மலையாளம், தமிழ் இரண்டும் கலந்த இருமொழிப் படமாக வெளியாகி வியாபார ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. இந்த படத்தில் திரைக்கதை உருவாக்கத்தில் பங்கெடுத்ததுடன் தமிழ் பகுதிக்கான வசனங்களை எழுதியுள்ளவர் எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர் மண்குதிரை. ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு மண்குதிரை அளித்த பேட்டி இங்கே.
‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் தொடக்கத்தில் ‘உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’ என்ற ஒரு திருக்குறள் இடம்பெறுகிறது. அந்த திருக்குறளுக்கான விளக்கவுரை என்று இந்த படத்தை எடுத்துக்கொள்ளலாமா?
இதுதான் படமா என்றால் இல்லை. திரைக்கதை உருவாக்கத்தின் போது இந்த படத்தை ஒரு தமிழ் கவிதையை வைத்து தொடங்கலாம் என்று பேசினோம். அதற்காக இந்த திருக்குறள் மற்றும் சில சங்ககால கவிதைகளை கொடுத்திருந்தேன். திருவள்ளுவர் ஒரு அறியப்பட்ட திருவுருவாக இருப்பதால் இந்த திருக்குறளை இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தேர்வு செய்தார்.
இன்னொரு பார்வை… காணாமல் போன சுந்தரம் இருக்கிறானா இல்லையா என்பது நிச்சயமற்று இருக்கிறது. இதனால் அவனது வீட்டார் அவனுக்கு இறுதிச் சடங்குகள் செய்யாமல் இருக்கிறார்கள். இந்நிலையில், இறந்துபோன சுந்தரம் தனக்கான படையலை ஜேம்ஸ் ரூபத்தில் வந்து பெறுகிறான் என்று எடுத்துக்கொள்ளலாமா? கடைசியில், சுந்தரமாக இருக்கும் ஜேம்ஸுக்கு மதிய உணவு படைக்கிறார்கள். சுந்தரத்தின் மனைவி சமைத்தது. அவனது மகள் ரசம் கொண்டுவந்து ஊற்றுகிறாள். வீட்டின் வெளியே ஒரு காகம் காத்திருக்கிறது. சுந்தரம் சாப்பிட்டுவிட்டு தூங்குகிறான். சுந்தரத்தின் ஆன்மா நிறைகிறது. காகம் பறந்துசெல்கிறது. மறுபடியும் ஜேம்ஸ் சுயநினைவுக்கு வருகிறார். இதன்மூலம் சுந்தரத்தின் இறப்பை அவனது குடும்பத்துக்கு சொல்ல இந்த மாய யதார்த்த சம்பவம் நிகழ்கிறது என கொள்ளலாமா?
சுந்தரம் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம். இதுபோல் பலவிதமான சாத்தியங்களை இந்தப் படத்தில் இயக்குநர் உருவாக்கியுள்ளார். பார்வையாளர்கள் எல்லா சாத்தியங்களையும் பார்க்க முடியும் என்பதுதான் இந்தப் படத்தின் முக்கியத்துவம்.
இன்னொன்று மலையாளிகள் ஆழ் மனதில் தமிழ் நிலமும் கலைகளும் இருக்கிறது. அதன் வெளிப்பாடாக இதனை கொள்ளலாம் என்கிறார்கள். நீங்கள் இதனை ஏற்றுக்கொள்வீர்களா?
அப்படியும் பார்க்கலாம். ஒரு காலத்தில் தமிழ் பகுதிகளைப் போலவே கேரளாவிலும் நாடகம் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் அப்பா ‘சாரதி தியேட்டர்ஸ்’ என்று ஒரு நாடகக் குழு வைத்திருந்தார். பிரபல மலையாள நடிகர் திலகன் கூட அந்த குழுவில் நடித்துள்ளார். இந்த படத்தில் மம்முட்டி உட்பட நாடகக் குழுவினர் பயணம் செய்யும் பேருந்தில் ‘சாரதி தியேட்டர்ஸ்’ என்று எழுதியிருக்கும். அந்த பேருந்தில் ஒரு இடத்தில் ‘ஓரிடத்து’ என்று எழுதியிருக்கும். ‘ஓரிடத்து’ என்றால் ஒரு ஊர்ல என்று அர்த்தம். ஒரு ஊர்ல நடக்கும் சம்பவம் என்றும் இந்த படத்தை எடுத்துக்கொள்ளலாம்.
‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற தலைப்பின் அடிப்படையில் பார்த்தால், மொத்த படமுமே வண்டியில் போய்க் கொண்டிருக்கும்போது தூங்கும் ஜேம்ஸ் பார்க்கிற ஒரு கனவு என்று எடுத்துக்கொள்ளலாமா?
எடுத்துக்கொள்ளலாம். அப்படித்தான் முதலில் நாங்கள் கதையை உருவாக்கினோம்.
ஜேம்ஸ் ஊர் சாவடியில் ஒரு கதை சொல்கிறார். அதன் மூலம் எதாவது உணர்த்த விரும்புகிறீர்களா? அதாவது, ஜேம்ஸால் நிகழ்ந்த விபத்தில் சுந்தரம் இறந்துவிட்டதாக கொள்ளலாமா?
இல்லை. தமிழ், மலையாளம் இரண்டு பண்பாடும் நெருக்கமாக இருக்கும் அதே நேரத்தில் நிறைய முரண்களும் இருக்கிறது. இரண்டு மொழிக்காரர்களும் ஒருவரை ஒருவர் கேலி செய்துகொள்வது, வசைபாடுவது இருக்கிறது. இந்தப் படம் அதையும்தான் கையாள்கிறது. அதைத்தான் சுந்தரமாக மாறிய ஜேம்ஸ் பேசும்போது, “வந்தான் ஒரு கேணப்பய, பார்த்தாலே மலையாளி’ என்று தெரிந்தது என்கிறார்.
இன்னொன்று… சுந்தரமாகத்தான் ஜேம்ஸ் வந்திருக்கிறான் என்பதை உணர்த்த சில காட்சிகள் தேவைப்பட்டது. அதற்காகத்தான் இந்த காட்சியையும் மதுக்கடை காட்சியையும் உருவாக்கினோம். வந்துள்ளது சுந்தரம்தான் என்று சுந்தரத்திற்கு நெருக்கமான மண்டையன் உணர்ந்து ஏற்றுக்கொள்வதாக இந்த காட்சிகள் இருக்கும்.
படத்தில் ஒரு காலக்குழப்பம் இருக்கிறது. வீடுகள் அமைப்பு, பின்னணியில் ஒலிக்கும் பாடல்கள் மற்றும் வசனங்கள் 70களில் கிராமத்தில் நிகழ்வதுபோல் உள்ளது. ஆனால், எல்லார் வீடுகளிலும் தமிழ்நாடு அரசு கொடுத்த இலவச டிவி இருப்பது, மதுக்கடை போன்றவை 2000த்தை ஒட்டிய இருக்கிறது. இது தெரிந்தே வைக்கப்பட்டதா?
ஆமாம். இந்த படத்தில் செல்போன் பயன்படுத்துகிறார்கள். செல்போன் 95இல் வந்துவிட்டது என்றாலும் பரவலாக வெகுமக்கள் பயன்படுத்தியது 2000த்துக்கு பிறகுதான். இதைப் பற்றி நான் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியிடம் கேட்டேன். அப்போது அவர், ‘காலம் இல்லாத காலத்தில் நடப்பதுதான் இந்தக் கதை” என்று சொன்னார்.
படத்தின் தொடக்கத்தில் இருந்து, கடைசி வரை பின்னணியில் அந்தந்த காட்சிக்கு பொறுத்தமாக சினிமா பாடல்கள், வசனங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றனவே. அதை எல்லாம் யார் தேர்வு செய்தது?
இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரிதான் தேர்வு செய்தார். அவரது அம்மா வழி மூதாதையர் தமிழர்கள்தான். எனவே, தமிழ் மேல் அவருக்கு தனி பிரியம் உண்டு.
‘ஏலே’ படத்தின் இயக்குநர் ஹலீதா ஷமீம் தனது படத்தின் அழகியல் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தில் திருடப்பட்டுள்ளது என்று சொல்லியுள்ளார். இதற்கு உங்கள் பதில் என்ன? ‘ஏலே’ படம் நீங்கள் பார்த்தீர்களா?
‘ஏலே’ படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால், ‘ஏலே’ படம் ஷூட் செய்யப்பட்ட அதே ஊரில்தான் நாங்களும் படப்பிடிப்பை நடத்தினோம். மேலும், அந்த படத்தில் நடித்துள்ள சிலர் எங்கள் படத்திலும் நடித்துள்ளார்கள். அதனால், இந்த குற்றச்சாட்டை அவர் வைக்கிறாரா என்று தெரியவில்லை.
கதையை முடிவு செய்த பின்னர்தான் படப்பிடிப்பு நடந்த மஞ்சநாயக்கன்பட்டி ஊரை தேர்வு செய்தோம். நவீன மாற்றங்கள் தொடாத ஒரு ஊர் எங்களுக்கு தேவைப்பட்டது. கேமராமேன் தேனி ஈஸ்வர்தான் இந்த ஊரை எங்களுக்கு பரிந்துரை செய்தார். அவரது அப்பா அந்த ஊரில் வேலை பார்த்துள்ளார். ‘ஏலே’ மட்டுமல்ல ஏற்கெனவே சுதா கொங்கரா ‘தங்கம்’ படமும் அந்த ஊரில் எடுக்கப்பட்டுள்ளது.