No menu items!

என் அப்பா மலேசியா வாசுதேவன் – மகன் யுகேந்திரனின் நினைவுகள்

என் அப்பா மலேசியா வாசுதேவன் – மகன் யுகேந்திரனின் நினைவுகள்

இன்று (ஜூன் 15) பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் 80-வது பிறந்த நாள். இந்த நாளில் மலேசியா வாசுதேவனைப் பற்றிய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் அவரது மகன் யுகேந்திரன்.

சினிமாவுக்கு முன் தெருக்கூத்து:

சினிமாவுக்கு வருவதற்கு முன், சிறுவயதில் மலேசியாவில் என் அப்பாவும் அவரது சகோதரர்களும் தெருக்கூத்து நடத்தி வந்தனர். அக்காலத்தில் கிராமங்களில் மைக், லவுட் ஸ்பீக்கர் போன்ற வசதிகளெல்லாம் கிடையாது. ரசிகர்கள் எல்லோருக்கும் கேட்க வேண்டுமானால் கத்தித்தான் பாடவோ பேசவோ செய்ய வேண்டும். அந்த காலத்தில் அப்படி கத்திப் பாடியதுதான் என் அப்பா நிறைய பாடல்களை உச்சஸ்தாயியில் பாடுவதற்கு காரணமாக இருந்தது.

அம்மாவின் இறப்புக்கு போக முடியாத சோகம்:

மலேசியாவில் இருந்து சென்னையில் வந்து தங்கியிருந்த காலத்தில் அப்பாவின் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது. இது தெரியாமல் அப்பா இங்கே இருந்து சினிமா வாய்ப்புகளை தேடிக்கொண்டு இருந்தார். அப்பாவின் அண்ணன் மலேசியாவில் இறந்த செய்தி வந்து, அவர் மலேசியா போக நினைத்தபோதுதான் தனது பாஸ்போர்ட் காலாவதியானது தெரியவந்தது. அவரால் அண்ணனின் இறப்புக்கு போக முடியவில்லை. அதேபோல் பாஸ்போர்ட் இல்லாததால் தன் அம்மாவின் இறப்புக்கும் அவரால் போக முடியவில்லை. அப்பாவின் வாழ்க்கையின் மிகப்பெரிய சோகமாக இது இருந்தது.

எல்லோருக்கும் மரியாதை:

எல்லோருக்கும் மரியாதை கொடுத்துப் பேசுவது அப்பாவின் வழக்கம். அவர் யாரையும் வாடா போடா என்று அழைத்து நான் பார்த்ததில்லை. என்னைக்கூட அப்படி அழைத்ததில்லை. யார் மனதும் புண்படுவது அப்பாவுக்கு பிடிக்காது அதனாலேயே எந்த பாடலையும் அவர் குறை சொன்னதில்லை.

எங்களுக்கு சமைத்துப் போடுவார்:

சிறுவயதில் என்னதான் பிஸியாக இருந்தாலும், குடும்பத்துடன் நேரம் செலவிட அப்பா தவறியதில்லை. வீட்டில் இருக்கும் நாட்களில் அவரே சைனீஸ் வகை உணவுகளை எங்களுக்கு சமைத்துக் கொடுப்பார். மலேசியாவில் தனது சிறுவயது அனுபவங்களையும், அங்கு நடந்த சில அமானுஷ்யமான பேய் அனுபவங்களையும் எங்களுக்கு சொல்வார். வெளிநாடுகளில் கச்சேரிகள் நடக்கும் காலகட்டங்களில் அவர் எங்கள் அனைவரையும் உடன் அழைத்துச் செல்வார். அதனால் எங்கள் சிறுவயதில் அப்பா பிஸியாக இருந்தாலும், அவரை நாங்கள் அதிகம் மிஸ் செய்யவில்லை.

இளையராஜாவின் நட்பு:

1969-ம் ஆண்டில், ‘ரத்தப் பேய்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக அப்பா சென்னைக்கு வந்தார். இந்தியாவும் மலேசியாவும் கூட்டாக தயாரித்த அந்த படத்தில் ஒரு கிழவர் வேடத்தில் அப்பா நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகும், சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு தேட, அப்பா சென்னையிலேயே தங்கிவிட்டார். அந்த காலகட்டத்தில் இளையராஜா, கங்கை அமரன் ஆகியோருடன் அப்பாவுக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. பல நாட்களில் ஒரு கிளாஸ் டீயை வாங்கி மூவரும் பங்கு போட்டு குடித்துள்ளனர். அந்த அளவுக்கு அவர்கள் நெருக்கமாக இருந்தனர். இளையராஜாவைவிட அப்பாவுக்கு கங்கை அமரன் நெருக்கமானவர். அதே நேரத்தில் அப்பா என்றைக்கும் இளையராஜாவை விட்டுக்கொடுத்து நான் பார்த்ததில்லை.

பிடித்த பாடகர் டிஎம்எஸ்:

அப்பாவுக்கு மிகவும் பிடித்தது மெலடி பாடல்கள்தான். கச்சேரிகளில் ரசிகர்கள், ‘வாழ்க்கை நூறு வகை’, ‘என்னம்மா கண்ணு’ போன்ற பாடல்களை பாடச் சொன்னாலும், அப்பா அதிகம் மெலடி பாடல்களைத்தான் பாடுவார். அப்பாவுக்கு பிடித்த பாடகர் டிஎம்எஸ். ஆரம்ப காலங்களில் அவரது பாடல்களில் டிஎம்எஸ்சின் சாயல் அதிகமாக இருக்கும். உதாரணமாக கல்யாணராமன் படத்தில் வரும், ‘காதல் தீபமொன்று’ பாடலை டிஎம்எஸ்ஸின் பாணியில் பாடி இருப்பார். பிற்காலத்தில் பலரும் அதை மாற்றச் சொன்னதால் தனது பாணியில் பாடத் தொடங்கினார்.

கஷ்டமான பாடல்:

ராஜரிஷி படத்தில் வரும் சங்கரா சிவ சங்கரா பாடலை மிகவும் கஷ்டப்பட்டு பாடியதாக அப்பா கூறியிருக்கிறார்.

ரஹ்மானுக்கு அட்ரஸ் கொடுத்தவர்:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அட்ரஸ் கொடுத்ததே அப்பாதான் என்று சொல்ல்லாம். 1990-களில், ‘டிஸ்கோ… டிஸ்கோ…’ என்ற ஆல்பத்தை அப்பா பாடி வெளியிட்டார். இந்த இசை ஆல்பத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைத்தவர் அப்பா. அந்த இசை ஆல்பத்தை வைத்துதான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். புதுப்புது ஒலிகளை அவர் சிறப்பாக கொண்டுவருவதாக அடிக்கடி கூறுவார். அவரது இசையில் கிழக்கு சீமையிலே உட்பட பல படங்களில் அப்பா பாடியிருக்கிறார். இருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மானா? இளையராஜாவா என்ற கேள்வி வந்தால் அப்பாவுக்கு இளையராஜாவைத்தான் பிடிக்கும்.

இளையராஜாவைப் பார்க்க ஏங்கினார்:

கடைசி காலத்தில் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது இளையராஜா தன்னை வந்து பார்க்கவில்லையே என்பது அப்பாவுக்கு மிகப்பெரிய ஏக்கமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் இளையராஜாவின் மனைவி ஜீவா அடிக்கடி அப்பாவைப் பார்க்க வருவார். நான் அவரது ஏக்கத்தைப் பற்றி சொல்வேன். அவர் அதை இளையராஜாவிடம் சொல்வதாக கூறினார். இருந்தாலும் கடைசி வரை அப்பா முழுநினைவுடன் இருக்கும்போது இளையராஜா அவரைப் பார்க்க வரவில்லை. அவர் இறப்பதற்கு சற்று முன்னர்தான் அப்பாவைப் பார்க்க வந்தார். இது அவருக்கு மிகப்பெரிய ஏக்கமாக இருந்தது.

மலேசியா வாசுதேவனைப் பாற்றிய யுகேந்திரனின் பேட்டியைக் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...