கலைஞரின் படங்களில் அரிதான புகைப்படங்களில் ஒன்று அவர் தரையில் அமர்ந்திருக்கும் கருப்பு வெள்ளைப் படம். இந்த படத்தை எடுத்திருப்பவர் பிரபல புகைப்பட கலைஞரும் ஒளிப்பதிவாளருமான வைட் ஆங்கிள் ரவிசங்கரன்.
கலைஞரை வைத்து அந்தப் படத்தை எடுத்த அனுபவத்தைப் பற்றி வைட் ஆங்கிள் ரவிசங்கரனிடம் கேட்டோம்…
“சுபமங்களா என்ற இலக்கிய இதழுக்காக கோமல் சுவாமிநாதன் பிரபல எழுத்தாளர்கள் பலரையும் பேட்டி கண்டு எழுதிவந்தார். இந்த தொடருக்கு நான் புகைப்படக்காரராக இருந்தேன். பத்திரிகையில் பேட்டி எப்படி வித்தியாசமாக இருக்கிறதோ, அதேபோல் பேட்டி கொடுக்கும் எழுத்தாளர்களின் படத்தையும் வித்தியாசமாய் எடுத்து லே அவுட் செய்து வெளியிடலாம் என்று கோமல் சுவாமிநாதனிடம் நான் கூறினேன். ஆரம்பத்தில் அவருக்கு அதைப்பற்றி சரியாக புரியவில்லை.
இந்த தொடருக்காக அவர் முதலில் மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரை பேட்டி எடுத்தார். அவருடன் சென்ற நான், எம்.டி.வாசுதேவன் நாயரை சாதாரணமாக புகைப்படம் எடுக்காமல், அவர் பீடி பற்றவைப்பது, புகையை வெளியிடுவது போன்ற போஸ்களில் படம் எடுத்தேன். இந்த படங்கள் கோமல் சுவாமிநாதனுக்கு பிடித்துப் போனதால், இதேபோன்று பல்வேறு எழுத்தாளர்களையும் படம் எடுக்க அவர் ஒப்புக்கொண்டார். இந்த பேட்டித் தொடருக்காக பல எழுத்தாளர்களை பேட்டி எடுத்தோம். அவர்களை சாதாரணமாக படம் எடுக்காமல் வள்ளுவர் கோட்டம், கடற்கரை போன்ற பகுதிகளுக்கு அழைத்துச் சென்று வித்தியாசமான ஆங்கிள்களில் படம் எடுத்தேன்.
இந்த காலகட்டத்தில் ஒரு தீபாவளி சிறப்பிதழுக்காக கலைஞரை கோமல் சுவாமிநாதன் பேட்டி காணச் சென்றார். அவருடன் நானும் சென்றேன். கலைஞரை வித்தியாசமாக எப்படி படம் எடுப்பது என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். அப்போதுதான் பல ஆண்டுகளுக்கு முன் சுவாமிமலையில் சிவாஜியின் திருமணத்துக்கு கலைஞர் சென்றபோது அங்கு சிவாஜி, எம்.ஜிஆர், ராம அரங்கண்ணல் உள்ளிட்டோருடன் கலைஞர் தரையில் அமர்ந்து எடுத்த படம் என் ஞாபகத்துக்கு வந்தது.
அந்த திருமணத்துக்குப் பிறகு கலைஞரை தரையில் அமரவைத்து யாரும் படம் எடுக்கவில்லை. அந்தக் குறையை எப்படியாவது நான் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அந்த எண்ணத்துடன்தான் அன்று கோமல் சாமிநாதனுடன் சென்றிருந்தேன்.
பேட்டிக்கு முன் என்னை அழைத்த கோமல் சாமிநாதன், ‘கலைஞரை எப்படிய்யா வித்தியாசமா எடுக்கப் போற?’ என்று கேட்டார். அவரை தரையில் உட்காரவைத்து படம் எடுக்க நான் திட்டமிட்டுள்ளதாகச் சொன்னதும் அதிர்ந்துவிட்டார். மாநில முதல்வரான அவரை எப்படி தரையில் உட்காரச் சொல்வது என்று கேட்டார். இதுபற்றி நாங்கள் விவாதித்துக்கொண்டு இருக்கும்போதே கலைஞர் வந்துவிட்டார்.
‘என்னய்யா ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க’ என்று கேட்டார்.
அதற்கு கோமல் சாமிநாதன், ‘தம்பி ஏதோ உங்ககிட்ட சொல்லணுமாம்’ என்று என்னை முன்னால் இழுத்துவிட்டு, அவர் பின்னால் சென்றுவிட்டார்.
‘என்னப்பா என்ன விஷயம்?’ என்று கலைஞர் கேட்க, நான் தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னேன். இதைக் கேட்டதும் கலைஞர் கொஞ்ச நேரம் யோசித்தார்.
‘என்னை தரையில உட்கார வச்சு படம் எடுக்க நீ திட்டமிட்டதுக்கு என்ன காரணம்?’
‘சிவாஜியின் திருமணத்துக்கு பிறகு நீங்கள் தரையில் அமர்ந்திருக்கும் படத்தை யாரும் எடுத்ததில்லை. அதனால் அப்படி ஒரு படத்தை எடுக்க விரும்புகிறேன். அதோட உங்க படங்கள் எல்லாமே ஒரே மாதிரி பேக்கிரவுண்ட்ல வருது. அதே சோபா… அதே கர்ட்டன்னு இருக்கு. அதான் மாறுதலா இப்படி யோசிச்சேன்.”
‘நான் மாட்டேன்னு சொன்னா நீ என்ன செய்வே?’
‘நான் உங்களை படமே எடுக்க மாட்டேன். ஏற்கெனவே என்கிட்ட இருக்கிற சில நல்ல படங்களை எடுத்து கோமல் சார்கிட்ட கொடுத்துடுவேன்.’
இப்படி நான் சொன்னதும் கலைஞர் ஒரு நிமிடம் யோசித்தார். பின்னர் கீழே அமர்ந்து படம் எடுக்க சம்மதித்தார். அதற்காக கீழே அமர்ந்தவர் சுமார் 3 மணிநேரம் அப்படியே அமர்ந்து பேட்டியை முடித்தார். நானும் என் ஆசைதீர சுமார் 500 படங்களை எடுத்தேன். அதில் ஒரு படம்தான் இங்கே நீங்கள் பார்ப்பது.
இந்த படங்களை பிரசுரிக்கும் முன் தன்னிடம் காட்ட வேண்டும் என்று கலைஞர் கூறினார். நானும் பிரிண்ட் போட்டு சுபமங்களா ஆசிரியர் குழுவில் இருந்த இளையபாரதியிடம் கொடுத்துவிட்டு ஒரு அசைன்மெண்டுக்காக மதுரைக்கு போய்விட்டேன்.
அடுத்த நாள் படங்களைப் பார்த்த கலைஞர், ‘தம்பி எங்கே?’ என்று என்னைத் தேடியிருக்கிறார். அவருக்காக சின்னக் குத்தூசி என்னை பல இடங்களில் தேடியிருக்கிறார். நான் ஊரில் இருந்து வந்ததும் இந்த தகவல் தெரியவர, நான் அவரைப் பார்க்கச் சென்றேன்.
’10 நிமிஷம் வெயிட் பண்ணு… எழுதிட்டு வந்துடறேன்’ என்றார்.
‘நானும் நீங்க எழுதறதை படம் எடுக்கறேன்’ என்ரு அங்கேயே இருந்து படங்களை எடுத்தேன். எழுதி முடித்த கலைஞர் என்னை அருகில் அழைத்தார்.
‘நல்லா எடுத்துருக்கய்யா… என்னையே புதுசா பாக்கிற மாதிரி இருக்கு’ என்று கலைஞர் பாராட்டினார்.
அந்த பாராட்டு எனக்கு புதுத் தெம்பை கொடுத்தது.
‘எனக்கு இன்னொரு போட்டோ ஷூட்டுக்கு நேரம் ஒதுக்கணும்’
‘என்னய்யா இது 2 நாளைக்கு முன்னாலதானே என்னை படாத படுத்தி அவ்ளோ போட்டோ எடுத்தே?’
‘இல்லை… வீட்டில் இருக்கும்போது நீங்கள் லுங்கியும், கதர் பனியனும்தான் போடுவீங்கன்னு சொன்னாங்க. அந்த டிரஸ்ல உங்களை படம் எடுக்க ஆசைப்படறேன்.’
‘இதையெல்லாம் ஏற்கெனவே விசாரிச்சு வச்சுட்டியா?…’
‘ஆமாம் நாளைக்கு எடுக்கலாமா?’