சமீப காலமாக வரும் திரைப்படங்கள் பான் இந்தியா சினிமாக்கள் என்ற பெயரில் ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஒருவரை நடிக்கவைத்து நட்சத்திர குவியலுடன் இருக்கின்றன. இந்த சூழலில் ஆசிப் அலி, அமலா பால், ஷராபுதீன் என்று 3 பேரை மட்டுமே வைத்து பரபரப்பான ஒரு த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அர்பாஸ் அயூப். அமேசான் ப்ரைம் ஓடிடியில் இப்படம் வெளியாகி உள்ளது.
ஆட்களோ, வாகனங்களோ வராத ஒரு பாலைவனப் பகுதியில் லெவல் கிராஸிங்கில் கேட் கீப்பராக இருக்கிறார் ஆசிப் அலி. ஒரு நாள் அவர் பணியாற்றும் லெவல் கிராஸிங்குக்கு அருகில், ரயிலில் இருந்து விழுகிறார் அமலா பால். அவரை தூக்கி வந்து சிகிச்சை கொடுக்கிறார் ஆசிப் அலி.
போதை மருந்து பழக்கம் உள்ள தனது கணவர் ஷராபுதீனிடம் இருந்து தப்பிப்பதற்காக தானே ரயிலில் இருந்து குதித்த்தாக சொல்கிறார் அமலா பால். ஆசிப் அலியும் அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் ஆசிப் அலி அந்த லெவல் கிராஸிங்கின் கேட் கீப்பர் அல்ல என்பதையும், அவர் 4 பேரை கொலை செய்துவிட்டு ஒளிந்து வாழ்பவர் என்பதையும் அறிந்துகொள்கிறார் அமலா பால். அதனால் ஒருவித எச்சரிக்கை உணர்வுடன் அவருடன் பழகுகிறார்.
அடுத்த நாளில் அமலா பாலை தேடி அந்த லெவல் கிராஸிங்குக்கு வருகிறார் ஷராபுதீன். அமாலா பால் சொன்னதற்கு எதிர்மறையான ஒரு கதையை அவர் ஆசிப் அலியிடம் சொல்கிறார். அமலா பால் ஒரு சைக்கோ. அவர் ஒரு கொலையாளி. தானே ரயிலில் இருந்து குதித்துள்ளார் என்று சொல்லும் ஷராபுதீன், அமலா பாலை அங்கிருந்து அழைத்துச் செல்லப்போவதாக கூறுகிறார்.
அவரால் அமலாபாலை அழைத்துச் செல்ல முடிந்ததா? அதற்கு ஆசிப் அலி சம்மதித்தாரா? ஷராபுதீன், அமலா பால் ஆகிய இருவரில் யார் உண்மையான சைக்கோ? ஆசிப் அலியின் பின்னணி என்ன என்பதுதான் படத்தின் கதை.
3 பேர் மட்டுமே நடித்திருந்தாலும், அது கொஞ்ச்சமும் தோன்றாத வண்ணம் பரபரப்பாக செல்கிறது கதை. பெரும்பாஅலும் ஒரு அறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நகரும் கதையை கொஞ்சம்கூட போரடிக்காத வண்ணம் ஒளிப்பதிவு செய்துள்ளார் கேமராமேன் அப்பு பிரபாகர்.
யாருமே வராத இடத்தில் எதற்காக ஒரு லெவல் கிராஸ், அந்த லெவல் கிராஸ் பகுதியை சோதனையிட ஆண்டுக் கணக்கில் ஒருவர்கூட வரமாட்டாரா என்பதுபோன்ற ஒரு சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், பரபரப்பான கதை அதை யோசிக்க விடாமல் செய்கிறது.