சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ரண்வீர் சிங். பாலிவுட்டின் டாப் நட்சத்திரங்களில் ஒருவர். தீபிகா படுகோனின் கணவர். இந்தப் புகழ் போதாது என்று நிர்வாணமாக படங்களை வெளியிட்டார். சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.
சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் தனது படங்களைப் பதிவிட்டிருந்தார் ரண்வீர் சிங். படங்களை பதிவிடுவது என்பது எல்லோரும் செய்யும் விஷயம்தான். ஆனால், இந்தப் படங்களில் ஒரு வித்தியாசம். ரண்வீர் உடலில் உடைகள் இல்லை. உடனே சமூக ஊடகங்கள் பற்றிக் கொண்டன. லைக்குகள் ஷேர்களுடன் கண்டனங்களும் ஏராளமாய் குவிந்தன.
பல லட்சம் ரசிகர்களை கொண்டிருக்கும் ரண்வீர் சிங் நிர்வாணமாக புகைப்படம் எடுக்கலாமா? இது இளைய சமூகத்தினரிடம் நச்சைப் பரப்பும் அல்லவா? இந்திய பண்பாடு, கலாச்சாரம் என்னாவது? என்று கண்டனக் கேள்விகள் அதிகரித்தன.
மகாராஷ்டிராவை சார்ந்த ஒரு தன்னார்வ அமைப்பு கேள்விகள் கேட்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் காவல்துறையில் புகாரும் அளித்தது. காவல்துறையும் அந்த புகாரை வாங்கி எஃப் ஐ ஆர் பதிந்திருக்கிறது.
விதவைகளுக்காகவும் ஆதரவற்ற விவாசய குடும்பத்தை சார்ந்த குழந்தைகளுக்காகவும் ஷ்யாம் மங்காராம் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் லலித் தேக்சாந்தானிதான் புகார் கொடுத்திருக்கிறார். தனது புகாரில், ‘தனக்கு ரண்வீரின் நிர்வாணப் புகைப்படங்களை நண்பர் ஒருவர் அனுப்பியதாகவும் அந்தப் படங்களை உற்றுப் பார்த்தபோது ரண்வீரின் அந்தரங்க உறுப்புகள் தெரிந்தது. நடிகர்கள், நடிகைகள் மீது மோகம் கொண்ட இளம் பருவத்தினரை இது பாதிக்கும். பேப்பர் பத்திரிகைக்காக ரண்வீர் சிங் இப்படி புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அதற்கு பணம் பெற்றிருக்கிறார். இந்த செயல் பணம் சம்பாதிப்பதற்கு இளம் பருவத்தினரைத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மகாராஷ்டிரா காவல்துறை ரண்வீர் மீது ஐபிசி 292, 293, 509 ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்திருக்கிறது. பிரிவு 292 ஆபாசப் படங்கள் விற்பனை குறித்தும், பிரிவு 293 ஆபாசப் பொருட்களை இளம் பருவத்தினருக்கு விற்பனை குறித்தும், பிரிவு 509 பெண்களை அவதிமதிக்கும் செயலாகவும் குறிப்பிடுகிறது. இந்த மூன்றுப் பிரிவுகள் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 67ஏயின் அடிப்படையிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இத்தனை பிரிவுகளில் வழக்கு தேவையா? அரசு அதிகப்படியாக செயல்படுகிறதா என்று கேள்வி இப்போது சமூக ஊடகங்களில் எழுப்பப்படுகிறது.
பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இது போன்ற சிக்கல்களை இதற்கு முன் எதிர் கொண்டிருக்கிறார்கள்.
சிலுக்கு ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான டர்டி பிக்சர் திரைப்படத்தின் சில காட்சிகளுக்காக வித்யா பாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஒரு ஃபேஷன் ஷோவில் கணவர் அக்ஷய் குமாரின் ஜீன்ஸ் பட்டனைக் கழற்றினார் என்று டிவிங்கிள் கன்னா மீதும் அக்ஷய் குமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. டிவிங்கிள் கன்னா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஒரு தமிழ் மாலை நாளிதழில் வெளியான புகைப்படங்களுக்காக ஷில்பா ஷெட்டி மீதும் ரீமா சென் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்தப் படங்கள் ஆபாசமாக இருந்தன என்பது குற்றச்சாட்டு.
பூஜா பட்டின் ரோக் திரைப்பட போஸ்டர்கள் ஆபாசம் என்று புகார் பதிவு செய்யப்பட்டு பூஜா பட்டின் மீது வழக்கு பதியப்பட்டது.
இவையெல்லாம் 2000 ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள். இவற்றுக்கு முன் 1995இல் மிலிந்த் சோமன், மது சாப்ரே நடித்த ஒரு விளம்பரப் படம் ஆபாசமாக இருந்ததாக அவர்கள் மீது அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இப்படி ஏராளாமான ‘ஆபாச’த்துக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
நிர்வாணமாய் புகைப்படம் எடுத்து வெளியிடுவது தவறா என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகிறது. நிர்வாணம் என்பது ஆபாசம் அல்ல என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. சட்டமும் அப்படி சொல்லவில்லை என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
பார்ப்போம் வழக்கு என்னவாகிறது என்று?