‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மல்லிப்பூ’ பாடலால் பிரபலமாகியுள்ள பாடகி மதுஸ்ரீயை வாவ் தமிழாவுக்காக சந்தித்தோம்..
வாவ் தமிழா: தமிழ்நாட்டில் மதுரை மல்லிதான் ரொம்ப பிரபலம், இப்போ உங்க மல்லிப்பூ பாட்டு அதை தாண்டிவிட்டது. தமிழ் நாட்டின் அனைத்து மூலைகளிலும் உங்கள் பாடல்தான் ஒலிக்கிறது.
மதுஸ்ரீ: ஓ க்ரேட்… நன்றி… எல்லாம் உங்கள் அன்பு.
வாவ் தமிழா: இந்தப் பாடல் வெற்றிபெறும் என்று ரெக்கார்டிங் செய்யும்போது எதிர்பார்த்தீர்களா?
மதுஸ்ரீ: இல்லை. நான் எதிர்பார்க்கவில்லை. படம் வெளியாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் என்னை அழைத்தார்கள். பொதுவாய் மென்மையான காதல் பாடல்கள் பாடதான் என்னை கூப்பிடுவார்கள். இது துள்ளலான பாட்டாக இருந்தது. துள்ளல் இருந்தாலும் இதில் மெலடி இருக்கிறது, நாட்டுப்புற தன்மை இருக்கிறது, கிளாசிகலாகவும் உள்ளது. மிக அழகான பாடல். முதல்முறை கேட்டபோது ஆஹா என்று பிரமித்தேன். ஆனால், இந்தப் பாடல் சூப்பர் ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை. மேஜிக் செய்யும் என்று நினைக்கவில்லை. கடவுளுக்கும் தென்னிந்திய மக்களுக்கும் நன்றி.
வாவ் தமிழா: மிக மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.
மதுஸ்ரீ: ஆமாம். ரொம்ப சந்தோஷம். உலகத்தின் பல இடங்களிலிருந்தும் என்னை அழைத்து பாராட்டுகிறார்கள். என்னுடைய பாடல்களில் இந்தி, தமிழ் எதுவாக இருந்தாலும் 90 சதவீதம் ஹிட்டாகிவிடும். ஆனால், இந்த பாடல்தான் படம் ரீலிசாவதற்கு முன்பே சூப்பர் ஹிட்டாகிவிட்டது. இப்படி நடப்பது என் வாழ்க்கையில் இதுதான் முதல் முறை.
வாவ் தமிழா: ரஹ்மானுடன் 20 வருடங்களுக்கு மேலாக இணைந்து பணிபுரிகிறீர்கள். எப்படி வாய்ப்பு கிடைத்தது?
மதுஸ்ரீ: 21 வருடங்களாக ரஹ்மானுடன் பணிபுரிகிறேன். அது நீண்ட கதை. மும்பையில் சினிமா பாடல் வாய்ப்புகளுக்காக அதிக சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். அங்கு ரொம்ப கஷ்டம். அப்போது புதியவர்களுக்கு ரஹ்மான் வாய்ப்பளிக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவரை சந்திக்க முயற்சி செய்தேன். அவரை சந்திப்பதற்கு சிரமமாக இருந்தது. ஒரு விளம்பரப் படத்துக்கு பாடும்போது அங்கு ரஹ்மான் வருவதாக சொன்னார்கள். அவருக்காக காத்திருந்தேன். காலையிலிருந்து இரவு வரை காத்திருந்தேன். இரவு 2 மணிக்கு அழைத்து வாய்ஸ் டெஸ்ட் செய்தார்கள். அதன்பிறகு ஒரு வருடம் கழித்து அவருடைய ‘சாத்யா’ என்ற இந்திப் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்தன.
வாவ் தமிழா: மிக நீண்ட காலத்துக்குப் பின் மேடையில் பாடியிருக்கிறீர்கள்…
மதுஸ்ரீ: ஆமாம் இந்தப் பாடலை மேடையில் பாடினேன். ரஹ்மானுடன் இசைக் கச்சேரிக்காக உலகம் முழுக்க போயிருக்கிறேன். நானும் மேடைக் கச்சேரிகள் செய்து வருகிறேன்.
வாவ் தமிழா: ரிக்கார்டிங்கில் பாடுவதற்கும் மேடையில் பாடுவதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. ரஹ்மான் சொல்லித் தருவாரா?
மதுஸ்ரீ: ஆமாம், பாடுவதற்கு நிறைய சுதந்திரம் தருவார். எனக்கு மேடையில் பாடுவது பிடிக்கும்.
வாவ் தமிழா: இந்த 20 வருட இசைப் பயணத்தில் உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள்…
மதுஸ்ரீ: எல்லாமே அழகான அனுபவங்கள். எல்லா இசையமைப்பாளர்களிடமும் பாடியிருக்கிறேன். வித்யாசாகர்… அவர் ரொம்ப கெட்டிக்காரர். யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் – சமீபத்தில் கூட அவருக்கு பாடியிருக்கிறேன். சத்யா, தினா, தேவா – இப்படி எல்லோரிடமும் பாடியிருக்கிறேன். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்.
வாவ் தமிழா: இந்தியில் பாடுவது உங்களுக்கு சிரமமிருக்காது. தமிழில் பாடுவதில் சிரமங்கள் இருக்கிறதா?
மதுஸ்ரீ: பாடகர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் பாடல்களை கவனமாக கேட்க வேண்டும். வரிகளை படிக்க வேண்டும். மொழி அவர்களுக்கு பிரச்சினை இல்லை. இசைக்கு மொழியில்லை.
வாவ் தமிழா: பாடல்களை ரஹ்மான் விளக்கிச் சொல்லுவாரா?
மதுஸ்ரீ: கவிஞர் தாமரை எனக்கு விளக்கிச் சொன்னார். மாற்று மொழி பாடல்களை பாடும்போது இரட்டை கவனமாக இருப்பேன். அதன் அர்த்தத்தை கேட்டுக்கொள்வேன்.
வாவ் தமிழா: மல்லிப்பூவுக்கு முன்னால் கிட்டத்தட்ட 6 வருடங்கள் இடைவெளி இருக்கிறது. ஏன்?
மதுஸ்ரீ: அது என்னுடைய தப்புதான். நான் என் மற்ற பணிகளில் இருந்தேன். தமிழ் மொழியும் சிரமமாக இருந்தது. மல்லிப்பூ கிடைத்தப் பிறகு ஒவ்வொரு நாளும் தமிழ் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நாள் நிச்சயம் தமிழ் பேசுவேன்.
வாவ் தமிழா: உங்கள் சிறு வயது குறித்து கூறுங்களேன். உங்கள் தந்தை உங்களை கிளாசிகல் பாடகியாக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்…
மதுஸ்ரீ: சிறு வயதிலிருந்தே எனக்கு பின்னணிப் பாடகியாக வேண்டும் என்றுதான் ஆசை. லதா மங்கேஷ்கர் பாடல்களை கேட்டு… என் தந்தைக்கு நான் கிளாசிகல் பாடகியாக வேண்டும் என்று ஆசை. அவர் கற்றுக் கொடுத்தார். நானும் இசை படித்தேன். இசையில் எம்.ஏ. முடித்தேன். தென் அமெரிக்காவில் சுரிநாம்மில் இசை ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். அப்போது எனக்கு 21 வயது. அங்கு மேற்கத்திய இசையும் படித்தேன். அங்கு என் மாணவர்கள் என் குரலை பாராட்டுவார்கள். பிறகு இந்தியா வந்தேன். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு பாடகியானேன்
வாவ் தமிழா: உங்கள் பெங்காலி தோழி ஸ்ரேயா கோஷல் பற்றி…
மதுஸ்ரீ: மிகச் சிறந்த பாடகி. நல்ல மனதுடையவர். அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
வாவ் தமிழா: நீங்கள் இளையராஜாவுடன் பணியாற்றவில்லையல்லவா?
மதுஸ்ரீ: இல்லை, பணியாற்றியதில்லை. அவருடைய பாடல்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கும். மிகப் பெரிய மனிதர். ஆனால், யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜாவுடன் பணியாற்றியிருக்கிறேன்.
வாவ் தமிழா: இப்போது மெலடி போய் தாளத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மதுஸ்ரீ: இசைத் துறையில் மட்டுமல்ல வாழ்க்கையிலேயே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மெலடி எப்போதுமே முக்கியமாக இருக்கும்.
வாவ் தமிழா: இந்தியிலும் அப்படிதான் இருக்கிறது.
மதுஸ்ரீ: ஆமாம். ஆனால், மெலடி மீண்டும் வரும். வாழ்க்கை ஒரு வட்டம். மல்லிப்பூ பாடலும் இப்படிதான். துள்ளலாக இருந்தாலும் மெலடி இருக்கிறது. கிளாசிகல் அம்சங்கள் இருக்கின்றன. தாளக்கட்டுக்களுடன் சத்தமாக இருக்கும் பாடல்கள் சீக்கிரம் மறைந்துவிடும். ஆனால், மெலடிகள் மறையாது.
வாவ் தமிழா: இப்போது எல்லோரும் பாடுகிறார்கள். இசை பயிற்சி பெறாதவர்கள் கூட பாடகர்களாக இருக்கிறார்கள். எப்படி பார்க்கிறீர்கள்?
மதுஸ்ரீ: எல்லோருக்கும் பாடுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், பாடகர்களாக விரும்புபவர்கள் இசை கற்பது நல்லது
வாவ் தமிழா: தொழில் நுட்பம் பாடகர்களுக்கு கை கொடுக்கிறதா? சுருதி சேர்வதற்கு கூட தொழில்நுட்பம் வந்துவிட்டதே.
மதுஸ்ரீ: சுருதியை சரி செய்யலாம். எஃபெக்ட்ஸ் சேர்க்கலாம். ஆனால், இசை இதயத்திலிருந்து வருகிறது. அதன் ஆன்மாவை தொழில்நுட்பத்தால் சரி செய்ய முடியாது. உன் இதயத்திலிருந்து பாடினால் மற்றவர்களின் இதயத்தை அது தொடும் என்று என் தந்தை அடிக்கடி சொல்வார். இதயத்திலிருந்து பாட வேண்டும் அதுதான் முக்கியம். தொழில்நுட்பத்தால் ஆன்மாவையோ உணர்வுகளையோ கொண்டு வரமுடியாது. தமிழ் இசையமைப்பாளர்களுக்கு நன்றி. அவர்கள் என் ஆலாபனையை பயன்படுத்துகிறார்கள்.
வாவ் தமிழா: இசை தவிர உங்களுக்கு என்ன பிடிக்கும்?
மதுஸ்ரீ: எனக்கு குழந்தை மனம். கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவேன். காமெடி படங்கள் பார்ப்பேன். மற்றவர்களைப் போல் நடந்து பார்ப்பது பிடிக்கும். இப்போது நீங்கள் வெளியில் சென்றவுடன் உங்களைப் போன்று பேசிப் பார்ப்பேன்.
வாவ் தமிழா: மற்றவர்களைப் போல் இமிடேட் செய்வது உங்களுக்கு பிடிக்கிறதா?
மதுஸ்ரீ: ஆமாம். லதா மங்கேஷ்கர் பாடல்களை அப்படியே அவரைப் போல பாடுவேன். அம்மா திட்டுவார். அவரைப் பார்த்து காப்பியடித்தால் நீ பெரிய நட்சத்திரமாக வர முடியாது என்பார். சொந்தப் பாட்டு பாடு என்பார். அப்போது எனக்கு என்னுடைய பாட்டு ஒன்று இல்லை. அதனால் ஆண் பாடகர்கள் பாடலைப் பாட சொல்லுவார். அப்படி பாடினால்தான் உன் தனித் திறமை தெரியும் என்பார்.
வாவ் தமிழா: உங்கள் கணவரைப் பற்றி சொல்லுங்கள்…
மதுஸ்ரீ: அவரே ஒரு இசையமைப்பாளர். எனக்கு நிறைய சொல்லித் தருவார். அவரால்தான் இசையில் முன்னேறியிருக்கிறேன். அவர் சொல்லும் தவறுகளை திருத்திக்கொள்வேன். அவருக்கு நன்றி. மல்லிப்பூ பாடிய போது முன்பைவிட இப்போது உன் குரல் நன்றாக இருக்கிறது என்று ரஹ்மான் கூறினார். இதுவே எனக்கு ஒரு விருது. மதுஸ்ரீ சரியாக பாடவில்லை என்று சொன்னால் ஏன் அப்படி சொன்னார்கள் என்று யோசித்து திருத்திக் கொள்வேன். இது ரொம்ப முக்கியம். நான் நட்சத்திரம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எப்போதும் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். லதா மங்கேஷ்கர் அப்படிதான்.
வாவ் தமிழா: உங்களுடன் பாடியவர்கள் குறித்து கூறுங்களேன்.
மதுஸ்ரீ: என்னுடன் பாடியவர்கள் அனைவரும் சிறப்பானவர்கள், திறமையானவர்கள்.
வாவ் தமிழா : உங்கள் தேன் போன்ற குரலை எப்படி சீராக வைத்திருக்கிறீர்கள்?
மதுஸ்ரீ: என் பெயரின் அர்த்தம் தெரியுமா? மது என்றால் தேன். ஸ்ரீ என்றால் பணம். என் பெயரிலேயே இருக்கிறது.
வாவ் தமிழா: உங்கள் தேன் போன்ற குரலால் நீங்கள் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
மதுஸ்ரீ: உண்மையில் பணத்தினால் தேனை வாங்கிக் கொண்டிருக்கிறேன்.
வாவ் தமிழா: தமிழ் பாடகர்கள் குறித்து உங்கள் கருத்து? உங்களுக்குப் பிடித்த குரல் யாருடையது?
மதுஸ்ரீ: எனக்கு அனைவரையுமே பிடிக்கும். இங்கு எல்லோருமே பயிற்சிப் பெற்ற பாடகர்கள்.
வாவ் தமிழா: உங்கள் குரல் இளம் வயது ஜானகி குரலை நினைவுப்படுத்துகிறது.
மதுஸ்ரீ: இது பெரிய பாராட்டு. ரொம்ப நன்றி.