No menu items!

ராமநாதபுரத்தை மறந்த பிரதமர் மோடி – மிஸ் ரகசியா

ராமநாதபுரத்தை மறந்த பிரதமர் மோடி – மிஸ் ரகசியா

முகத்தை மறைக்கும் ஸ்கார்ஃப், கூலிங் கிளாஸ், கைகளில் கிளவுஸ் என்று வித்தியாசமான கெட்டப்பில் ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“என்ன கெட்டப்பெல்லாம் மாறி இருக்கு. ஏதாவது ஃபேஷன் ஷோவுக்கு போறியா?”

“உங்களுக்கென்ன? ஆபீசுக்கு உள்ளேயே குளுகுளுன்னு உட்கார்ந்து நியூஸை வாங்கிடுறீங்க. ரெண்டு நாளா சென்னையே கொதிக்குது. வெயில்ல அலைஞ்சு திரிஞ்சு செய்திகளை சேகரிக்கற எங்களுக்குதானே கஷ்டம் தெரியும். வெயில்ல வாடாம இருக்க, உடம்பை மறைச்சா உங்களுக்கு ஃபேஷன் ஷோ மாதிரி தெரியுதோ?”

“சாரிம்மா கோச்சுக்காதே” என்று சொல்லி, பிரிட்ஜில் வைத்திருந்த ஆவின் மோரை கொடுத்தோம்.

“என்னை நீங்க கூல் பண்ணிட்டீங்க. ஆனா முதல்வரை எப்படி கூல் பண்றதுன்னு தெரியாம திமுக பிரமுகர்கள் முழிக்கறாங்களாம்.”

“முதல்வருக்கு என்ன கோபம்?”

“நாடாளுமன்ற தேர்தலுக்குள்ள திமுக உறுப்பினர்களோட எண்ணிக்கையை கூட்டணும்கிறது முதல்வரோட விருப்பம். ஆனா அவரோட வேகத்துக்கு மாவட்ட செயலாளர்களால ஈடுகொடுக்க முடியல. காணொலி மூலமா உறுப்பினர் சேர்க்கை பத்தின விவரங்களை மாவட்ட செயலாளர்கள்கிட்ட கேட்டிருக்கார் முதல்வர். பலரும் அதுக்கு சரியா பதில் சொல்லலை. முதல்வர் சொன்ன காலத்துக்குள்ள உறுப்பினர்களை சேர்க்க முடியலைன்னு மென்னு முழுங்கறாங்க. சீக்கிரம் உறுப்பினர்களை சேர்த்து முடிச்சிடறோம்னு மேம்போக்கா சொல்லி இருக்காங்க.”

“அவங்களோட பதிலால முதல்வர் திருப்தியாயிட்டாரா?”

“இல்ல. அவங்களோட பதில் முதல்வரோட கோபத்தை அதிகப்படுத்தி இருக்கு. ‘ஒவ்வொரு மாவட்டத்துலயும் என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியும். குறிப்பிட்ட காலத்துக்குள்ள உறுப்பினர் சேர்க்கையை முடிக்கலைன்னா வேற மாவட்ட செயலாளரை வச்சு அந்த வேலையை முடிச்சுக்கறேன்’னு முதல்வர் கோபமா சொல்லிட்டாராம். அவரை எப்படி சமாதானப்படுத்தறதுன்னு தெரியாம மாவட்ட செயலாளர்கள் முழிச்சுட்டு இருக்காங்க. புது உறுப்பினர்களைச் சேர்க்க தங்களுக்கு கீழ இருக்கற நிர்வாகிகளுக்கு நெருக்குதல் கொடுத்துட்டு இருக்காங்க.”

“அவங்க ரியாக்‌ஷன் என்ன?”

“தொண்டர்கள் பிரச்சினைக்காக போய் நின்னா ஒரு விஏஓகூட எங்களை மதிக்கறதில்லை. அப்படி இருக்கும்போது என்ன சொல்லி நாங்க உறுப்பினர்களை சேர்க்கறது? எங்களுக்கு என்ன மரியாதை கொடுக்கறீங்கன்னு அவங்க எதிர்கேள்வி கேட்கறாங்களாம். அதிமுகலயும் வேகமா உறுப்பினர்களை சேர்த்துட்டு இருக்காங்க. அங்க குறிப்பிட்ட உறுப்பினர்களை சேர்த்தா நிர்வாகிகளுக்கு இவ்ளோன்னு ஸ்வீட் பாக்ஸ் கொடுக்கறதா மாவட்ட செயலாளர்கள் அறிவிச்சிருக்காங்க. அதனால திமுகவை விட அதிமுகல உறுப்பினர் சேர்க்கையோட வேகம் அதிகம்னு சொல்லலாம்.”

“அமைச்சரவை மாற்றத்துக்கு பிறகு நிதித்துறை எப்படி இருக்கு?”

“பிடிஆரை நிதித்துறையில இருந்து மாத்தினதை நிதித்துறை அதிகாரிகள் ரசிக்கல. பிடிஆர் நிதித்துறையை ஒரு முனைப்போடு ஒழுங்குபடுத்தி வச்சிருந்தார். எந்த இலாகாவுக்கு நிதி தேவை, எந்த துறை நிதியை சரியா பயன்படுத்தலைங்கிற விஷயங்களை விரல் நுனியில் வச்சிருந்தார். அதுக்கு ஏத்த மாதிரி நிதியை ஒதுக்கினார். இனி அப்படியெல்லாம் நடக்குமாங்கிறது சந்தேகம்னு நிதித்துறை அதிகாரிகள் பேசிக்கறாங்க.”

“அமைச்சர்களைத் தொடர்ந்து அதிகாரிகளையும் ஸ்டாலின் மாத்தி இருக்காரே?”

“ஆமாம் தன்னோட முதன்மை செயலாளரா இருந்த உதயசந்திரனை நிதித்துறை செயலாளரா மாத்தி இருக்கார். அதுபோல சென்னை மக்களுக்கு நல்லா பரிச்சயமான ஜே.ராதாகிருஷ்ணனை சென்னை மாநகராட்சி ஆணையரா நியமிச்சு இருக்கார். சென்னையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க அவரை இந்த பதவிக்கு கொண்டு வந்திருக்கறதா பேசிக்கறாங்க. உள்துறை செயலாளர் பொறுப்புக்கு அமுதாவை நியமிக்கறத்துக்கு முன்னால, அவரைக் கூப்டு பேசி இருக்கார். ‘காவல்துறையின் செயல்பாடு எனக்கு திருப்தியா இல்லை. புது டிஜிபி வரப்போறார். அவர் வந்ததும் நீங்களும் அவரும் சேர்ந்து காவல்துறையை ஒழுங்குபடுத்தணும்’னு சொல்லி இருக்காராம்.”

“சரி, கர்நாடாகாவுல பாஜக தோத்திருக்கே… அண்ணாமலை செல்வாக்கு குறையுமா?”

”அண்ணாமலை மேல கர்நாடகா பாஜகவினருக்கு அதிருப்தி இருக்கு. அண்ணாமலை பிரச்சாரம் பண்ண இடத்திலலாம் பாஜக அமோகமா ஜெயிச்சிருக்குனு அண்ணாமலை ஆட்கள் செய்தி பரப்புறாங்க. இதில கர்நாடக பாஜகவினர் கடுப்பாகியிருக்காங்க”

“அப்போ அவர் பிரச்சாரம் பண்ண இடங்கள்ல பாஜக ஜெயிக்கலையா?”

“பாஜக எந்த இடத்திலதான் ஜெயிச்சது? மொத்தமே 66 இடத்துலதானே ஜெயிச்சிருக்கு. இதில என்ன சொந்தம் கொண்டாட வேண்டியிருக்குனு கேக்குறாங்க. கட்சியை முன்னிலைப்படுத்தாம தன்னை மட்டும் முன்னிலைப்படுத்துறார்னு குற்றம்சாட்டுகிறார்கள்”

“இது எப்பவும் இருக்கிற குற்றச்சாட்டுதானே. புதுசா இல்லையே?”

“ஆமாம், ஆனா இந்த முறை அந்தக் குற்றச்சாட்டுக்கு வேகம் வந்திருக்கு. சமூக ஊடகங்கள்ல அண்ணாமலை புகழ் பாடுறது கொஞ்சம் குறையும்னு எதிர்பார்க்கலாம்”

”கர்நாடகத்துல தோத்துனால இங்க அதிமுக கை ஓங்கும்னு பாஜக பயப்படுதுனு ஒரு செய்தி வருதே”

“ஆமா. ஆனா அதிமுகவுக்கு பாஜகவைவிட்டா வேறு வழி இல்லை. ஒரே நேரத்துல மத்தியிலும் மாநிலத்திலும் எதிர் அரசியல் பண்ண முடியாதுங்கிறது அதிமுகவினருக்குத் தெரியும், பாஜகவினருக்கும் தெரியும். ஆனா கர்நாடக தேர்தல் தோல்வினால ஒரு முக்கியமான மாற்றம் நடக்கப் போகுது. 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல ராமநாதபுரம் தொகுதியில் மோடி நிக்கப்போறதா இதுவரைக்கும் ஒரு பேச்சு இருந்துச்சு. மோடிகூட அதுல ஆர்வமா இருந்தார். கர்நாடக மாநிலத்துல பிரதமர் பல நாட்கள் பிரச்சாரம் செஞ்சும் பாஜக படுதோல்வி அடைஞ்சதால, ராமநாதபுரத்துல மோடியை நிக்க வச்சு ரிஸ்க் எடுக்கணுமான்னு பாஜக யோசிக்குது. கடந்த முறை தெற்கில் வயநாடு தொகுதியிலயும், வடக்கில் அமேதி தொகுதியிலயும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதுல அமேதி தொகுதியில தோத்ததால ராகுல் காந்தியோட இமேஜ் சரிஞ்சுது. ஒருவேளை மோடி ராமேஸ்வரத்துல போட்டியிட்டு தோத்தா அவரோட இமேஜ் போயிடுமோன்னு பாஜக நினைக்குது. அதனாலதான் அந்த விஷயத்தை மறுபரிசீலனை பண்றாங்க.”

“கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் போவாரா?”

“கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழால கலந்துக்க முதல்வர் ஸ்டாலினை ராகுல் காந்தி அழைச்சிருக்கார். ஆனா அதுல கலந்துக்கலாமா வேணாமான்னு முதல்வர் யோசிக்கிறார். இதுக்கு காரணம் மேகதாது அணை. கர்நாடக மாநில தேர்தல்ல காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கைல மேகதாது அணை கட்ட 9,000 கோடி ஒதுக்குவோம்னு சொல்லி இருக்காங்க. அங்க அணை கட்டினா தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீர் வர்றது குறைஞ்சிடும். கர்நாடக அரசு மேகதாது அணை கட்டினால் தமிழக பாரதிய ஜனதா கடுமையாக எதிர்க்கும் ஆனால் திமுக இது பற்றி எதுவுமே பேசலையேன்னு ஏற்கெனவே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்காரு. இந்த நேரத்துல பதவியேற்பு விழாவுக்கு நாம போகணுமான்னு முதல்வர் யோசிக்கறாராம்.”

”எல்லோரையும் யோசிக்க வச்சிருச்சு கர்நாடக தேர்தல்”

“ஆமாம், ஓபிஎஸ் கூட இருக்கிற வைத்திலிங்கம் கூட யோசிச்சுக்கிட்டு இருக்கிறார்”

“என்ன எடப்பாடி பக்கம் ஜம்ப் பண்ணப் போறாரா?”

“கரெக்ட்டா பிடிச்சிட்டுங்க. தஞ்சாவூர் தன்னோட கோட்டைன்னு வைத்திலிங்கம் எப்பவும் பெருமையா சொல்வார். ஆனா இப்ப அங்கயே எடப்பாடி பெரிய அளவுல கூட்டத்தை நடத்தி இருக்கார்.இதனால வைத்திலிங்கத்தோட ஆதரவாளர்கள் சோர்வாகி இருக்காங்க. ‘டிடிவி தினகரன், சசிகலான்னு திரும்பவும் பழைய சிஸ்டத்துக்கே ஓபிஎஸ் நம்மளை கூட்டிட்டு போகப் பார்க்கிறாரு. இதெல்லாம் நமக்கு சரிபடாது. நாம எடப்பாடி கூடவே சேர்ந்திடலாம். நீங்களே எடப்பாடிகிட்ட பேசுங்க. உங்களை அவர் நிச்சயம் ஏத்துக்குவார்’னு வைத்திலிங்கத்தோட காதை அவரோட ஆதரவாளர்கள் கடிச்சிட்டு இருக்காங்களாம்.”

“ஓபிஎஸ்கிட்ட கூட்டம் குறைஞ்சிக்கிட்டே வருதே?”

“ஆமாம். தினகரன் பக்கத்திலிருந்தும் முழுமையான ஆதரவு கிடைக்காது போல. ஓபிஎஸ் – தினகரன் சந்திப்பின்போது எடப்பாடி தன்னை எப்படியெல்லாம் ஏமாற்றினார் என்று ஓபிஎஸ் புலம்பினாராம். எல்லாவற்றையும் கேட்ட தினகரன், அவர் போனதும் பக்கத்துல இருந்தவங்ககிட்ட ‘இவர் ஒரு சந்தர்ப்பவாதி. இவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அதிகம் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள்” என்று எச்சரித்திருக்கிறாராம்.”

”பாவம் ஓபிஎஸ்”

“அவரைவிட பாவம் அவரை நம்பி வந்தவங்கதான்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...