No menu items!

வங்கதேசத்தின் புதிய தலைவர் – யார் இந்த முகமது யூனுஸ்?

வங்கதேசத்தின் புதிய தலைவர் – யார் இந்த முகமது யூனுஸ்?

வங்கதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்றவரான முகமது யூனுஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தில் சுதந்திரத்துக்காக போராடியவர்களின் வாரிசுகளுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் முதல் நடந்துவரும் புரட்சியின் காரணமாக, ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அரசு தூக்கி எறியப்பட்ட்து. அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகியதைத் தொடர்ந்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி முகமது சஹாபுதீன் உத்தரவிட்டார்.

வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தளபதிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனிசை இடைக்கால அரசின் தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிசை நியமித்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் யார் என்ற கேள்வி சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

வங்கதேசத்தின் ஹடாசாரி பகுதியில் கடந்த 1940-ம் ஆண்டில் பிறந்தவர் முகமது யூனுஸ். அவரது அப்பா நகைக்கடை வைத்திருந்தார். அமெரிக்காவின் புகழ்பெற்ற வாண்டர்பில்ட் பல்கலைகழத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் முகமது யூனுஸ். பின்னர் வங்கதேசம் திரும்பிய முகமது யூனுஸ், பொருளாதார ரீதியில் பின்தங்கிய தொழில் முனைவோருக்கு உதவுவதற்காக கிராமீன் பேங்க் என்ற வங்கியை கடந்த 1983-ம் ஆண்டில் அமைத்தார்.

வங்கதேச பொருளாதாரத்தை உயர்த்துவதில் இந்த வங்கி மிகப்பெரிய அளவில் பங்காற்றியது. மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போன்று செயல்பட்டு வந்த ஏராளமானோர் இந்த வங்கியில் கடன் பெற்று தங்கள் தொழிலை விரிவுபடுத்தினர். வங்கதேசத்தில் பல லட்சம் பேரை வறுமையின் பிடியில் இருந்து கிராமீன் பேங்க் மீட்டது. கிராமீன் பேங்க் இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,000 அளவிலான கடன்களை 9 கோடி ஏழைகளுக்கு வழங்கியுள்ளது.

முகமது யூனுஸின் சேவைகளை பாராட்டி, 2006-ம் ஆண்டில் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரது கிராமீன் டெலிகாம் நிறுவனத்தின் பங்களிப்பு காரணமாக 1997 முதல் 2007-ம் ஆண்டிற்குள் 50 ஆயிரம் கிராமங்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேரின் கைகளில் செல்போனை கொண்டு சேர்த்தார்.

எல்லாம் சரியாக சென்றுகொண்டிருந்த நேரத்தில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும், முகமது யூனுஸுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. கிராமீன் டெலிகாம் நிறுவனத்தில் 18 கோடி ரூபாயை கையாடல் செய்த புகாரில் முகமது யூனுஸ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொழிலாளர் சட்டத்தை மீறியதாக கடந்த ஜனவரியில் முகமது யூனுஸ்க்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ஜாமீனில் இருக்கும் அவர் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவையெல்லாம் அரசியல் காரணங்களுக்காக தன் மீது போடப்பட்ட வழக்குகள் என்பது முகமது யூனுஸின் வாதமாக இருந்தது. பதிலுக்கு முகமது யூனுஸ் வட்டி என்ற பெயரில் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சுவதாக ஷேக் ஹசீனா குற்றம் சாட்டிவந்தார்.

உள்ளூரில் எதிர்ப்புகள் இருந்தாலும் வெளிநாடுகளில் புகழ்பெற்ற மனிதராக இருக்கிறார் முகமது யூனுஸ், சர்வதேச அளவில் பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கும் முகமது யூனுஸ், இப்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் ஆலோசகராகவும், சிறப்பு தூதராகவும் இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...