‘அஞ்சு லட்சம் வேண்டாம். அஞ்சு ப்ரெசண்ட் ஷேர் கேட்போம்’ என்று ’புஷ்பா’ படத்தில் ஒரு வசனம் வரும்.
அதாவது. கஷ்டப்பட்டு வேலைப் பார்த்த பிறகு சம்பளத்தை கேட்காமல், லாபத்தில் கொஞ்சமாக பங்கு கேட்டாலும், அது பார்ட்னர்ஷிப். அதன்பிறகு வேலைக்காரன் இல்லை. தொழிலில் பார்ட்னர். செம்மரக் கடத்தலில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க ஆசைப்படும் ’புஷ்பா’ அல்லு அர்ஜூன் சொல்லும் ஃபார்மூலா இது.
இந்த ஃபார்மூலா ஒரு பக்கம் இருக்கட்டும். அடுத்து விஷயத்திற்கு வருவோம்.
‘புஷ்பா’ படம் மும்பையில் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளிக் குவித்தது. ஒடிடி-யில் வெளியாகி பான் – இந்தியா படமென பெயரெடுத்தது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என முக்கிய பிராந்திய மொழி சினிமா பாக்ஸ் ஆபீஸிலும் வசூலோடு வரவேற்பையும் பெற்றது.
‘புஷ்பா’ படத்தின் டிரெய்லர் வெளியானதுமே அதன் மீதான எதிர்ப்பார்பு எகிறியதால் அதன் திரையரங்குகளில் வெளியிட150 கோடிக்கு விற்பனையானது. படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் உலகம் முழுவதிலும் இருந்து ‘ஷேர்’ கலெக்ஷன் மட்டும் 190 கோடியைத் தாண்டியது. வசூல் மழை அதோடு நிற்காமல் டிஜிட்டல் உரிமைகள், சேட்டிலைட் உரிமைகள் எல்லாம் சேர்ந்து சுனாமியைப் போல லாபத்தை வாரியெடுத்து தயாரிப்பாளருக்கு கொடுத்தது. குறைந்தப்பட்சம் 300 கோடியாவது தயாரிப்பாளர் கணக்கில் சேர்ந்திருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
’புஷ்பா’ படத்தின் இந்த பாக்ஸ் ஆபீஸ் வெற்றியினால் அடுத்த பாகத்தில் நடிக்க சம்பளம் அதிகம் வேண்டுமென்று அல்லு அர்ஜூன் கேட்க, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ ஓகே என டிக் அடித்தது. இதனால் அல்லு அர்ஜூனின் சம்பளம் 60 முதல் 80 கோடியைத் தொடும் என்கிறார்கள். இதைப் பார்த்து ராஷ்மிகா மந்தானாவும் ‘எனக்கும் அப்படியே’ என்று வேண்டுகோள் விடுக்க, அதற்கும் டபுள் ஓகே செய்தது மைத்ரீ மூவி மேக்கர்ஸ்.
இவர்கள் இப்படியென்றால் இயக்குநர் சுகுமார் சும்மா இருப்பாரா. 15 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் சுகுமார் இருபது அல்லது இருபத்தைந்து கோடி கேட்பார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு உலாவியது.
ஆனால் இப்போது சுகுமார் அடித்தது ஒரு பெரிய ஸ்டண்ட்.
அமெரிக்கா, க்ரீஸ் என தனது கதையை யோசிப்பதற்காக ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்த சுகுமார், ‘’புஷ்பா- 2’ எடுக்க எனக்கு சம்பளமே வேண்டாம். ஒரு பைசா கூட வேண்டாம்.’ என்று கறாராக மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் கூறியதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் இக்கட்டுரையின் முதல் இரண்டு பத்திகளில் வரும் ‘Conditions Apply‘ மட்டும் போதும் என்று சொல்கிறாராம்.
தனது படத்தில் வைத்த அதே கூட்டிக் கழித்துப் பார்க்கும் ஃபார்மூலாவை இப்போது நிஜத்திலும் கையிலெடுத்து இருக்கிறார் ‘புஷ்பா’ பட இயக்குநர் சுகுமார்.
’புஷ்பா – 2’ படத்திற்கு இப்போதே அதிக எதிர்பார்பு இருப்பதால் இன்னும் பிரம்மாண்டமாக எடுக்க வேண்டியிருக்கும். நட்சத்திரங்களின் சம்பளம் அதிகமானால் பட்ஜெட்டில் நெருக்கடி வரலாம். அதனால் எனக்கு சம்பளம் வேண்டாம். அந்தப் பணத்தை படமெடுக்க பயன்படுத்தலாம். ’சுகுமார் எழுத்து மற்றும் இயக்கத்தில்’ என்று மூளையை மூலதனமாக வைத்துகொண்டால், கோ—ப்ரொடியூஸராக இருந்து கொள்கிறேன். படம் வெளியாகி லாபம் குவிக்கும் போது அதில் இத்தனை சதவீதம் பங்கு கொடுத்தால் போதும்’ என்று மனம் விட்டு பேசியதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது.
இது உண்மையாக இருக்கும்பட்சத்தில். ‘புஷ்பா – 2’ முதல் பாகத்தைவிட பெரிய ஹிட்டாக அமையும் பட்சத்தில் சுகுமாருக்கு 70 முதல் 90 கோடிவரை கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இந்நிலையில் அக்டோபர் 2-ம் தேதி தொடங்க வேண்டிய ‘புஷ்பா – 2’ படத்தின் ஷூட்டிங் தசரா பண்டிகை கொண்டாட்டம் முடிந்த பிறகு தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
சுகுமார் கேட்பது ’நியாயமா’ ’சரியா’ ’அடுக்குமா’ ’பொறுக்குமா’ என எப்படி கேட்டாலும், இன்றைய சூழ்நிலையில் சினிமாவை வாழ வைக்க மிகச்சரியான நடைமுறையாகவே இருக்கும்.
ஒரு கமர்ஷியல் படத்தின் பட்ஜெட்டில் மூன்றில் இரண்டு பங்கு ஒரு உச்ச கமர்ஷியல் ஹீரோவின் சம்பளத்திற்கே போய்விடுகிறது. அடுத்து கதாநாயகி மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளத்திற்கு போய்விடும். இதனால் படமெடுக்கும் ஆகும் ஷூட்டிங் செலவு, சம்பளங்களை ஒப்பிடுகையில் இரண்டில் ஒரு பங்கு அல்லது மூன்றில் ஒரு பங்காகவே இருக்கிறது.
இதனால் தங்களது மார்க்கெட் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும், தங்களது படம் வெளியானால் வசூலைக் குவிக்கும் என்று அடித்துச் சொல்லும் நடிகர்கள் அதிக சம்பளம் கேட்கிறார்கள். அப்படியொரு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் அவர்கள், ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பெற்று கொள்ளலாம். மீதி சம்பளத்தை படம் வெளியானதும் வசூல் நிலவரத்தைப் பொறுத்து லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சம்பளமாக கேட்கலாம். இது சரியாக இருக்காது சம்பளத்தில் சமரசம் கிடையாது என்பவர்கள், படம் வெளியாகி லாபம் ஈட்டினால் இத்தனை சதவீதம் என்று முடிவு செய்துகொண்டு சம்பளம் வாங்காமல் நடித்து கொடுக்கலாம்.
இந்த நடைமுறையில் அவர்களது படங்களுக்கு கிடைத்த பாக்ஸ் ஆபீஸ் வருவாயைப் பொறுத்து நட்சத்திரங்களின் சம்பளம் அமையும். தயாரிப்பாளருக்கும் படமெடுப்பதில் பண நெருக்கடி இருக்காது. ப்ரமோஷன் செய்வதிலும் சிக்கல் எழாது.
பான் – இந்தியா, ஓடிடி உரிமை, டிஜிட்டல் உரிமைகள், சாட்டிலைட் உரிமைகள் என இன்று வருவாய்க்கு பல வழிகள் இருப்பதால், சில வருடங்களுக்கு முன்பு இருந்த லாபக் கணக்கைவிட இருமடங்கு லாபம் பெற வாய்ப்புகள் இருக்கின்றன.
இதற்கு இப்போது உள்ள இயக்குநர்கள், நட்சத்திரங்களில் யார் தயாராக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகையில், சுகுமாரின் அணுகுமுறை வரவேற்கப்படக்கூடிய ஒன்றாகவே இருக்கும்.