மெஸ்ஸி: கால்பந்து வீரர் மெஸ்ஸியை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் மெஸ்ஸிக்கு பிடித்தது Milanesa Napolitana என்ற அர்ஜென்டினா நாட்டு உணவுதான். இந்த உணவுடன் வறுத்த கோழியையும், மண்ணுக்கு அடியில் விளையும் காய்கறிகளையும் விரும்பி உண்கிறார் மெஸ்ஸி.
கிறிஸ்டியானோ ரொனால்டோ: தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிக ஆர்வம் காட்டும் ரொனால்டோ, பார்த்துப் பார்த்துதான் உணவைச் சாப்பிடுவார். லிஸ்பன் நகரின் புகழ்பெற்ற உணவான Bacalhau a bras தான் அவருக்கு மிகவும் பிடித்த உணவு. காட் என்ற ஒருவகை மீனில் வெங்காயம், பொரித்த உருளைக்கிழங்கு, முட்டை ஆகியவற்றைக் கலந்து இந்த உணவைத் தயாரிக்கிறார்கள்.
நெய்மர்: பிரேசில் வீரரான நெய்மருக்கு இத்தாலிய உணவுகள் மீதுதான் ஆசை அதிகம். இதைத்தவிர முட்டைகள் மற்றும் பயிறு வகைகளை அவர் தனது உணவுகளில் தவறாமல் சேர்த்துக் கொள்கிறார்.
பால் போக்பா: பிரெஞ்சு கால்பந்து வீரரான பால் போக்பாவுக்கு பிடித்த உணவு பாஸ்தா. தினமும் 3 வேளை பாஸ்தா கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுவாராம்.
சன்னின் வித்தியாச முகமூடி:
இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வித்தியாசமான முகமூடியை அணிந்து ஆடுகிறார் தென் கொரிய வீரர் சன் ஹியூங் மின். இந்த முகமூடியை ஃபேஷனுக்காக அவர் அணிந்துள்ளாரா என்ற கேள்வி உலகக் கோப்பையை பார்க்கும் பலருக்கும் இருந்திருக்கும். ஆனால் அது ஃபேஷனுக்கான முகமூடி அல்ல.
சில மாதங்களுக்கு முன் நடந்த கால்பந்து போட்டி ஒன்றில் பலமாக காயமடைந்தார் சன். இதில் அவரது கண்களுக்கு கீழே உள்ள எலும்பு உடைந்தது. இதற்காக அறுவைச் சிகிச்சை செய்த நிலையில் இந்த உலகக் கோப்பையில் அவர் ஆடுகிறார். இந்த நிலையில் ஏற்கெனவே காயம் பட்ட இடத்தில் மீண்டும் காயமடைந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் அந்த முகமூடியை அணிந்திருப்பதாக சொல்கிறார்கள்.
கேரளா to கத்தார் – காரில் ஒரு பயணம்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தங்களுக்கு பிரியமான அணிகள் மோதும் ஆட்டத்தைக் காண சிலர் விமானத்தில் செல்வார்கள், சிலர் கப்பலிலோ அல்லது ரயிலிலோகூடச் செல்வார்கள். ஆனால் கேரளாவின் மாஹியைச் (புதுச்சேரி பகுதிக்கு உட்பட்டது) சேர்ந்த நாஜி நவுஷி தனியாக காரில் சென்றிருக்கிறார்.
அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியின் தீவிர ரசிகையான நாஜி நவுஷி, இப்போட்டிக்கு காரில் செல்ல பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ளார். இதன்படி அக்டோபர் 15-ம் தேதி, தனது காரில் மாஹியில் இருந்து புறப்பட்டுள்ளார் 5 குழந்தைகளுக்கு தாயான நாஜி நவுஷி.
முதலி்ல் மும்பை வரை காரில் சென்ற அவர், பின்னர் அங்கிருந்து கப்பலில் காரோடு ஒமான் நாட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் ஒமான் நாட்டில் இருந்து காரிலேயே வளைகுடா நாடுகளில் சுற்றி கத்தாரை வந்தடைந்துள்ளார்.
‘ஓளு’ (அவள்) என்று பெயரிடப்பட்டுள்ள அவரது காரில் ஒரு மினி சமையலறையும், காரில் உச்சியில் இருந்து டெண்ட் அமைப்பதற்கான வசதிகளும் உள்ளன. அதனால் ஓட்டல்களில் தங்காமல் தனது காரிலேயே தங்கி வருகிறார்.
இத்தனை தூரம் பயணம் செய்து மெஸ்ஸியின் ஆட்டத்தை காண வந்த அவருக்கு முதல் போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா தோல்வி அடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால் அடுத்த போட்டியில் அர்ஜென்டினா வெற்றிபெற்றதாலும், இந்த இரு போட்டிகளிலும் மெஸ்ஸி கோல் அடித்ததாலும் உற்சாகத்தில் இருக்கிறார் நாஜி நவுஷி.