ஷங்கர் இயக்கிய ‘காதலன்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரபுதேவா, தமிழ், தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்தார். பின்னர், 2005-ம் ஆண்டு தெலுங்கில் சித்தார்த், திரிஷா நடித்த நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அந்த படம் பெரிய வெற்றி பெறவே, கொஞ்சகாலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தமிழ், தெலுங்கு, இந்தியில் படங்கள் இயக்கினர்.
தமிழில் விஜய்யை வைத்து அவர் இயக்கிய போக்கிரி, இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கிய வான்டன்ட் படங்கள் பெரிய வெற்றி பெற்றன. சில ஆண்டுகளாக இயக்குனர் பணியில் தீவிரம் காண்பித்தார். இப்போது மீண்டும் நடிக்க வந்துவிட்டார். இதற்கிடையில், தனக்கு பிடித்த டான்ஸ்மாஸ்டார் வேலையையும் செய்து வந்தார். தனது பிஸியான நேரத்திலும் முன்னணி ஹீரோக்கள், இயக்குனர்களின் படங்கள், தனக்கு பிடித்த படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக ஈகோ பார்க்காமல் பணியாற்றினார்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் பிரபுதேவா. சென்னை, ஐதராபாத், மும்பை என்று பிஸியாக சுற்றி வந்தவர், இப்போது சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். அவரின் 2-வது திருமணம், குழந்தை பிறந்ததும் இதற்கு முக்கிய காரணம். கோட் படத்தில் ஹீரோ நண்பராக நடித்தவர், இப்போது ஹீரோவாக மட்டுமே நடிப்பது என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் நடனத்தில் கவனம் செலுத்துகிறார்.
சென்னையில் ‘பிரபுதேவா வைப்’ என்ற நடன நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த உள்ளார். சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்ரவரி 22-ம் தேதி நடக்கும் இந்த நிகழ்ச்சியி்ல் தனது குழுவுடன், 3 மணி நேரம் தொடர்ச்சியாக நடனம் ஆட உள்ளார்.
இது குறித்து பிரபுதேவா கூறும்போது, ‘‘அன்றைய நிகழ்ச்சியில் 100-க்கும் அதிகமான நடன கலைஞர்களுடன் நடனம் ஆடுகிறேன். இந்த நிகழ்ச்சியில் ரஷ்யா, கொரியாவில் இருந்தும் பாடகர்கள், நடனக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். டான்ஸ் மாஸ்டரும், இயக்குனருமான ஹரி இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். பலரும் இந்த நிகழ்வை சினிமா டான்ஸ் போல எதிர்பார்க்கிறார்கள்.. சினிமாவில் கட் பண்னி, கட் பண்ணி ஆடுவோம். இதில் அப்படி முடியாது தொடர்ந்து ஆட வேண்டும். அதற்காக தொடர்ந்து ரிகர்சல் செய்து வருகிறேன். ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். அதற்காக 200 சதவீத உழைப்பை போட்டு வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவாவுடன் பணியாற்றிய ஹீரோக்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ஹீரோயின்கள், சினிமா கலைஞர்கள் பங்கு பெறுகிறார்கள். இந்தியா முழுவதிலும் இருந்து இதில் ரசிகர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள். சினிமாவில் 30 ஆண்டை கடந்த பிரபுதேவா நடத்தும் முதல் டான்ஸ் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.