பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறியும் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று தந்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. இதன்மூலம் அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றவர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இம்முறை பாரிஸ் ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தருவார் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீம் அதற்கு தடையாகிப் போனார். நேற்று நடந்த போட்டியில் அவர் 92.97 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிய, நீரஜ் சோப்ராவால் 89.45 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே ஈட்டியை எறிய முடிந்தது. ஒலிம்பிக் போட்டியில் இது நீரஜ் சோப்ராவின் சிறந்த செயல்பாடாக இருந்தாலும், நதீம் வீசிய தூரத்தை எட்ட முடியாததால் அவர் வெள்ளிப் பதக்கத்தையே பெற முடிந்தது. இந்த ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து வெண்கலப் பதக்கங்களையே வென்றுவந்த இந்தியா, இந்த வெள்ளிப் பதக்கத்தால் தலை நிமிர்ந்தது.
பாட்டியால் வந்த பிரச்சினை
ஒலிம்பிக்கில் தொடர்ந்து பதக்கங்களை வென்ற நீரஜ் சோப்ரா, ஈட்டி எறியும் வீரரான கதையைப் பார்ப்போம்…
ஹரியாணாவில் உள்ள காண்டிரா கிராமத்தில் ஒரு விவசாயியின் மகனாகத்தான் நீரஜ் சோப்ரா பிறந்தார். நீரஜ்ஜின் பாட்டிக்கு அவரை மிகவும் பிடிக்கும். எந்த நேரமும் ஏதாவது பலகாரங்களைச் செய்து அவருக்கு சாப்பிடக் கொடுப்பார். கேட்டால், “வளர்ற பிள்ளை நல்லா சாப்பிடட்டும்” என்று சொல்வார். பாட்டியின் அதீதமான அன்பினால் சிறு வயதிலேயே நீரஜ் சோப்ராவின் உடல் எடை கூடியது. 11 வயதில் 80 கிலோ எடைகொண்ட பிரம்மாண்ட சிறுவனானார் நீரஜ் சோப்ரா.
பயிற்சியாளரின் பார்வையில் பட்டார்
நீரஜ்ஜின் எடை கூடி, அவர் ஒபிசிட்டியால் பாதிக்கப்படுவதைப் பார்த்து கவலைப்பட்ட அவரது அப்பா சதீஷ்குமார், எடையைக் குறைப்பதற்காக தினமும் மைதானத்தில் நீரஜ்ஜை ஓடச்செய்வார். ஒரு நாள் அப்படி ஓடிக்கொண்டு இருந்தபோது பானிபட்டைச் சேர்ந்த ஈட்டி எறியும் வீரரான ஜெய்வீர். நீரஜ்ஜின் உடல் வாகு ஈட்டி எறிவதற்கு ஏற்றதாய் இருந்ததால் அவருக்கு பயிற்சி அளிக்க விரும்பினார். அவரின் தந்தையிடம் இதற்கு ஒப்புதல் கேட்க, அவரும் சம்மதித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜெய்வீரின் மேற்பார்வையில் பயிற்சி பெற்ற நீரஜ் சோப்ரா, உள்ளூர் முதல் சர்வதேச போட்டிகள் வரை பல வெற்றிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஈட்டி எறியும் போட்டிகளில் வல்லவரும், சர்வதேச சாம்பியனுமான உவே ஹானின் பார்வையில் நீரஜ் பட, அவரை மேலும் பட்டை தீட்டியுள்ளார். இந்த இருவரும்தான் நீரஜ் சோப்ராவின் முக்கிய குருநாதர்கள்.
பொதுவாக தனது முதல் வீச்சிலேயே பதக்கத்தை உறுதி செய்வது நீரஜ் சோப்ராவின் பாணி. ஆனால் இந்த முறை முதலில் ஈட்டியை எறியும்போது நீரஜ் சோப்ராவின் கால் எல்லைக் கோட்டைத் தொட அது பவுலாக அமைந்தது. அடுத்த முறை பவுல் ஆகாமல் இருப்பதில் நீரஜ் சோப்ரா அதிக கவனம் செலுத்த, அவரது ஈட்டி 89.45 மீட்டர் தூரம் சென்று வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளது.
நதீமுக்கு செய்த உதவி
இந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள நதீமும், நீரஜ் சோப்ராவும் நண்பர்கள். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போட்டிக் களங்களில் சந்தித்துள்ளதால், அவர்களின் நட்பு வலுவாக இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் பயிற்சி பெற தரமான ஒரு ஈட்டியைக்கூட வாங்க முடியாமல் நதீம் கஷ்டப்பட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நதீம், “கடந்த 8 ஆண்டுகளாக ஒரே ஈட்டியை வைத்து பயிற்சி பெற்று வருகிறேன். உயர்தரப் போட்டிகளுக்காக பயிற்சி பெற இந்த ஈட்டி போதுமானதாக இல்லை. பழைய ஈட்டி சேதமடைந்து கிடப்பதைப் பற்றி பாகிஸ்தான் தேசிய பெடரேஷனிடமும், எனது பயிற்சியாளரிடமும் பலமுறை கேட்டும் எனக்கு புதிய ஈட்டியை அவர்கள் வாங்கித் தரவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைக் கேள்விப்பட்ட நீரஜ் சோப்ரா, நதீம் புதிய ஈட்டியை வாங்க பாகிஸ்தான் அரசு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பிறகுதான் அவர் புதிய ஈட்டியை பெற்றுள்ளார். அதில் பயிற்சி பெற்று தங்கப் பதக்கமும் வாங்கியிருக்கிறார்.