சத்யமங்கலம் பகுதியில் மனிதர்களை புலிகள் தாக்கிய சம்பவங்களைத்தான் நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது புலிகளை மனிதர்கள் வேட்டையாடி, அதன் கறியைச் சாப்பிட்டதாக ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புலி வேட்டையில் ஈடுபட்டதாக ஹரியானாவைச் சேர்ந்த 6 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து புலித்தோல், சிறுத்தை தோல், புலிநகம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் எதற்காக புலியைத் தேடி சத்தியமங்கலம் காட்டுக்கு வந்தார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இதற்கான விளக்கத்தை வனத்துறை அதிகாரியான காஞ்சனா கொடுத்துள்ளார்.
“இப்போது புலி வேட்டையில் ஈடுபட்டிருக்கும் இந்த 6 பேரும் ஹரியாணா மாநிலத்தின் பஞ்ச்குலா என்ற ஊரைச் சேர்ந்த பழங்குடிகள். இவர்களின் பிரதான வேலையாக வேட்டையாடுதல் இருந்திருக்கிறது. இவர்களின் மூதாதையர்கள் பண்டையகாலத்தில் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களிடம் வேலை பார்த்தவர்கள். குறிப்பாக அரசர்கள் வேட்டைக்குச் செல்லும்போது அவர்களை அழைத்துச் செல்வார்கள். தங்களின் அனுபவ அறிவை வைத்து, கால்தடங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு புலிகள் இருக்கும் இடத்தை இவர்கள் கண்டறிவார்கள். இவர்கள் சொல்லும் தகவலை வைத்து அரசர்கள் புலிகளை வேட்டையாடுவார்கள்.
ராஜாக்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் காலம் முடிந்த பிறகும், இவர்கள் தனிக் குழுக்களாக புலி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். தனிக் குழுக்களாகவும் புலிகளை வேட்டையாடும் திறமை இவர்களுக்குள் இருக்கிறது. புலிகளுக்காக ஆறுகள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் காத்திருந்து, அவை தனியாக வரும்போது பொறிவைத்து பிடிப்பது அவர்களின் வழக்கம். சாதாரண மக்களைப் போல புலிகளைப் பார்த்து அவர்கள் பயப்படுவதில்லை” என்கிறார் காஞ்சனா.
வட இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்ததால், இபோது அதைத் தேடி தெற்குப் பக்கம் இவர்கள் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த 6 பேர் கொண்ட கும்பல் ஏற்கெனவே புலி வேட்டைக்காக கடந்த 2012-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் கொள்ளேகால் பகுதியில் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.. சிறையில் இருந்து விடுதலை ஆனபின் மீண்டும் புலி வேட்டையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். புலித்தோல், புலி நகம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் இவர்கள், தாங்கள் புலிகளை கொன்றதற்கான தடம் தெரியக் கூடாது என்பதற்காக அவற்றின் கறியை சமைத்து சாப்பிடுகின்றனர். கடந்த 10 ஆண்டுகாளாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவர்கள் சுற்றி வருகின்றனர்.