யோகி
உலகம் முழுவதும் எல்லா மனிதர்களிடமும் மாறாத தினமும் மேற்கொள்ளும் கடமைகள் என்று சில இருக்கின்றன. அதில் ஒன்று தேநீர் அல்லது காப்பி அருந்துவது. மலேசியா மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா? மலேசியாவில் பிரபலமான தேயிலை பிராண்ட்கள் BOH, CAMERON VELLEY TEA. மலேசியாவில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த இரண்டில் ஒரு பிராண்ட் நிச்சயம் இருக்கும். மேலும், இந்த இரண்டு நிறுவனங்களின் தேயிலைத் தோட்டங்களும் மலேசியாவின் பிரபலமான சுற்றுலா தளமான கேமரன் மலையின் அடையாளங்களும்கூட.
நான் கேமரன் மலைக்கும் இந்த இரண்டு தேயிலை தோட்டங்களுக்கும் பலமுறை சென்றிருக்கிறேன். அண்மையில் மீண்டும் சென்றேன். மலேசியாவின் மத்திய மலைத் தொடரில் பகாங் மாநிலத்தில் இந்த மலைப் பிரதேசம் அமைந்துள்ளது. வருடம் முழுவதும் குளிராகவே இருக்கும்.
அண்மையில் சென்றபோது எங்கள் வாகனம் தாப்பா (Tapah) வழியாக கேமரன் மலைக்கு சென்றது. மலேசியாவின் பேராக் மாநிலத்தில் வளர்ச்சி பெற்று வரும் ஒரு சிறிய நகரம், தாப்பா. இங்குள்ள நன்னீர் ஏரிகளில், தாப்பா எனும் ஒரு வகையான ‘மயிரை மீன்’ அதிகமாக காணப்பட்டதால் அந்த மீனின் பெயரே இந்த நகரத்திற்கு வைக்கப்பட்டது என்கிறார்கள். வேறு ஒரு பெயர்த் தோற்றத்தையும் உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள். முன்பு ஓரு காலத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்ந்தனர். பிரச்சினைகள் வந்தால் விட்டுக் கொடுத்துப் போய்விடுவார்களாம். அவ்வாறு விட்டுக் கொடுத்துப் போகும் தன்மைக்கு ‘திடாப்பா’ (Tiada Apa) என்று பெயர். இது மலாய் சொல். இதிலிருந்து ‘தாப்பா’ என்ற சொல் உருவாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தாப்பாவிலிருந்து கேமரன் மலையை நோக்கி பயணிக்கும் சாலை ஓரத்தில் அமைந்திருக்கிறது ‘கேமரன் வேலி’ நிறுவனத்தின் தேநீர் கடையும் நினைவு பரிசு கடையும். ஒரு நீண்டப் பயணத்திற்குப் பிறகு வரும் இந்த தேநீர் கடையை கண்டதுமே தேநீர் பிரியர்களால் அமைதிகொள்ள முடியாது. இங்கு தேநீர் அருந்திவிட்டு பயணத்தை தொடர்ந்தோம். வழியெங்கும் ‘கேமரன் வேலி’ தேயிலைத் தோட்டத்தின் பிரமாண்ட அழகு பின்னோக்கி ஓடியது.
கேமரன் மலையின் வரலாற்றையும் தெரிந்துக்கொள்வது இந்த பயணத்தை இன்னும் சிறப்பாக்கும். எனவே, கொஞ்சம் பிளாஷ்பேக்…
மலாயாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார் காலத்தில் 1885ஆம் ஆண்டில் இருந்து கேமரன் மலை வரலாறு தொடங்குகிறது. பிரான்ஸ் நாட்டில் பிறந்து, ராணுவத் துறையில் அதிகாரியாக பணியாற்றிய வில்லியம் கார்டன் கேமரன் என்பவருக்கு, மலாயா தீபகற்ப திதிவாங்சா மலைத் தொடரை வரைபடமாக்க பிரிட்டிஷ் கவுன்சில் உத்தரவிட்டது. அவர் மலாயாவுக்கு வந்தார்.
இதற்காக 1885இல் மேற்கொண்ட பயணத்தின் போதுதான் அவரும் அவரது குழுவினரும் இந்த அழகிய மலைப் பகுதியைக் கண்டுபிடித்தனர். உயரமான மற்றும் தாழ்வான சமவெளியைக் கண்டறிந்த ஆய்வுக் குழுவினர் அந்தச் சதுக்கம் சுவாரஸ்யமாகவும் வளர்ச்சியடையக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்டதாகவும் இருப்பதை அறிந்தனர். ஆனால், இயற்கையின் கண்ணாமூச்சி ஆட்டத்தால் கேமரன்னாலும் அவரது குழுவினராலும் இப்பகுதியின் உண்மையான இருப்பிடத்தை துல்லியமாக பதிவு செய்ய முடியவில்லை. மாறாக, அங்கு செல்வதற்கான வழியை மட்டுமே வில்லியம் கேமரன் பதிவு செய்தார். வரலாற்றில் முதன்முதலாக அதைப் பதிவு செய்ததற்காக அவரின் பெயரையே இந்த அழகிய மலைக்குச் சூட்டினார்கள். அதற்கு முன்பு ‘ஹில் ஸ்டேஷன்’ என்று மட்டுமே இம்மலை அழைக்கப்பட்டு வந்தது.
மலைத்தொடரை வரைபடமாக்கும் பணி அந்தக் காலக்கட்டத்தில் சுலபமாக நடக்கவில்லை. காரணம், இப்போது நாம் பயணிக்கும் சாலைகளோ தேயிலை தோட்டங்களோ அதில் பணிபுரியும் மனிதர்களோ இல்லாமல், விலங்குகள் வாழும் வனம் மட்டுமே அப்போது இருந்தது. வில்லியம் கேமரனுக்கு உதவியாக குலோப் ரியாவ் (Kulop Riau) என்பவரும் உடன் இருந்தார். இருவரும் தன் குழுவினருடன் பலமாத காலங்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த வரைப்படமாக்கும் பணியில், ஆராய்ச்சிக்கும் வரைப்படத் திட்டத்திற்கும் தேவையான பொருள்கள் மற்றும் பலமாதப் பயணத்திற்கு தேவையான உணவு பொருள்கள், உடமைகள் அனைத்தையும் சுமந்து செல்ல யானைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.
அவர்கள் தொடக்கத்தில் தஞ்சோங் ரப்புத்தானின் என்ற பகுதியிலிருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கியிருக்கின்றனர். இப்பயணத்தின் போதுதான் கிந்தா ஆற்றினையும் கண்டு ஆய்வுக்கு உட்படுத்தினர். அதன் வழியாக சென்று கிந்தா ஆறு உற்பத்தியாகும் கிணறுக்கொண்ட மலையை முதன்முதலில் கண்டுபிடித்தனர்.
கிந்தா ஆறு, நாங்கள் வந்த வழியில் உள்ள தாப்பா நகரம் அமைந்திருக்கும் பேராக் மாநிலத்தின் ஈப்போவாசி மக்களுக்கு மிக முக்கியமான ஆறு. மலையில் உற்பத்தியாகும் ஆறு ஈப்போ வழியாக பயணித்து பேராக் ஆற்றில் சங்கமிக்கிறது. அம்மாநில விவசாய நிலங்களுக்கு இந்த ஆற்று நீரின் பங்கு மிகத் தேவையானது.
சரி, வில்லியம் கேமரன் காலத்துக்கு செல்வோம். நீண்டப் பயணத்திற்குப் பிறகு அவரது குழு மலையின் உச்சியை அடைந்தனர். அங்கிருந்து பலவித மலைமுகடுகளை வில்லியம் கேமரன் பதிவு செய்தார். அதோடு கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் ஒரு சதுக்கப் பகுதியையும் கண்டுப்பிடித்தார். ஆனால், கடுமையான குளிரின் காரணமாக அவரால் அப்பகுதியை துல்லியமாக பதிவு செய்ய முடியவில்லை. அக்காலத்தில் 8 முதல் 25 செல்சியஸ் குளிர் இருந்துள்ளது. 1920ஆம் ஆண்டு அந்த சதுக்கப் பகுதி மீண்டும் அடையாளம் காணப்பட்டு, ‘கேமரன் ஹைலேண்ட்ஸ்’ என்று அவரது நினைவாக பெயர் சூட்டப்பட்டு, இன்று வரை அப்படியே அழைக்கப்படுகிறது. அந்த சதுக்க பகுதிக்கும் நாங்கள் சென்றோம்.
வில்லியம் கேமரன் கண்டுபிடிப்புக்கு பின்னர் குளிர்ச்சியான இந்த மலைப்பகுதியை திருத்தி ஆங்கிலேயர்கள் தங்களின் விடுமுறைக்கான ஓய்வு இடமாக பயன்படுத்த தொடங்கினர். அதற்காக அவர்களின் பாரம்பரிய கட்டுமான வடிவில் பங்களாக்களையும் தேவாலயங்களையும் சொகுசு வீடுகளையும் மலை மேல் கட்டினர். தொடர்ந்து, தேநீர் பிரியர்களான ஆங்கிலேயர்கள், தேயிலை தோட்டம் அமைக்க கேமரன் மலை சிறந்த இடம் என்று கண்டு அங்கு தேயிலைத் தோட்டம் அமைப்பதற்கான வேலைகளையும் தொடங்கினர்.
பிரிட்டிஷ்காரர்களான ஜே.ஏ. ரஸ்ஸல் (J.A. Rusell), அவரது சகாவான ஏ.பி. மில்னே (A.B. Milne) இருவரும்தான் முதன்முதலாக கேமரன் மலை தேயிலை சாகுபடிக்கு ஏற்ற இடம் என்பதை கண்டறிந்து அதற்காக விண்ணப்பம் செய்தனர். அதன் முன்பே மில்னே இலங்கையில் தேயிலைத் தோட்ட நிர்வாகியாக வேலைசெய்து அனுபவம் பெற்றிருந்தார். ரஸ்ஸலும் சாதாரணமானவர் இல்லை. மலாய் மற்றும் சீன மொழியைப் பேசக்கூடிய ஆற்றல் கொண்ட இவர் சீனர்களை கூலிகளாகக் கொண்டு ஈய வியாபாரமும், தமிழர்களைக் கூலிகளாகக் கொண்டு ரப்பர் வியாபாரமும் செய்திருக்கிறார். உலகளவில் இவ்வியாபாரங்களுக்கு பெரும் மந்தநிலை ஏற்பட்டபோது இவர் தேயிலை தொழிலில் ஈடுபட முடிவு செய்தார்.
கேமரன் மலையில் தேயிலை சாகுபடிக்கான ஆரம்ப நடவடிக்கைகள் 1920களில் இருந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நடைபெற்றுள்ளன. கேமரன் மலையின் அழகிய கன்னிக்காடு அழிக்கப்பட்டு மலேசியா நாட்டின் முதல் தேயிலைத் தோட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக தேயிலைப் பயிர்கள் இந்தியாவில் இருந்துதான் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் நாமக்கல் வட்டாரப் பகுதிகளில் இருந்து 1920 முதல் 1950க்குள் ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்களை கேமரன் மலையில் உள்ள தேயிலைத் தோட்டங்களை உருவாக்க அழைத்து வந்துள்ளனர். அவர்களால் உருவாக்கப்பட்டவைதான் கேமரன் மலையில் இன்று நாம் பார்க்கும் அனைத்து தேயிலைத் தோட்டங்களும்.
அக்காலத்தில் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு ஸ்டீம்ரோலர், சில கழுதைகளைப் பயன்படுத்தி, செங்குத்தான பாறைகள் மற்றும் கன்னிக் காடுகளை சீர்செய்து, திருத்தி மலைப் பகுதிகளை தேயிலை தோட்டங்களாக தமிழர்கள் மாற்றினர். அவர்கள் தங்குவதற்காக மலை மேல் ஊர்களும் உருவாகின.
தரமான தேயிலையை பெற தேயிலைக் கொழுந்துகளை பார்த்து பார்த்து கையிலேயே பறித்திருக்கிறார்கள். முதுகில் சுமந்திருக்கும் பிரம்பால் செய்யப்பட்ட கூடையில் அல்லது கோணியில் கிள்ளிய தேயிலைகள் சேகரிக்கப்பட்டு மலையிலிருந்து கீழே இறக்கவேண்டும். அனைத்தும் மனித உழைப்புதான். குடும்பம் குடும்பமாக ஆண்-பெண் இருவருமே குறைந்த சம்பளத்தில் கடுமையாக உழைத்துள்ளார்கள். எல்லா நாடுகளிலும் நடந்ததுபோல் கஷ்டங்கள், அடிப்படை தேவைக்கான போராட்டம் ஆகியவற்றை இங்கிருந்த தமிழ் தொழிலாளர்களும் அனுபவித்துள்ளார்கள். சமயத்தில் விஷ ஜந்துக்களால் மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன.
இப்போது நாங்கள் பார்த்தபோது தொழிலாளர்கள் பெரிய பெரிய கத்தரிகளைக் கொண்டு தேயிலை இலைகளை வெட்டியெடுத்தார்கள். இடையில் கொஞ்ச நாட்கள் இயந்திரத்தை பயன்படுத்தியதாக சொன்னார்கள்.
1929ஆம் ஆண்டு BOH என இந்தத் தோட்டத்துக்கு பெயர் சூட்டப்பட்டு இன்றுவரை அப்பெயரிலேயே அழைக்கப்படுகிறது. BOH என்றால் மாண்டரின் மொழியில் ‘விலைமதிப்பற்ற மகிழ்ச்சி’ என்று பொருள்.
ஆனால், பெயர் சூட்டப்பட்ட 4 ஆண்டுகளில் அதன் தோற்றுனர், தனது 50ஆவது வயதில் சிங்கப்பூரில் காசநோயால் இறந்தார். அவரின் மனைவியான கேத்லீன் நிதிச் சிக்கல்கள் இருந்தபோதிலும் BOH நிறுவனத்தை தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்தார். அவரின் முயற்சி வீணாகவில்லை. ஆனால், இரண்டாம் உலகப் போரின் போது தேயிலைத் தோட்டம் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அக்காலக்கட்டத்தில் பராமரிப்பு இல்லாமல் தோட்டங்கள் கைவிடப்பட்டது. இதனால், மலாயா அவசரநிலையின் போது, கேமரன் மலையை தங்களின் முதன்மையான பதுங்கு மண்டலமாக பயன்படுத்திக்கொள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு வசதியானது.
இந்நிலையில்தான் ரஸ்ஸலின் மகன் டிரிஸ்டன் தனது 21வது வயதில் குடும்பத் தொழிலை கையில் எடுக்கிறார். தோட்டங்களைச் சுற்றி பாதுகாப்பு துருப்புக்கள் நிறுத்தப்பட்டன. தோட்டத்தையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் முயற்சிக்கு அது உதவியது.
மலேசியா சுதந்திரம் பெற்றபிறகு, பல பிரிட்டிஷ்காரர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். ஆனாலும், BOH-வின் ஸ்தாபகக் குடும்பம் மலேசியாவிலேயே தங்குவதற்கு முடிவு எடுத்தனர். இந்தியாவிலிருந்து கூலியாக வந்த தமிழர்களாலும் பல்வேறுக் காரணங்களால் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. எனவே, நிரந்தர குடியேற்றவாசிகளாக அவர்கள் மலாயாவிலேயே தங்க முடிவெடுத்தனர். அவர்களுக்காக BOH நிறுவனம் தமிழ் பள்ளிகள் மற்றும் கோயில்களை கட்டிக்கொடுத்துள்ளனர். அப்படி தொடங்கப்பட்ட BOH தமிழ்ப் பள்ளி பிரிவு 1, பிரிவு 2 இரு பள்ளிகளையும் தற்போது மலேசிய அரசாங்கமே எடுத்து நடத்துகிறது.
ஆனால், இப்போது தேயிலைத் தோட்டங்களில் ஒரு சில தமிழ் குடும்பங்களே உள்ளன. சீனா, வங்காளம், இந்தோனிசியா, நேபாளம், மியான்மர் நாட்டினரே அதிகம் உள்ளனர். இவர்கள் கேமரன் மலையில் உள்ள தேயிலைத் தோட்டங்கள், பூந்தோட்டங்கள், விவசாய நிலங்களில் வேலை செய்வதுடன் நிலங்களை குத்தகைக்கு எடுத்து சொந்தமாக விவசாயமும் செய்கின்றனர். மினி மார்க்கெட், உணவகம், தங்கும் விடுதி போன்ற பலவகை வர்த்தகங்களிலும் ஈடுபட்டு வசதியாக உள்ளனர். தமிழர்கள் குறைந்ததால் BOH தமிழ்ப் பள்ளி பிரிவு 1இல் 4 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். பிரிவு 2 பள்ளியில் பூர்வகுடி மாணவர்கள் தமிழ் படிக்கின்றனர்.
இப்போது BOH பிராண்ட் தேயிலை மலேசியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. ரஸ்ஸலின் பேத்தி கரோலின் ரஸ்ஸல் நிறுவனத்தின் ஸ்தாபகராக இருக்கிறார். இவர் மலேசியாவில் பிறந்தபடியால் BOH நிறுவனம் ஒரு மலேசியருடையது என்று நாடு பெருமையாக கூறிக்கொள்கிறது. பயண வழிகாட்டிகளும் இப்படி கூறித்தான் BOH தேயிலை தோட்டத்தை அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். நீங்கள் வரும்போது ஏமாறக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வரலாற்றை சொல்லி வைக்கிறேன்.
மலேசியாவின் இன்னொரு பிரபல தேயிலை பிராண்டான ‘கேமரன் வேலி’ ஒரு இந்தியருடையது. ரிங்லெட்டில் இருந்து தானா ராதா செல்லும் பிரதான சாலையில் உள்ளது இவர்களது ‘பாரத் தேயிலை தோட்டம்’. இதன் தோற்றுனர் சுபர்ஷத் பன்சால் அகர்வால் வட இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலமான ஆக்ராவைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் 1910ஆம் ஆண்டு வணிகம் செய்ய மலேசியாவிற்கு வந்தவர், தைப்பிங் நகரிலிருந்த அவரது மாமாவின் மளிகைக் கடையில் வியாபாரத்திற்கு உதவினார். பின்னர் ஒரு ரப்பர் தோட்டத்தை வாங்கி சில்லறை வணிகத்தை நடத்தினார். பின்னர் கேமரன் மலையை தெரிந்துக்கொண்டவர் 1933ஆம் ஆண்டு, பாரத் நிறுவனத்தை தொடங்கி, தேயிலைப் பயிரிட்டு, தேயிலை இலைகளை அருகிலுள்ள தொழிற்சாலைகளுக்கு விற்பனைச் செய்தார். இரண்டாம் உலகப் போர் மற்றும் ஜப்பானிய ஆக்கிரமிப்பை இந்நிறுவனமும் எதிர்கொண்டது.
சுபர்ஷத் பன்சால் அகர்வால் மறைவுக்கு பின்னர் அவரது மகன் பிரிஜ்கிஷோர் தேயிலை தொழிற்சாலையின் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றார். இவர் குடும்ப ஆட்களை பங்காளிகளாக வியாபாரத்தில் சேர்த்துக்கொண்டார். அவர்களின் கூட்டு வியாபாரம் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. படிப்படியாக முன்னேறி இன்று மலேசியாவில் வெவ்வேறுப் பிரிவுகளில் மொத்தம் எட்டு நிறுவனங்களை பாரத் குழுமம் கொண்டுள்ளது. பிரிஜ்கிஷோர் 2006ஆம் ஆண்டு காலமானார். அவரது மகன்கள் டத்தோ கேசவ், டத்தோ வினோத் ஆகியோர் இப்போது பாரத் குழுமத்தை இயங்கி வருகிறார்கள். இவர்களது தேயிலையும் மலேசியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டுச் சந்தைகளிலும் வெற்றிகரமாக சந்தைபடுத்தப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட, ‘சிலோன்’ என்று பெயர் பொறிக்கப்பட்ட தேயிலைப் பதப்படுத்தும் நிராவி உருளை (Steamroller) இன்றும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடக்ககாலப் புகைப்படங்களையும் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அவற்றின் மூலம் அக்காலத்தை அறிந்துகொள்ளலாம். பயணிகளுக்காக தேயிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கும் வைத்திருக்கிறார்கள்.
தேயிலைத் தோட்டங்களுக்காகவும் விவசாயத்திற்காகவும் மலையில் பெருமளவு காடுகள் சூரையாடப்பட்டு விட்டதால் வில்லியம் கார்டன் கேமரன் பார்த்த அழகும் பொலிவும் இப்போது இல்லை. சீதோஷன நிலையும் பாரிய அளவில் மாற்றமடைந்து விட்டது. என்றாலும் வெளிநாட்டு பயணிகள் இந்த தேயிலைத் தோட்டங்களுக்காகவும் எஞ்சியிருக்கும் சிறிய அளவிலானக் காட்டில் மலையேறவும் வருகிறார்கள்.