இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களும், மொழி வாரியாக தங்களது மாநிலம் வேறு மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட, நவம்பர் ஒன்றாம் தேதியை தங்களின் மாநில தினமாக கொண்டாடுகின்றன. ஆனால், தமிழ்நாடு எந்த மாநிலத்திலிருந்தும் பிரிக்கப்படவில்லை; சென்னை மாகாணத்தில் இருந்துதான் வேறு சில மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இதனால், தமிழ்நாடு தினம் என்று எந்த நாளும் குறிப்பிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியே தமிழ்நாடு மாநில தினமாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுகவினர் நவம்பர் ஒன்றாம் தேதியை எல்லைப் போராட்ட தியாகிகள் தினம் என கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், இன்று தமிழ்நாடு தினம்தான் என்பதற்கான விளக்கத்தை அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘‘மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம். தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்’’ என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1! தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.