கொரோனா காலத்தில் அனைவருக்கும் உடல் சோர்வும் மன சோர்வும் அதிகமாக ஏற்பட்டது. அந்த நேரத்திலும் பல துறைகளில் பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு அவர்கள் சார்ந்த நிறுவனங்கள் அதிகப்படியான வேலைப் பளுவைக் கொடுத்து வந்தன. அதனைத் சமாளிக்க திணறும் ஊழியர்கள் இப்போது கொயட் குவிட்டிங் கலாச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதான் வர்த்தக உலகில் இப்போதைய ஹாட் டாபிக்.
கொயட் குவிட்டிங் – அதாவது அமைதியாக வெளியேறுவது – என்றால் யாருக்கும் சொல்லாமல் சத்தமில்லாமல் வேலையை விட்டு விடுவது என்று அர்த்தமல்ல.
அதற்குப் பதில் கடமைக்காக வேலை பார்ப்பது என்று அர்த்தம். அதாவது அலுவலகம் சார்ந்த அனைத்துப் பணிகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்யாமல், தன்னிடம் சொன்ன வேலைகளை மட்டும் செய்வதுதான் கொயட் குவிட்டிங்.
இதன்கீழ் வருபவர்கள் தங்களிடம் சொன்ன வேலைகளைத் தவிர மற்ற வேலைகளில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். மாறாக கடமைக்கு மட்டும் வேலை பார்ப்பார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஆபிசுக்கு வந்து விட்டுப் போவார்கள். கொடுக்கிற வேலையை மட்டும் பொறுமையாக பார்த்துவிட்டு கிளம்பிவிடுவார்கள். நிறுவனத்தின் தொழில் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றில் தங்களுக்கு பங்கில்லை என்று நினைப்பார்கள்.
அலுவலகங்களில் உருவாகி வரும் இந்த ட்ரெண்ட் குறித்து முதன் முதலில் சமூக வலைதளங்களில் பேசியவர், நியூயார்க் நகரைச் சேர்ந்த சையத் கான். அவர் ஜூலை மாதம் இது குறித்து வெளியிட்ட டிக் டாக் பதிவு பலரால் ஷேர் செய்யப்பட்டது. பலரும் அவரது கருத்தை ஆதரித்தார்கள்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணி செய்யும் சலுகையை கொடுத்த நிறுவனங்கள், அதற்கு கைமாறாக சிலவற்றை ஊழியர்களிடமிருந்தும் எதிர்ப்பார்த்தது. ஷிப்ட் நேரம் கடந்து வேலை செய்யச் சொல்வது. ஊழியர்களின் மன நிலையை புரிந்துக் கொள்ளாமல் அவர்களுக்கு பணி சார் அழுத்தத்தை கொடுப்பது போன்ற செயல்களில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றை பெற அதிகமான வேலைகளை செய்யச் சொல்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட வெறுப்புதான் ஊழியர்களை அமைதி மனநிலைக்கு தள்ளியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
2021ஆம் ஆண்டு இறுதியில் கேலப் (Gallup) நிறுவனம் நடத்திய ஆய்வில் வேலை பார்ப்பதில் ஊழியர்களின் ஈடுபாடு குறைவது தெரியவந்தது. நிறுவனம் தங்களிடமிருந்து என்ன எதிர்ப்பார்க்கிறது என்பதன் புரிதல் ஊழியர்களுக்கு குறையத் தொடங்கியது. மேலும் இருக்கும் பணியில் கற்றுக்கொள்ளவும் வளரவும் வாய்ப்பில்லாத சூழ்நிலையை ஊழியர்கள் உணர்வதாக பதிவிட்டுள்ளது. “கொயட் குவிட்டிங் மோசமான நிர்வாகத்தின் அறிகுறி” என்று கேலப் நிறுவனம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது
அதே போல் “நல்ல தலைமை பண்பு” இல்லாமல் இருக்கும் மேலாளர்களாலும் இந்த முடிவை ஊழியர்கள் எடுப்பதாக தெரிகிறது. ஹார்வர்டு பிசினஸ் ரிவியூ மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், நல்ல தலைமை பண்பு இருக்கும் மேலாளர்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுள் 3% மட்டுமே கொயட் குவிட்டிங்கில் ஈடுபட்டு வருகன்றனர். அதே, திறமையற்ற மேலாளர்களின் கீழ் 14% ஊழியர்கள் கொயட் குவிட்டிங்கில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
ஜெனரேஷன் இசட் (Generation Z) மற்றும் லேட் மில்லினியல்ஸ் (Late millennials) எனப்படும் இப்போதிருக்கும் 35 வயதை கடக்காதவர்கள்தான் இந்த கொய்ட் குவிட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரபல சமூக வலைதளங்கள் மூலம் இந்த கருத்துக்கள் பரவி வருகிறது.
பணியில் அதிகம் முன்னேற வேண்டிய, நாட்டின் தூண்களாக இருக்க வேண்டிய இளைஞர் சமுதாயம் சோர்வுற்று இருப்பது கொஞ்சம் வருத்தமளிக்கிறது. ஆனால், இந்த கொயட் குவிட்டிங்கால் அவர்கள் பணி -வாழ்க்கை விகிதத்தை (Work life balance), அதாவது, பணியிலும் வாழ்கையிலும் சமமான அக்கறை செலுத்த முடிவதாக தெரிகிறது.