கிரிக்கெட்டில் ரன் குவிப்பதில் வேண்டுமானால் விராட் கோலி சற்று பின்தங்கி இருக்கலாம். ஆனால் பணத்தை அள்ளிக் குவிப்பதில் இன்னும் நம்பர் ஒன்னாக இருக்கிறார் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக பணம் சம்பாதிக்கும் வீரர் என்ற பெருமையை தோனியிடம் இருந்து தட்டிப் பறித்திருக்கிறார் விராட் கோலி. மகேந்திரசிங் தோனியின் மொத்த சொத்து மதிப்பு 819 கோடி. ஆனால் விராட் கோலியின் ,மொத்த சொத்து மதிப்பு இப்போதைக்கு 892 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
கிரிக்கெட் மட்டுமே தெரிந்த விராட் கோலிக்கு எப்படி இத்தனை கோடி சொத்துகள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அதைத் தெளிவாக்க அவர் எந்தெந்த வகையில் இத்தனை கோடி ரூபாயை சம்பாதிக்கிறார் என்று பார்ப்போம்…
இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் போலவே விராட் கோலிக்கும் அதிக வருமானம் தரும் விஷயம் ஐபிஎல் கிரிக்கெட். 2008-ம் ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியபோது, ராயல் சாலஞ்சர்ஸ் அணி விராட் கோலியை வாங்கியது. அப்போது விராட் கோலிக்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அளித்த தொகை ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய்.
ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் கிராஃப் ஏற ஏற, அவரது சம்பளத் தொகையை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் உயர்த்திக்கொண்டே வந்தது.
2008, 2009,2010 ஆகிய ஆண்டுகளில் கோலிக்கு ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய் வழங்கிய ஆர்சிபி அணி, 2011-ம் ஆண்டில் 8.2 கோடி ரூபாயை சம்பளமாக நிர்ணயித்தது. அந்த சம்பளம் 2013-ம் ஆண்டுவரை நீடித்தது. 2014-ல் இந்திய அணியின் கேப்டனாக கோலி பொறுப்பேற்க, ஆர்சிபியில் அவரது ஏலத்தொகை 12.5 கோடி ரூபாயாக அதிகரித்தது. பின்னர் 17 கோடியானது. இப்போது 15 கோடி ரூபாயாக இருக்கிறது. இப்படி ஐபிஎல் போட்டியில் கிடைத்த மொத்த வருமானம் 158 கோடி ரூபாய்.
இதைத்தவிர இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ‘ஏ பிளஸ்’ கிரேடில் இருக்கும் விராட் கோலிக்கு காண்டிராக்ட் முறையில் ஆண்டொன்றுக்கு ரூபாய் 7 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதைத் தவிர விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார் கோலி. ப்யூமா, எம்.ஆர்.எஃப், ஆடி, டிஸாட், டயோடா, பூஸ்ட் பெப்சி உள்ளிட்ட 15 பிராண்டுகளின் விளம்பரங்களில் விராட் கோலி தோன்றுகிறார், இப்படி விளம்பர படங்களில் நடிக்க கடந்த ஆண்டில் மட்டுமே அவர் 240 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
தொழில் முனைவோராகவும் இருக்கும் விராட் கோலி யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ் என்ற ஃபேஷன் நிறுவனத்தில் 19 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளார். ராங் (Wrogn), ரேஜ் காபி (Rage Coffee), சிசெல் பிட்னெஸ் (Chisel Fitness), கோவா எஃப்சி (Goa FC), உள்ளிட்ட 10 நிறுவனங்களில் கோலி முதலீடு செய்துள்ளார். இதிலிருந்தும் அவரது காட்டில் பண மழை பெய்கிறது.
இத்தனை கோடி ரூபாயைச் சம்பாதிக்கும் விராட் கோலியின் வீடு மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ளது. 2012-ம் ஆண்டில் 9 கோடி ரூபாய் கொடுத்து இந்த வீட்டை வாங்கிய விராட் கோலி, 1.5 கோடி ரூபாய் கொடுத்து இதை மேலும் அழகூட்டியுள்ளார்.
விராட் கோலிக்கு சொந்தமாக பிஎம்டபிள்யூ, ஆடி,மெர்சிடிஸ், வோக்ஸ்வேகன், ரெனால்ட் டஸ்டர், டயோட்டா லிவா ஆகிய கார்களும் உள்ளன. தனது மூடுக்கு தகுந்தவாறு கார்களை தேர்ந்தெடுத்துச் செல்வது கோலியின் வழக்கம்.
கோலியின் சொத்து மதிப்பு 800 கோடிக்கு மேல் இருக்க, அவரது மனைவி அனுஷ்காவின் சொத்து மதிப்பு 255 கோடியாக உள்ளது.
இத்தனை கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் கோலியும் அவரது மனைவியும் மிக எளிமையான வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். தங்கள் வீட்டில் சமையல் உள்ளிட்ட வேலைகளுக்குகூட ஆட்களை வைத்துக்கொள்ளாமல் அவர்களே செய்து வருகிறார்கள். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு இவர்களே சமையல் செய்து பரிமாறுகிறார்கள்.
இதுபற்றி கேட்டால், “நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை நாம்தான் கவனிக்க வேண்டும். நம் வேலைக்காரர்கள் அல்ல” என்கிறார்கள்.
இந்த எளிமைதான் அவர்களுக்கு வெற்றி தேடித் தந்ததுள்ளது.