இந்தியா வருகை தந்துள்ள ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு ரஷிய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை மோடி பரிசளித்துள்ளார்.
23-ஆவது இந்திய – ரஷிய உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை மாலை இந்தியா வந்தாா். புது தில்லியில் அவரை சிவப்பு கம்பள வரவேற்புடன் பிரதமா் மோடி நேரில் ஆரத்தழுவி வரவேற்றாா்.
பாலம் விமான நிலையத்தில் அவா் வந்திறங்கிய பின்னா், அவருடன் விமான நிலையத்தில் இருந்து ஒரே காரில் பிரதமா் மோடி சென்றாா்.
தொடர்ந்து, நேற்றிரவு பிரதமர் தனது இல்லத்தில் புதினுக்கு இரவு விருந்தளித்தார். அப்போது, ரஷிய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை புதினுக்கு பரிசாக அளித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, ”கீதையின் போதனைகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்..இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகை செல்லும் புதினுக்கு அணிவகுப்பு மரியாதை அளித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரவேற்கவுள்ளார்.
தொடர்ந்து, ஹைதராபாத் மாளிகையில் நடைபெறும் 23-ஆவது இந்திய – ரஷிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு புதினும், மோடியும் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
ராணுவ தளவாடங்கள், வர்த்தகம் உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஆலோசனையில் இருநாட்டுத் தலைவர்களும் ஈடுபடவுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின்னர், பல முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாக இருக்கிறது.



