.எஸ்.எஸ் தனது புதிய அரசியல் முகத்தைத் தேடத்துவங்கி இருப்பதாகவே தோன்றுகிறது. அது மீண்டும் ஒரு பிராமணரல்லாத, அனைவரும் இணக்கமாக இருக்கக்கூடிய முகமாக இருக்க வேண்டும்.

செப்டம்பர் 17 அன்று பிரதமர் மோடி தனது 75 ஆண்டுகளைத் தொடுகிறார். ஆர்.எஸ்.எஸ் தனது இலக்குகளை அடைய புதிய இணக்கமான முகம் ஒன்று தேவை, கூட்டிக் கழித்துப் பார்த்தால் பாரதீய ஜனதாவின் அடுத்த தேர்வு, உடனடியாக இல்லையென்றாலும் வரும் காலங்களில் ராஜ்நாத் சிங்காக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது” என்கிறார் அறிவழகன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...