“கவர்னர் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறாரே, ஏதாவது விசேஷ காரணம் இருக்கா?” என்று அலுவலகத்துக்குள் நுழைந்த ரகசியாவிடம் கேட்டோம்.
“ஆளுநர் இப்படி பேசுவதை கமலாலயத்துக் கட்சித் தலைவர்கள் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். வெளியில் ஆளுநர் துணிச்சலாக கருத்துக்களை வைக்கிறார் என்று பாராட்டினாலும் கட்சிக்குள் ஆளுநர் குறித்து எரிச்சல் மூத்த தலைவர்களிடம் இருக்கிறது. ஆளுநர் இப்படி பேசுவது திமுகவுக்குதான் சாதகமாக போகும் என்று கட்சி மேலிடத்துக்கு சொல்லப் போகிறார்களாம்”
“ஏற்கனவே ஒரு தடவை இது மாதிரி பாஜககாரங்க கம்ப்ளைண்ட் பண்ணாங்கனு நியூஸ் வந்ததே?”
“ஆமாம். அதனாலதான் கொஞ்ச நாள் சர்ச்சையில்லாம இருந்தார் கவர்னர்னு சொல்றாங்க”
“இப்ப என்ன செய்யப் போறாங்களாம்?”
“தமிழ்நாடு அரசு கொண்டு வர நினைக்கிற விஷயங்களுக்கு கவர்னர் தடையா இருக்கிறார்னு இங்க சொல்லப்படுது. முக்கியமா ஆன்லைன் ரம்மி விஷயத்துல கவர்னர் தடையா இருக்கிறார் ஆளும் கட்சியினர் சொல்றாங்க. அந்த சமயத்துல கவர்னர் இப்படி பேசியிருக்கிறது பாஜககாரங்களை டென்ஷனாக்கியிருக்கு.”
“இப்போதைக்கு தமிழ்நாட்டு கட்சியிலேயே ரொம்ப டென்ஷனா இருக்கிறது பாஜகதான் போல”
“ஆமா. கரெக்டா சொன்னீங்க. ரொம்ப நாள் கழிச்சு இந்த வாரம்தான் கமலாலயத்துக்கு அண்ணாமலை வந்திருந்தார். வழக்கம்போல எல்லோரையும் சந்தித்து போட்டோ எடுத்துக்கிட்டார். இது அங்கிருந்த சில தலைவர்களுக்கு டென்ஷன்”
“அண்ணாமலைக்கு சென்ற இடமெல்லாம் எதிர்ப்பாக இருக்கிறது போல”
“கமலாலயத்துல மட்டுமில்லை. கர்நாடகத்துலயும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்குனு சொல்றாங்க. அங்க பாஜகவின் கூடுதல் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலையை போட்டிருக்காங்க. அதனால அங்க நிறைய இடத்துக்கு சுற்றுப் பயணம் செய்யறார். போற இடமெல்லாம் அவருடைய ஆதரவாளர்கள் வந்து பிரமாண்டமா வரவேற்பு கொடுக்கிறாங்க. இதெல்லாம் உள்ளூர் பாஜக தலைவர்களுக்கு கடுப்பைக் கொடுத்திருக்கு. ஒரு இடத்துல கிரேன்ல மாலையை எடுத்து அண்ணாமலைக்கு போட்டிருக்காங்க. இப்படிலாம் பண்ணா லோக்கல் ஆட்களுக்கு கடுப்பாகும்ல. தன்னோட இமேஜை வளர்த்துக்கிறதுக்கு அண்ணாமலை இந்தத் தேர்தலை பயன்படுத்திக்கிறார்னு டெல்லிக்கு புகார் போயிருக்கு”
“அங்கேயும் புகார் வந்துருச்சா?”
“அது மட்டுமில்ல.. கர்நாடக தேர்தல் பிரச்சாரத்துல தமிழர்கள் வாழ்ற இடங்கள்ல அதிமுகவை விமர்சனம் பண்ணி பேசுறாராம் அண்ணாமலை. இது பாஜகவுக்கு கிடைக்கிற வாக்குகளை பாதிக்கும்னும் புகார் போயிருக்கு”
“அதான் சென்னைக்கு வந்துட்டாரா? ஏப்ரல் 14ல திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் வெளியிடப் போகிறார் போல!”
“அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடும் அதே ஏப்ரல் 14-ம் தேதி ஆருத்ரா நிறுவன விவகாரத்தில் பாஜகவுக்கு உள்ள தொடர்புகளை வெளியிட திமுக திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஆருத்ரா விவகாரத்தில் உண்மை நிலவரம் என்ன அதில் பாரதிய ஜனதாவின் பங்களிப்பு என்ன? குறிப்பாக அண்ணாமலைக்கும் ஆருத்ரா நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது போன்ற விவரங்களை சேகரிக்க உளவுத் துறைக்கும், கட்சியினருக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளாராம்.”
“சபாஷ்… சரியான போட்டி. பிரதமர் வருகிறாரே… வழக்கம்போல் அதிமுக கோஷ்டிகள் அவரை முற்றுகையிடுமா?”
“பிரதமர் சென்னை வரும்போது அவரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார் எடப்பாடி. கூடவே எந்த சூழ்நிலையிலும் உங்களைச் சந்திக்க ஓபிஎஸ்-க்கு அனுமதி தரக்கூடாது என்று நிபந்தனையும் விதித்துள்ளாராம். தம்பிதுரை மூலம் இந்த நிபந்தனையைச் சொல்லி இருக்கிறார் எடப்பாடி.”
“பிரதமருக்கே நிபந்தனை விதிக்கும் அளவுக்கு எடப்பாடி வளர்ந்துவிட்டாரா என்ன?”
“எல்லாம் கட்சிக்காரர்கள் கொடுத்த தைரியம்தான். பாஜகவுடன் நமக்கு கூட்டணியே வேண்டாம் என்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பாஜகவினர் ஓபிஎஸ்ஸுடனும் பேசி வருவதுதான் இந்த கோபத்துக்கு காரணம். இதனால்தான் இந்த முறை ஓபிஎஸ்ஸை நீங்கள் சந்திக்கக் கூடாது என்று பிரதமருக்கு அவர் நிபந்தனை விதித்துள்ளார். அதேநேரத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்று சொல்பவர்களிடம், ‘உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். நாம் சட்டப் போராட்டத்தில்தான் இப்போது முன்னேறியிருக்கிறோம். அங்கும் மேல்முறையீடு மூலம் சிக்கல் தொடர்ந்து நீடிக்கிறது. தேர்தல் கமிஷன் இதுவரை நமக்கு ஆதரவாக எதுவும் சொல்லவில்லை. பாஜகவை விட்டு விலகும் முன் இதைப்பற்றியெல்லாம் நாம் யோசிக்க வேண்டும். அதனால் அவசரம் காட்ட வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார். ஆனால் இதெல்லாம் நியூஸ் இல்லை. அதிமுகவில் ஒரு புதிய தலைவர் உருவாகிக் கொண்டிருக்கிறார்”
“அதிமுகவில் புதிய தலைவரா? யார் அவர்?”
“எடப்பாடியின் மகன் மிதுன் தான் அந்தப் புதிய தலைவர். முன்பு கட்சியிலிருந்து தள்ளி நின்றிருந்த மிதுன் இப்போது கட்சியை வழிநடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துக் கொள்கிறாராம்”
‘அடுத்த வாரிசா? சிறப்பு. சரி, ஓபிஎஸ்ஸின் நிலை என்ன?”
“ஒரு பக்கம் மேல்முறையீடு மூலம் சட்டப் போராட்டம் நடத்தினாலும் இன்னொரு பக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் ஐக்கியம் ஆவதா இல்லை புதுக்கட்சி தொடங்குவதா என்று யோசித்து வருகிறாராம் ஓபிஎஸ். அவர் அமமுகவுக்கு வந்தால் தலைவர் பதவியைக் கொடுக்க தயார் என்று தினகரன் கூறியிருக்கிறார். ஆனால் அக்கட்சியில் ஓபிஎஸ் தனது அணியை இணைப்பதில் அவரது ஆதரவாளர்கள் பலருக்கு விருப்பமில்லை. அப்படி நடந்தால் தாங்கள் எடப்பாடி பக்கம் போய்விடுவோம் என்று அவர்கள் மிரட்டி வருகிறார்கள்.”
“திமுக மீது பாமக மீண்டும் கோபமாகி இருக்கிறதே?”
“ஆமாம். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக பாமகவினர் தூது விட்டுக் கொண்டே இருந்தார்கள். ஆனால் திமுக மேலிடத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. இந்தக் கூட்டணியிலேயே தொடரலாம் என்று திமுக தலைவர் நினைக்கிறாராம். அந்தக் கோபத்தைக் காட்டுவதற்காகதான் என்.எல்.சி.விவகாரத்தில் மாநில அரசை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் திமுகவினர்”
”ஏன் பாமகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள திமுக மறுக்கிறது?”
“பாமகவுக்கு அரசியல் அளவில் பெரிய பலமில்லாமல் இருக்கிறது. கூட்டணியில் சேர்த்து வெற்றிகள் வந்துவிட்டால் மீண்டும் பலம் பெற்றுவிடும். அது எதிர்காலத்தில் தேவையில்லாத சிக்கல்களை தரும் என்று திமுக தலைமை நினைக்கிறது”
“ஓ…வருமுன் காப்போம் திட்டமா? கலாசேத்திரா பிரச்சினை எப்படியிருக்கிறது? பிக்பாஸ் அபிராமி ஆவேசமாய் பேசியிருக்கிறாரே”
“கலாஷேத்ரா நிர்வாகத்தில் உள்ள சில மலையாள லாபியின் கை இதில் இருப்பதாக சிலர் சந்தேகப்படுகிறார்கள். அத்துடன் விவகாரம் வெளியில் வந்து இரண்டு வாரங்கள் கழித்து அபிராமி பேசுவதும் சந்தேகத்தை அதிகரித்திருக்கிறது.”
”அரசின் நிலை என்ன?”
“இதில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். என்று காவல்துறைக்கு சொல்லப்பட்டிருக்கிறதாம். அவசியப்பட்டால் மட்டும் நடவடிக்கை எடுங்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.