‘மர்ம தேசம்’, ‘விடாது கருப்பு’ உட்பட பல டிவி தொடர்களை எழுதியவரும் பிரபல எழுத்தாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தரராஜன் (வயது 66) மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (10-11-24) காலமானார். அவருக்கு சக எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்திரா சௌந்தரராஜன், ஏராளமான சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். ‘மர்மதேசம்’, ‘விடாது கருப்பு’ மட்டுமல்லாமல் ‘ரகசியம்’, ‘சொர்ண ரேகை’, ‘அத்திப்பூக்கள்’ உட்பட ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் பங்காற்றியுள்ளார். ‘ஆனந்தபுரத்து வீடு’ என்ற திரைப்படத்திலும் இந்திரா சௌந்தரராஜன் பணியாற்றியுள்ளார். இவருடைய கதைகள் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலும் எழுதப்பட்டிருந்தன.
இவர் எழுதிய என் பெயர் ரங்கநாயகி எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் 3ஆவது பரிசு பெற்றது. ‘சிருங்காரம்’ என்ற படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது. ‘ருத்ரம்’ தொலைக்காட்சித் தொடருக்காக தமிழக அரசின் விருது பெற்றுள்ளார்.
இந்திரா செளந்திரராஜன் நவம்பர் 13 ஆம் தேதி 1958ஆம் ஆண்டு பிறந்தவர். தற்போது 66 வயதாகிறது. மதுரை டிவிஎஸ் காலனியில் வசித்து வந்த இந்திரா செளந்திரராஜன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நிலையில் நேற்று குளியலறைக்கு சென்ற போது வழுக்கி விழுந்த இந்திரா செளந்தரராஜனுக்கு தலையில் பலத்த காயமடைந்தது. உடனடியாக உறவினர்கள் அவரை சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார்.
இந்திரா செளந்திரராஜன் மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதியுள்ள இரங்கல் குறிப்பில், “நெருங்கிப் பழகிய இணக்கமான நட்புகளை இழக்கும்போதெல்லாம் எதார்த்தம் உணர் என்று எடுத்துச் சொல்லி மனதிற்கு தைரிய முலாம் பூச கொஞ்ச காலம் பிடிக்கிறது. சென்னையில் இருந்தாலும் மனம் மதுரையில் நண்பர் இந்திராவுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறது. திடீரென்று கே.வி.ஆனந்தை இழந்தபோதும், சென்ற வருடம் என் மைத்துனரை இழந்தபோதும் இருந்த வெற்று மனநிலை மீண்டும்.
வாழ்க்கை என்பது இப்போதெல்லாம் நீர்க்குமிழியின் ஆயுளை விடவும் மோசமாகி விட்டது. ஒவ்வொரு நாளும் போனஸ் என்று கருதிக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன் சியர் அப்! அந்தக் குரல் எனக்கேக் கேட்கவில்லை. அந்த வார்த்தைகளுக்கு வலிமையே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதியுள்ள பதிவில், “உன் கையில் இருந்த எழுதுகோலுக்கு இவ்வளவு விரைவில் விடுதலையா? இடியாய்த் தாக்கிய செய்தி அருமை நண்பர் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் மறைவு. தாங்கிக் கொள்ள முடியாமல் இதயம் கனக்கிறது. மறுக்கிறது. கண்ணீருடன் நெஞ்சார்ந்த ஆழ்ந்த அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.